Advertisement

மாணவர்கள் சிந்தனையை தூண்டும் பாடத்திட்டம் தேவை!

மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கு கல்வி புகட்டி, அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கி, வாழ்க்கையில் மேன்மையடைய செய்வது தான் கல்வியின் நோக்கம். ஆனால், இக்காலத்தில் தனி மனித பொருளாதார முன்னேற்றத்திற்கு துணை புரியும் ஒரு கருவியாக மட்டுமே, கல்வி கருதப்படுகிறது.

​பிறர் பதிலைக் கேட்டு, அறிவை பெறுவது மட்டு மன்று கல்வி. மாணவனைத் தானாகவே பதிலைக் கண்டறிய செய்வது தான் கல்வி. இக்காலத்தில், வேலைக்கு செல்வதற்காக தான் கல்வி என்ற நிலைக்கு வந்துவிட்டோம்!

இக்காலத்தில் ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வி, மாணவர்களுக்கு முறையாகக் கிடைக்கவில்லை. மனப்பாடத்திற்கும், நினைவாற்றலுக்கும் முதலிடம் தரும் கல்வி முறையில் அதிக மதிப்பெண் பெறும் மாணவரே, அறிவாளியாக கருதப்படுகிறார்.பட்டங்களை மட்டுமே வழங்கும் மையங்களாக கல்வி நிறுவனங்கள் மாறியுள்ளன. கல்வியின் தரத்தை மேம்படுத்த, பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை. ஆனால், பாடத்திட்ட மாற்றம் என்ற போர்வையில், சிலப்பதிகாரத்திற்கு பதிலாக மணிமேகலையை அறிமுகம் செய்வது போன்ற பாடங்களின் மாற்றங்கள் தான் பல பாடப்பிரிவுகளில் அரங்கேறியுள்ளன.

இக்காலத்தில், பெரும்பான்மையான பள்ளிகளில் மொழிக்கல்வி, விழுமியக்கல்வி, உடற்பயிற்சிக் கல்வி ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, பாடத்திட்டம் வெறும் மதிப்பெண் பெற வைக்கும் பாடத்திட்டமாக மட்டுமே அமைந்துள்ளது. எதிர்மறை எண்ணங்கள், பயம், வேதனை, கோபம், வெறுப்பு, வன்முறை உணர்வுகள் போன்ற வற்றை தோற்றுவிக்காத பாடங்களை கொண்ட பாடத்திட்டம் தான் மாணவர்களுக்கு தேவை.

பாடத்திட்டத்திற்குள் முடங்கி விடாமல், புதிய தேடுதல்களை கண்டறியும் வகையிலும் வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கும் ஆற்றல்களை பெற்றிடும் வகையிலும், நமக்கென தனியாக கல்விமுறை அமைய வேண்டும்.மாணவர்களின் கல்வித்தர வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம், தாய்மொழி வழிக்கல்வி முறையை புறக்கணிக்கும் போக்கு. இதனால், மாணவர்களிடம் சுயசிந்தனைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் இடமில்லாமல் போய்விடுகிறது.

தாய் மொழியின் மீது ஆர்வம் இல்லாதவன், தன்னம்பிக்கையையும், சிந்தனை வளத்தையும் இழந்து, அடிமை வாழ்வுக்கு ஆயத்தமாகிறான். தாய்மொழி கல்வியின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாததால், ஆங்கில வழிக்கல்வி மீது பெரிதும்நாட்டம் கொண்டு உள்ளோம். ​தாய்மொழியை பயிற்று மொழியாக கொண்டால் கல்வித்தரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கி விடுவோம் என, கருதுகிறோம்.

மொழிக்கல்விக்கு முதலிடம் அளிக்காததால், பள்ளியில், 12 ஆண்டுகள் தமிழும் ஆங்கிலமும் கற்ற பிறகும், இம்மொழிகளை மாணவர்களால் பிழையின்றி பேசவோ, எழுத வோ முடியவில்லை. மொழியில் ஆளுமை இல்லாத நிலையில், இம்மொழி வாயிலாகக் கற்கும் பாடங்களில் புத்தாக்கத் திறன் எப்படி உருவாகும்?

தாய் மொழியில் ஆளுமை இருந்தால் தான், பிற மொழிகளில் ஆளுமை பெற முடியும்!வாழ்க்கையின் ஓட்டத்திற்கு, தாய் மொழி தடைக்கல் என, நினைப்பவர்களுக்கு, தாய் மொழியை இழந்தால் வாழ்க்கை சிதைந்து போகும்; மொழி ஓர் இனத்தின் அடையாளம்; அது ஒரு பண்பாட்டுக் கூறு; அறிவுத் துறைகளைக் கைப்பற்ற தாய்மொழிக்கல்வி தேவை என்பதையும் மொழி அறிஞர்கள் எடுத்து இயம்ப வேண்டும்.ஒரு சமூகம் பேசும் மொழியில் அறிவு வெளிப்படவில்லை என்றால், அந்த சமூகத்தின் கலாசார வாழ்வியலில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் போய் விடும்.

தாய் மொழிக்கல்வி அறிவியல் முறையில் அமைந்தால், எதிர்காலச்சந்ததியினருக்கு தாய் மொழி முறையாகச் சென்றடையும்.மாணவர்களின் கல்வித்தரம் மேன்மை பெறுவதில், வகுப்பறைச் சூழலும் பெரும் பங்கு வகிக்கிறது. வகுப்பறையில் அறிவு சார்ந்ததும், வாழ்வியல் நெறி சார்ந்ததும் செய்திப் பகிர்வுகள் இடம் பெறாமல், பாடத்திட்டம் மட்டுமே நிலை கொண்டு உள்ளது.பாடம், தேர்வு, மதிப்பெண் ஆகிய மூன்றும் தான், வகுப்பறையின் தாரக மந்திரமாக அமைந்துள்ளன. கல்வியைச் சுகமான உணர்வாக மாற்றும் ஆற்றல் மிக்க ஆசிரியர்கள் தான் பெரிதும் தேவைப்படுகின்றனர்.

மாணவர்கள் மனம் கவரும் வகையில் வகுப்பறைகள் அமைய ஆசிரியர்களே புதிய யுக்திகளை உருவாக்க வேண்டும்.​நமக்காக தான் ஆசிரியர்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வியை இனிமையான அனுபவ பகிர்வாக மாற்றும் வகுப்பறைகள் அமைய வேண்டும்.உயர்ந்த பதவி, சிறந்த ஊதியம், நிறைய பட்டங்கள், சமூக மதிப்பு ஆகியவற்றை பெற்று விட்டால் மட்டுமே வாழ்க்கை நிறைவுறாது என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புரிய வைக்க வேண்டும்.வாழ்வின் சவால்களை வெற்றி கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளித்து மாணவர்களை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும்.

நம் தேர்வு முறையால், மாணவர்கள் மன அழுத்தம், போட்டி, பொறாமை, தவறான வழிகளை பின்பற்றுதல் போன்றவற்றிற்கு ஆளாவதாக கருதப்படுகிறது. எதிர்பார்த்த கேள்விகள் வினாத்தாளில் இடம் பெறா விட்டால், கடினமான தேர்வாக கருதுவதும், கருணை மதிப்பெண்களை எதிர்பார்ப்பதும் நம் நிலையை சுட்டிக் காட்டுகிறது. எனவே, கற்பித்தல் நெறி, வகுப்பறை சூழல், தேர்வு முறை, மதிப்பீட்டு முறை ஆகியவற்றில் மாணவர்கள் மனம் நிறைவுறும் வகையில், தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டும்.

இன்றைய இயந்திர வாழ்க்கை முறையில், பல மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இன்னும் சில பெற்றோர் வாழ்வியல் முறை, பிள்ளைகளின் வருங்காலத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.வாழ்க்கைக்கு வேண்டியஅடிப்படை அறநெறி களைப் புகட்டி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய மின்னணு ஊடகங்களில் சில, கல்வி பயிலும் காலத்தில், எதிர் பாலின நட்பை பெறுவதையே வாழ்வியல் நெறியாகச் சித்தரித்து, அவர்களை மன நோயாளிகளாக மாற்றுகின்றன.

மேலும் சில மின்னணு ஊடகங்களும், சில இணையதளங்களும் பாலுணர்வை துாண்டி, மாணவர்களின் நேரம், ஆற்றல், வாழ்க்கை நெறி ஆகியவற்றை சிதைக்கின்றன.பெற்றோரும், ஆசிரியர்களும் வாழ்வியல் நடத்தை நெறிகளை புகட்டாமையால், திரையுலகமே பல மாணவர்களுக்கு வேதமாக தென்படுகிறது. கல்விச்சந்தையில் மாணவர்கள் மீது முதலீடு செய்யும் பெற்றோர், வீட்டுப்பாடங்களை கூட அவர்களே செய்து, மாணவர்களைத் துாங்க வேண்டிய நேரத்தில் துாங்க விடாமலும், உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணவிடாமலும் சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர்.

குடும்பச்சூழலை பிள்ளைகளுக்கு தெரிய விடாமல், ஆடம்பர வாழ்வை அள்ளித்தரும் பெற்றோரை, பிள்ளைகள் கடைசி காலத்தில் காப்பாற்ற மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.பல பெற்றோர், பிள்ளை களிடம் மேலாண்மையை இழந்து நிற்பதால், பிள்ளைகள் ஒழுக்கத்தை இழந்து நிற்கின்றனர்.நம் நாட்டில் மாணவப் பிள்ளைகள் பெற்றோரின் மூலதனம் என்பதால், கல்வி பயிலும் காலத்தில் பாலின நட்பிற்குத் தடை விதிப்பதால் பெற்றோர், பிள்ளைகள் உறவு சிதைந்து போகிறது.

​பண்பாட்டு சீர்குலைவு பெரிதும் காணப்படும் ஒரு சமூக அமைப்பில் மாணவர்கள் மட்டும் ஒழுக்க மாக வாழ வேண்டும் என, எதிர்பார்ப்பதும் வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒழுக்க நெறியைப் புகட்டி, அவர்களை நல்வழிப்படுத்துவதும், நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற கருத்தாக்கம் கல்வியாளர்களிடையே காணப்படுகிறது. எனினும், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் உறுதியாக இது சாத்தியமாகும். எத்தனையோ நல்ல பல திட்டங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ள நம் அரசு, தணிக்கை செய்ய வேண்டியதை தணிக்கை செய்தும், தடைசெய்ய வேண்டியதை தடை செய்தும், எதிர்கால சந்ததியினரின் கல்வியையும், வாழ்க்கையையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்!

பண்பாடு சிதையாமல் மாணவர்கள் பண்பட, பாதை சமைக்க வேண்டிய ஆசிரியர்களும், புனித வாழ்வு புளித்து போனால் மனித வாழ்வு மக்கிப்போகும் என்பதை உணர்ந்து வாழ வேண்டிய தலைமுறைக்கு, தங்களை வாழ்ந்து காட்டுபவர்களாக பெற்றோர் மாற வேண்டும். மாறாக, சாதிக்க வேண்டிய வயதில், சல்லாபத்திற்கு இடம் கொடுக்காமல் உழைத்து பெற வேண்டியதை, உட்கார்ந்து பெற முடியாது என்பதை மாணவர்களும் உணர வேண்டும். மாணவர்களும் அரசின் துணையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் நிலையில், இளைய தலைமுறையினரின் கல்வித்தரமும், வாழ்வியல் நெறியும் மேம்பட்டு, எதிர்காலம் ஒளிமயமாக அமையும்!

பேராசிரியர்ஏ.ஆதித்தன் சென்னைத் தலைவர் மொழியியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் இ-மெயில்: ling_mku@yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement