Advertisement

கிராமப்புறங்களில் சிறந்த மருத்துவமனைகள் அவசியம்!

Share

தமிழகத்தில் உள்ள சிறிதும், பெரிதுமாக தனியார் மருத்துவமனைகள்பெரு நகரங்களையும், நகர்ப்புறங்களையும் மட்டுமே சார்ந்திருக்கின்றன; கிராமப்புறங்களை எட்டிப் பார்க்கவேயில்லை.நாட்டில் 75 சதவீத மக்கள் சரியான மருத்துவ வசதிகளைப் பெறும் வழிகளை பெற இயலாமல் இருக்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் 65 சதவீத மக்கள் மருத்துவ வசதி பெறும் அளவு போதிய பொருளாதார வசதி இல்லாமல் இருக்கின்றனர். தமிழக கிராமங்கள் பலவற்றில் அடிப்படை மருத்துவ வசதியைப் பெற 25 - -30 கி.மீ., பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
தரம் மேம்படும் : இன்றும் ஏழை மக்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற அரசு தலைமை மருத்துவமனைகள் தான் சிகிச்சை அளிக்கின்றன.இவற்றுடன் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளும் சிறப்பு சிகிச்சைகளை இலவசமாக வழங்குகின்றன.முந்தைய காலம் போல இல்லாமல் அரசு மருத்துவமனைகள் இன்று போதிய அளவு மருந்துகள், உபகரணங்கள், அறுவை சிகிச்சை வசதிகள், மகப்பேறு வசதிகளுடன் செயல்படுகின்றன; மருத்துவ சேவை சிறப்பாகவே இருக்கிறது. எனவே, அரசு மருத்துவமனைகளின் சேவையை ஒட்டு மொத்தமாக குறை கூற முடியாது.இன்றைய சூழலில் சிறப்பான மருந்துகள் மட்டுமல்லாது, சிறப்பு மிக்க, தகுதி வாய்ந்த, திறமையான மருத்துவர்களின் சேவையும், அரசு மருத்துவ மனைகளில் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.எனினும் அரசு மருத்துவமனைகள் குறித்த புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. அவற்றின் அடிப்படை காரணங்களை ஆராய்ந்தால் அவை பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் தான் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.முந்தைய நாட்களில் எவ்வளவு பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும், - எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், மருத்துவ தேவைகளுக்காக அரசு மருத்துவமனைகளையே நாடினர். அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதில் ஆர்வம் இருந்தது. ஆனால் இன்று வார்டு கவுன்சிலர்கள் கூட அரசு மருத்துவமனைக்கு போவதை தகுதி குறைவாக நினைக்கின்றனர்.ஆகையால் மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் யாரும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தவோ, மக்கள் சேவையை சீர்படுத்தவோ ஆத்மார்த்தமாக நினைப்பதில்லை. ஒரே ஒரு மாதம் அனைத்து அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த மருத்துவமனைகளின் தரம் மேம்படும் என்பதை காண முடியும்.இவ்வளவுக்கும் மேலாக தகுதியும், திறமையும் வாய்ந்த சிறப்பு நிபுணர்கள் ஏராளமானோர், அரசு மருத்துவமனைகளில் தான் பணி புரிகின்றனர் என்பதும், அவர்களின் திறமை, செயல்பாடு, சாதனைகளும் தனியார் மருத்துவமனைகளைப் போல விளம்பரப்படுத்துவதில்லை என்பதும் யதார்த்தம்.
அபாயம் : ஏராளமான நோயாளிகளை கவனிக்கும் காரணத்தாலும், பெரிய அளவில் அதிக அறுவை சிகிச்சைகள் செய்வதாலும், அவர்கள் திறமை மிக உயர்ந்ததாகவே இருக்கிறது. அரசு மருத்துவமனைகள்சுத்தமாக இல்லை என்பது பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு; அதற்கு பல காரணங்கள் உண்டு.முதல் காரணம், அரசு இயந்திரத்தின் அலட்சியம்.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் மருத்துவமனையில் போதுமான கழிப்பறை வசதிகளும், தண்ணீர் வசதியும் இல்லை. இந்த பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வுகளை செய்தால் நிலைமை சீரடையும்; மருத்துவமனையும் பெருமை பெறும். இவற்றை செய்ய வேண்டியது அரசும், துறை சார்ந்த அமைச்சரும், அதிகாரிகளும் தான்! நம் மக்களின் பொறுப்பற்ற நடைமுறைகள் தான் மருத்துவமனைகள் அசுத்தமாக இருப்பதற்கு முக்கிய காரணம்.மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு; புள்ளிவிபரங்களும் இதையே உறுதி செய்கின்றன. இதற்கும் அரசு தரப்பில் திட்டமிடுதலில் உள்ள தவறுகளே காரணம்.சமீப காலம் வரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பயின்ற மருத்துவர்களில் பெரும்பான்மையினர் அரசு மருத்துவமனையில் ஆர்வத்துடன் சேர்ந்தனர்; மருத்துவர்களை ஈர்ப்பதற்காக அரசும் பல சலுகைகளை வழங்கியது. உதாரணமாக, பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகளில் அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு இருந்தது; இப்போது இல்லை. இதனால் இன்னும் கொஞ்ச நாட்களில் அரசு பணிக்கு ஆர்வமாக வரும் இளம் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறையும் அபாயம் உள்ளது.சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை அரசு பணியில் குறைந்து போகும் நிலையும் ஏற்படலாம்.
நன்மை : தொலை நோக்குப் பார்வையில் பார்த்தால் அரசு மருத்துவ பணிக்கு மருத்துவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலைவரலாம். அரசு மருத்துவ சேவையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி சேவை ஸ்தம்பிக்கும் நிலையும் வரலாம்.மேலும் அரசு பணி மருத்துவர்களுக்கு இருந்த ஓய்வூதியம் கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது என்ற குறைபாடு உள்ளது.இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகஅரசு பணியில் சேரும் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பிற்கான தேர்வுகளில், ஏதேனும் ஒரு வகையில் சலுகை அளித்து அரசு பணியில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் சேர வழி செய்ய வேண்டும். மத்திய அரசும், அரசியல்வாதிகளும் அறிந்தே செய்த மிகப்பெரிய தவறு, மருத்துவ கல்வியை தனியார் மயமாக்கியது தான். அந்த முடிவில் பெரும்பாலும் அரசியல் பெரும்புள்ளிகளின் சுயநலம் மட்டுமே உள்ளது; மக்கள் நலம் பின் தள்ளப்பட்டது.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் பலலட்சங்கள் முதல் கோடிகள் வரை பணம் செலுத்தி படித்த மாணவர்கள் அரசு பணிக்கு வருவரா என்பது மற்றொரு மிகப்பெரிய கேள்வி.அரசு மருத்துவ கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளை விட பன்மடங்கு சிறப்புவாய்ந்தவை.இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, தனியார் கல்லுாரிகளில் இல்லை என்பதும் தனியார் கல்லுாரிகளில் பணம் செலுத்தி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவ மாணவர்கள் தங்களை பரிசோதிப்பதை விரும்புவதில்லை என்பதும் யதார்த்தம்.மேலும் அரசு கல்லுாரிகளில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் தரமும் சிறப்பானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.எனவே இந்த காரணங்களால் அரசு கல்லுாரி களில் படித்த மருத்துவர்களை அரசு பணியில் அமர்த்துவது அதிக நன்மை பயக்கும்.நற்செய்திஅரசு மருத்துவமனைகளின் தரத்தையும், சேவையையும் மேன்மேலும் உயர்த்தி மக்கள் அனைவரும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் தங்கள் மருத்துவ தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளை நாடும் படி செய்வது நம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கையில் தான் உள்ளது.தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எனப்படும் உயரிய தரம் வாய்ந்த மருத்துவமனை மதுரையில் துவங்கப்படும் என்ற நற்செய்தி வந்துஉள்ளது தமிழக மக்களுக்கு வரப்பிரசாதம்.அரசு நலத்திட்டங்களை அவற்றின் நன்மை, தீமைகளை ஆராயாமல் எதிர்த்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தன்னல அரசியல் வாதிகள் மற்றும் தன்னல,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பதே பெரிய நிம்மதி!எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதன் மூலம் தென் தமிழக மக்கள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் பெற முடியும். இந்த மருத்துவக் கல்லுாரியில் ஆண்டுதோறும் 100 மருத்துவமாணவர்கள் சேர்ந்துக் கொள்ளப்படுவர். அதில் தமிழக மாணவர்களும் தங்கள் தகுதிக்கேற்ப இடம் பெறுவர்; ஆண்டுதோறும் நாட்டுக்கு 100 நல்ல மருத்துவர்கள் கிடைப்பர்.அது போலவே செவிலியர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப பணியாளர்களும் உருவாக்கப்படுவர். எய்ம்ஸ் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்ற காரணத்தால் நிர்வாகத்திலோ அல்லது நிதி மேலாண்மையிலோ அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது என்பது முக்கியமான நன்மை.சாமானிய மக்கள் தரமான மருத்துவ உதவி பெற நல்ல அரசு மருத்துவமனைகளும், எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவமனைகளும் அவசியம்; அவற்றை மனமார வரவேற்போம்!
டாக்டர் எஸ்.ஏகநாதபிள்ளைமுன்னாள் பேராசிரியர்மதுரை மருத்துவ கல்லுாரி மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை
இ - மெயில்:ahanathapillai@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Suba Ragu - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

    அய்யா அரசியல்வாதிகள் மற்றும் VIP வருகையால் மட்டும் அரசு மருத்துவமனைகள் சீர் பெறவேண்டும் என்பது தவறான கருத்து . வரி செலுத்தும் மற்றும் ஏழைகள் குடிமக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்க வேண்டியது குடியுரிமை சட்டத்தின் படி உரிமையாகும். மற்ற கருத்துக்கள் நன்றாக உள்ளன. நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement