Advertisement

பேரிடர் கற்றுத் தந்த பெரிய பாடம்!

'ஆறுகளை நீ ஆக்கிரமிக்கையில், அதற்கு மழை எனும் காதலன் உள்ளதை மறந்து விட்டாய்...' - இது மலையாள கவிதை ஒன்றில் இடம் பெற்றிருந்த வரிகள்; எந்த அளவுக்கு உண்மையான வரிகள்...பொதுவாகவே கேரளத்தவர்களுக்கு, தற்பெருமை அதிகம். உரமே போடாமல் பொன்னாக விளையும் பூமி; நினைத்த நேரத்தில் பெய்யும் மழை; அதில் நனைந்தால், உடலும், உள்ளமும் பூரிக்கும் தன்மை; எங்கு பார்த்தாலும், பச்சை பசேலென்ற இயற்கையின் பட்டுக்கம்பளம்.தண்ணீருக்கு அறவே தட்டுப்பாடு கிடையாது. ஒவ்வொரு வீட்டின் பின்புறத்திலும் குட்டி ஆறு, கால்வாய், நீர்நிலைகள்.

வீடுதோறும், கை எட்டி கோரும் அளவுக்கு குட்டி கிணறுகள்; தனி அடையாளத்தை நிரூபிக்கும், சிவந்த குண்டு அரிசி சோறு; மண் மணக்கும் கோவில்கள்; அழகு பதுமை போல பெண்கள் என, பிற மாநிலத்தவர்களை விட பல பெருமைகள் கேரளாவுக்கு உண்டு.அதனால், எந்த நாட்டுக்கு போனாலும், 'என் மலையாள நாடு போல வருமா...' என, பெருமை பேசுவதில், மலையாளிகளுக்கு நிகர் யாரும் இல்லை.அது போல, ஏராளமான நல்ல குணங்களும் அவர்களுக்கு உண்டு. 'ஓசி'க்கு பேப்பர் வாங்கி படிக்க மாட்டார்கள்; ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்தித்தாள் வாங்குவர்.

மலையாளிகள் தான் என தெரிந்தால், மலையாளம் தவிர பிற மொழிகளில் பேச மாட்டார்கள். போராட்ட குணம் மிக்கவர்கள்... என, நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.அவ்வளவு பெருமைகளையும், சிறப்புகளையும், சில நாள் மழை கெடுத்து விட்டது. ருசியாக சாப்பிட்டு, மரக்கட்டிலில் படுத்து, சுகாதாரமாக வாழ்ந்த மக்கள், இன்று, மழை, வெள்ள பாதிப்புகளால் சொல்லொண்ணா துயரை அனுபவிக்கின்றனர்.

கடவுளின் சொந்த நாடு என கூறப்படும் கேரளா, கடவுளின் சாபத்திற்கு ஆளாகி விட்டதோ என, எண்ணத்தோன்றும் வகையில், அல்லோலப்பட்டு உள்ளது.கேரளாவின் இயற்கை எழிலை பருக, உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணியர், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எட்டிப் பார்க்க மாட்டர் எனும் அளவுக்கு, நிலைமை சிக்கலாகி உள்ளது.

கேரளாவின் நீர் நிலைகளில் பெரும்பாலானவைசுற்றுலா தலங்களே. அவற்றின் எழிலை கண்டு களிக்க, அதன் கரையோரங்களில் வீடுகள் அமைத்தனர்; கொஞ்சம் கொஞ்சமாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின.இதனால், 60 ஆண்டுக்கு முந்தைய சீதோஷ்ண நிலை, நீர் நிலைகளின் வழித்தடங்கள், செழிப்பான விளைச்சல் இப்போது இல்லை என்கின்றனர், அந்த மாநில மூத்தோர்.

'லாப நோக்கத்திற்காக, விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களும், அதிகப்படியான போக்குவரத்தும் தான், சமீபத்திய பேரிடருக்கு முதன்மையான காரணம்' என, சுற்றுச்சூழல் ஆய்வாளர், மாதவ் காட்கில் குற்றம் சாட்டுகிறார்; இதற்காக பல ஆதாரங்களை அவர் காட்டுகிறார்.எனினும், பெரும்பாலான கேரள மக்களின் நம்பிக்கை, வேறு விதமாக உள்ளது. 'சாமி குத்தம் தான், இந்த பேரழிவுக்கு காரணம்' என்கின்றனர். அரசியல் காரணங்களுக்காக, சமீப காலமாக, கேரளாவில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அதாவது, சுவாமி அய்யப்பன் பெயரில், மத விரோதிகள் சிலரால், சில பெண்களால், நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது.புண்ணிய பூமியான, அய்யப்பன் சன்னிதானம், சபரிமலைக்கு என, சில விதிமுறைகள் உள்ளன. 10 வயதிற்கு மேல், 60 வயதிற்கு கீழான பெண்களுக்கு அங்கு அனுமதியில்லை; அதற்கு எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தனர்.சுவாமி அய்யப்பனை தரிசிக்க செல்பவர்கள், மது, மாது மற்றும் பிற ஆசைகளை துறந்து, விரதமிருந்து துாய்மையாக செல்ல வேண்டும். இது, காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். அதற்கு எதிராக, அய்யப்பன் பெயரில், நீதிமன்றங்களில் இழுபறி.

கேரளாவின் அடையாளமாக விளங்கும் அழகிய, பழமையான சர்ச்சுகளில் நடந்த பாலியல் அத்துமீறல்கள்; பாதிரியார்களின் மத துவேஷங்கள். மாநிலத்தின் பல பகுதிகளில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்வன்கொடுமைகள்; ஜாதி, மதம் மற்றும் கட்சி களின் பெயரில் நடந்த படுகொலைகள் போன்றவையே, இயற்கையின் சீற்றத்திற்கு காரணம் என்கின்றனர், மத நம்பிக்கை கொண்ட சிலர்.அது போல, 'குழந்தை கடத்தல்காரர்கள்' என, தவறாக கருதி, வடமாநிலத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்.

பசியால் துவண்டு போயிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனை, 'திருடன்' என, கட்டி வைத்து, அடித்து கொன்றது உள்ளிட்ட சம்பவங்கள் தான், தங்கள் மாநிலம் பேரழிவை சந்திக்க காரணம் என, ஒரு சாரார் குமுறுகின்றனர்.தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்கும் பெரியாறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என, குறுகிய நோக்கத்துடன் குழப்பங்களை ஏற்படுத்திய சமூக விரோதிகளால் பரப்பப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை, அரசியல் லாபத்திற்காக சில அரசியல்வாதிகள் கையில் எடுத்தனர்.

அதை எல்லாம் பொய்யாக்கி, பெரியாறுக்கு வெற்றி வாகை சூடிக்கொடுத்துள்ளது, இந்த பேய் மழை. இத்தனை நாள் மழையிலும், ஜம்மென்று, கம்பீரமாக இருக்கிறது, பெரியாறு அணை!'தண்ணீரில் சிக்கியவர்களை மீட்க, படகு போதுமானதாக இல்லை. ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்; இல்லாவிடில் செங்கன்னுாரைச் சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்து விடுவர்' என்ற, செங்கன்னுார், எம்.எல்.ஏ.,வின் கதறல், அந்த பகுதி மக்கள் அனுபவித்த துயரை அறிய வைக்கிறது.

செங்கன்னுார் மட்டுமல்ல, கேரளாவின் பல பகுதிகளின் சமீபத்திய நிலை இது தான். நீர் வழித்தடங்கள், மக்கள் உபயோகப்படுத்த வேண்டிய வழிகள் அல்ல என்பதை, மழையுடன் உருவான வெள்ளப் பெருக்கு உணர்த்தியுள்ளது. இயற்கையின், 'ரூட் மேப்' அதாவது, வெள்ளம் பாய வேண்டிய வழித்தடத்தை, அதுவே அடையாளப்படுத்தியும் தந்து உள்ளது.

பேரிடரில் மழை நமக்கு கற்றுத் தந்த பாடத்தை, எக்காலமும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும். மீளா துயரில் இருக்கும் மக்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும், இடையூறு செய்யாமல் இருக்க வேண்டியது, அம்மாநில மக்களின் முக்கிய கடமை. பேரிடர் காலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், யாரிடமும் ஜாதி, மதம், கட்சி கேட்கவில்லை.

மரண பயத்தில் இருந்தவர்களை, மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. இது போன்ற நல்ல மனிதர்களால் தான், இவ்வளவு பெரிய பேரிடரிலும் கேரளா நிற்கிறது.பரப்பன்னங்காடி மீனவர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சல் என்பவர், பெண்கள் உள்ளிட்ட பலரையும் மீட்பு படகில் ஏற்ற, தன் முதுகை படிக்கட்டாக மாற்றினார்.

இந்த காட்சி, சமூக வலைதளங்களில், 'வைரலாக' பரவியதுடன், பார்ப்பவர்களின் மனதையும் இளக வைத்தது.அரசின் உத்தரவுக்காக காத்திராமல், மீன் பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் தங்கள் படகுடன் வந்த திருவனந்தபுரம், கொல்லம் மாவட்ட மீனவ சகோதரர்கள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மீட்பு பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய படகுகள், கடற்படையின் மீட்புப் படகை விட பெரியது. இதனால், அதிகம் பேரை ஒரே நேரத்தில் அவர்களால் காப்பாற்ற முடிந்தது. வையனுார் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகள், ஸ்வாகா, தன் தம்பி, பிரமியுடன் சேர்ந்து, அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம், பேரிடர் காலத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அது இது தான்... 'எங்களுக்கு பணமாக தர வசதியில்லை. ஆனால், எங்களுக்காக அப்பா சம்பாதித்து வைத்திருக்கும், 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக தருகிறோம்...' என்றனர்.இந்த வார்த்தைகள், படித்து பட்டம் பெறுவது, சம்பாதிக்க மட்டுமே என நினைக்கும் சிலருக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கும்.வட மாநிலத்தவர்களுக்கு எதிராக, கேரளாவில் பல வன்முறைகள் நடந்த நிலையில், ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்காக, பிழைக்க கேரளா வந்த பீஹார் வாலிபர் ஒருவர், பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளத்திற்கு இடையே, தன்னுயிரை மதிக்காமல், ஓடிச் சென்று காப்பாற்றியது, பலரையும் உருகச் செய்துள்ளது.

பெட் ஷீட் விற்பனைக்காக கேரளா வந்த, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த அனைத்து பெட் ஷீட்களையும், நிவாரணத்திற்காக கொடுத்தது உட்பட, பல சம்பவங்கள் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது; பலரின் கண்களை திறந்தது. மொழியின் பெயரிலும், ஜாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும், கட்சியின் பெயரிலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டவர்கள், பேரிடரின் போது ஒன்றாகினர். ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி, முகாம்களில் ஒருவருக்கொருவர் உதவினர்.

'நாம் அனைவரும் சமம்' என்பதை, பேரிடர் நிரூபித்துள்ளது; மனித நேயத்தின் அருமையை உணர வைத்தது; பூமியில் இருக்கும் குறுகிய நாட்களை, நற்செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரை கற்றுக் கொடுத்துள்ளது. மொழியின் பெருமை பேசி, கலாசாரத்தை உயர்த்தி பிடித்து, பிரிவினையை கையாளாமல், 'நாமெல்லாம் பாரத தாயின் பிள்ளைகள்' என்ற உணர்வை, இந்த பேரிடர் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் நிவாரணத்திற்காக நிதி, துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேகரித்த, சேகரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகள். தாய்லாந்து குகையில் அகப்பட்ட மாணவர்களை காப்பாற்ற, இனம், மொழி பாகுபாடின்றி, உலகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனையுடன் காத்திருந்தது போல், பேரழிவின் பிடியிலிருந்து மெல்ல கரையேறும் கேரளாவிற்காக, நாம் பிரார்த்திப்போம்!

- அனு ரெக்சின்rexinrprasal@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement