Advertisement

உயிர்ப்புடன் உள்ள, 'ஆப்பரேஷன் தாமரை!'

கடந்த சனிக்கிழமை மாலைப்பொழுது, வழக்கமானதாக இல்லை. ஜெ., நினைவிடத்தில், ஓ.பி.எஸ்., மவுன விரதம் துவக்கிய நாளில் இருந்து, 'பிரேக்கிங் நியூஸ்' எதிர்பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையானதாலோ என்னவோ, கர்நாடக சட்டசபையில், எடியூரப்பா நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரவிருந்த அந்த நாள், அத்தனைபரபரப்பை கிளப்பியிருந்தது.மாலை, 4:00 மணி; உச்சகட்ட பரபரப்பில் இருந்த, 'விதான் சவுதா'வை, கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த போது, சபையில், திடீரென விழி கசிந்தார் எடியூரப்பா. 'கர்நாடக மக்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்' என, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பேசினார். 'பதவியை தான் இழக்கிறேன்' என, சபையோருக்கு புரிய வைத்தார்; புறப்பட்டார்.அப்போது வரை, 'ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் எடியூரப்பா' என, குற்றம் சாட்டியசாமானியர்கள் மனதை, 'அய்யோ பாவம்...' என, வருந்த வைத்தார்.சரி, எடியூரப்பா ராஜினாமா செய்து விட்டார்; குமாரசாமி இன்று பதவி ஏற்கப் போகிறார். இதில், வென்றது யார் என, கேட்டால், 'நாங்கள் தான்' என்கிறது, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி. ஆனால், 'தோல்வியை ஒப்புக்கொண்டு, எங்கள் மனதை வென்று விட்டார் எடியூரப்பா' என்கின்றனர் கர்நாடக மக்கள்.பா.ஜ., கட்சியினரோ, 'நம்பிக்கை ஓட்டெடுப்பில், பா.ஜ., தோல்வி என்ற, தலைப்பு செய்தியை, சாதுர்யமாக தவிர்த்து விட்டார்' என, பாராட்டுகின்றனர்.உண்மை தான்; எடியூரப்பா வென்று விட்டார். கர்நாடக தேர்தல் முடிவுகள் வந்து, 104 இடங்களை, பா.ஜ., கைப்பற்றிய தினத்தில், 'வாக்குச்சீட்டு முறையில், ஒரே ஒரு தேர்தலை சந்தித்து விட்டால், தன் மீதான விமர்சனங்களுக்கு, பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்து விடலாம்' என்றார், சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே! இன்று, அத்தகைய விமர்சனம் சுக்குநுாறாய் நொறுங்கிப் போயிருக்கிறது.இனி, 'ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து தான், பா.ஜ., வெல்கிறது' என்ற, விமர்சனம் எழாது. அப்படி எழுந்தால், அதை அழுத்தமாய் மறுக்க, கர்நாடகாவில் கிடைத்த, 104 இடங்களை சாட்சிக்கு அழைக்கலாம்.இதை உறுதிப்படுத்தும் விதமாக, 'அரசியல் சாசன அமைப்புகளான உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் கமிஷன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் போன்றவற்றில், காங்கிரஸ் திடீரென நம்பிக்கை வைக்கத் துவங்கியுள்ளது. வருங்காலத்தில், தேர்தலில் தோல்வி அடைந்து, ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும், இதே நம்பிக்கை தொடரும் என்று நம்புகிறேன்' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும், நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.எல்லாம் சரி... ஆனால், அவசர அவசரமாய் எடியூரப்பா பதவி ஏற்றது ஏன்? இங்கு தான் ஒளிந்திருக்கிறது, 'ஆப்பரேஷன் தாமரை' யின் சூத்ரதாரியான அமித் ஷாவின் சாணக்கியத்தனம். 'தனிப்பெரும் கட்சி' என்ற முறையில் ஆட்சி அமைக்க, பா.ஜ.,வுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தால், பீகார், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில், 'இதே அடிப்படையில், எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்' என, காங்கிரஸ் போர்க்கொடி துாக்கும். ஒருவேளை போராட்டம் தீவிரமானால், காங்கிரஸ் விருப்பப்படியே ஆட்சியமைக்க அழைத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்கிரசை தோற்கடித்து, அவப்பெயர் ஏற்படுத்துவது தான் திட்டம்.அதேநேரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்றது தோல்வியே என்றாலும், அரசியல் தந்திரத்தால், பா.ஜ.,வை வீழ்த்தி விட்டதாக, ஒரு மாய தோற்றத்தை காங்கிரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. வெற்றி அடையாளம் மட்டுமல்ல; இது போன்ற ஒரு அடையாளம் கூட, காங்கிரசுக்கு கிடைத்துவிடக் கூடாது என, அமர்க்களமாய் காய் நகர்த்தி இருக்கிறார் அமித் ஷா.நியாய, தர்மங்களுக்கு இடமில்லாத அரசியல் சதுரங்கத்தில், இது, பாராட்டுதலுக்குரிய அற்புதமான நகர்வு!'உச்ச நீதிமன்ற விவகாரங்களில், மத்திய அரசின் தலையீடு இருக்கிறது' என்ற குற்றச்சாட்டு உட்பட, பா.ஜ.,வுக்கு எதிரான அத்தனை குற்றச்சாட்டுகளையும், 'எடியூரப்பா' என்ற, காவிரி மைந்தனின் ராஜினாமா வாயிலாக, கழுவி துடைத்து விட்டார்அமித் ஷா.'மோடியோ, அமித் ஷாவோ,எடியூரப்பாவோ... யாராக இருந்தாலும் சட்டம் ஒன்று தான்!' எனச்சொல்லி, தன் துாய்மையை நிரூபித்து, வசைபாடிய எதிர்க்கட்சிகள் வாயினாலேயே வாழ்த்து வாங்கி விட்டது,உச்ச நீதிமன்றம்.ஆக... அமித் ஷாவின் ஆட்டம் துவங்கி விட்டது. இதை உறுதிப்படுத்த, ஒரு சில சம்பவங்களை நாம் நினைவுகூர வேண்டும். அமித்ஷா, மோடியின் நண்பர். மோடியோ, பதுங்கி பாயும் வித்தை அறிந்தவர்; தன் பால்ய காலத்தில், நீச்சலில் சிக்கிய முதலைக்குட்டியை வீட்டிற்கு துாக்கி வந்து, தன் வீரத்தை காட்டியவர்!கடந்த, 1995 குஜராத் சட்டமன்ற தேர்தலில், பா.ஜ., வென்ற போது, தனக்கு அரசியல் அரிச்சுவடி பழக்கிய, சங்கர்சிங் வகேலாவை முதல்வராக விடாமல், அத்வானி ஆசியுடன்,கேசுபாய் படேலை முதல்வராக்கி, அரசியல் சகுனிகளை தன் விவேகத்தால் மிரள வைத்தவர். தற்போது, அத்வானி ஆசைப்பட்ட பிரதமர் பதவியில், சகல திறன்களுடன் கம்பீரமாய் அமர்ந்திருப்பவர்.இப்படிப்பட்டவரின் நண்பரான அமித் ஷா, 'பெரும்பான்மை கிடைக்காது... அதனால், ராஜினாமா செய்து விடுங்கள்' என, எடியூரப்பாவிடம் சொல்லியிருப்பாரா அல்லது, 'பெரும்பான்மை கிடைக்கும் வரை ராஜினாமா செய்து காத்திருங்கள்' என்று சொல்லியிருப்பாரா... தென்னகத்தில், பா.ஜ.,வை ஆட்சி சிம்மாசனத்தில் அமர்த்தி சாதித்த எடியூரப்பா, அத்தனை அரசியல் முதிர்ச்சி அற்றவரா என்ன!பா.ஜ., பதுங்குகிறது; காங்கிரஸ் அவசரப்படுகிறது. ராகுலோ பதற்றப்படுகிறார். 'இந்த தேசத்தை காட்டிலும், நீங்கள் உயர்ந்தவர் இல்லை என்பதை இனிமேலாவது புரிந்து கொள்வீர்களா?' என, மோடியைப் பார்த்து கேட்கிறார். எந்த ஓர் இடத்திலும், 'நான் தேசத்தை விட உயர்ந்தவன்' என சொல்லாத மோடியிடம், இப்படி ஒரு கேள்வியை எழுப்பியதால், தேசத்தை காட்டிலும் பெரிதாக, மோடியை தான் நினைத்துக் கொண்டிருப்பதை, ராகுல் உறுதிப்படுத்தி விட்டார்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில், 2013ல், நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில், 'பதவி என்பது விஷம் போன்றது' என, தன் அன்னை சோனியா, தனக்கு பயிற்றுவித்திருப்பதாக சொன்னவர் ராகுல். இன்று, அந்த விஷத்தை, குமாரசாமிக்கு ஊட்டிவிடப் போகிறார்.இன்றைய அந்த நிகழ்வின் போது, எடியூரப்பா முகத்தில், நிச்சயம் புன்னகை இருக்கும். காரணம், 'விதான் சவுதா' இன்னுமொரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காத்திருக்கிறது; 'ஆப்பரேஷன் தாமரை' இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!வாஞ்சிநாதன்இ - மெயில்: vanjinath40@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement