Advertisement

தூங்கக் கூடாது அரசு!

அபரிமிதமாக கர்நாடகா திறந்து விட்ட நீரால், காவிரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், திருச்சி மாவட்டம், முக்கொம்பு, கொள்ளிடம் மேலணையின் மதகுகள் இடிந்து விழுந்தன; திருச்சி கொள்ளிடம் பாலமும் இடிந்தது. பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், 'பாலம் இடிந்ததற்கு, மணல் எடுத்தது காரணமில்லை' என, அவசர அவசரமாக கூறினர்.

ஆறுகளில் மணலை, அரசே கபளீகரம் செய்வது தான், மதகுகள், தடுப்பணைகளின் ஆயுள் குறைவுக்கு காரணம் என்ற உண்மையை நன்கு அறிந்த பிறகும், அதை மறைத்து, ஆற்றில் மணல் எடுப்பது பெரிய பிரச்னையே இல்லை என்ற ரீதியில், தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது; இது, சரியா?

மணல் இருந்தால் தான் ஆறு. மணலை சுரண்டி எடுத்தால், ஆறுகள் அழிந்தே போகும்; மக்கள் வாழ்வாதாரமும் பாழ்படும். இதை, அரசுகள் உணர்ந்தும், கை காசுக்கு ஆசைப்பட்டு, துண்டிக்கவில்லை!ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர் குறைந்து போனதற்கு, அளவில்லாமல் மணல் திருடப்படுவது தான் முக்கிய காரணம்.

கடலுார் மாவட்டத்தில், தென் பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் நீர் ஆதாரம், கோடை காலத்திலும் குன்றாத வளமையோடு இருந்தது ஒரு காலம்.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் தொடங்கி, கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முடியும் வெள்ளாறு, அந்த பகுதியின், கூடலையாத்துார், காவாலகுடி, பெருந்துறை, பவழங்குடி, காணுார், பேரூர், ஓட்டிமேடு, அகர ஆலம்பாடி கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. ஆனால், நீர் இருந்த அடையாளமே இல்லாமல், அந்த ஆறு இன்று சிதைக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் இருக்கும் மணல் தான், வெள்ளம் பெருகி வரும் போது, அதன் வேகத்தைக் குறைக்கிறது; ஆற்று மணல், நீரை உறிஞ்சி, நிலத்தடி நீரைச் சேமிக்கிறது. இதன் விளைவாக, ஆற்றின் கரைகளில் உள்ள கிணறுகள் ஊற்றெடுக்கின்றன; மரம், செடி, கொடிகள் தழைக்கின்றன.மக்களுக்குத் துாய்மையான குடிநீர் கிடைக்கிறது;

விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் கிடைக்கிறது.பாசனக் கட்டுமானங்கள் மற்றும் பாலங்களில் இருந்து, 500 மீட்டருக்கு அப்பால் தான் மணல் எடுக்கப்படுகிறது என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அநேக ஆறுகளில், அந்த துாரங்களை யாரும் கணக்கிட்டு மணல் அள்ளுவதில்லை.இரவும், பகலும் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதால், செங்கல்பட்டு நெடுஞ்சாலை பாலத்தின் அடித்தளங்கள், சாலையில் செல்லும் போதே தெரிகின்றன.

இதுபோல, அடித்தளங்களை எத்தனையோ பாலங்கள் இழந்து, எப்போது விழலாம் என்ற ரீதியில் உள்ளன. ஆறுகளில் அபரிமிதமாக மணல் அள்ளப்பட்டதன் விளைவாக, வெள்ளம் பெருகி ஓடி வரும் போது, தங்கு தடையில்லாமல் வேகமாகப் பாயும் நீர், அணைகள், பாலங்கள் மீது மோதுகின்றன; அதன் விளைவாக, அவை இடிகின்றன.

ஆற்றின் மட்டத்தைச் சரியாக வைத்திருப்பது மணல் மட்டுமே. மணல் என்பது, புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதி. பெரிய பாறைகள், காலம், காலமாக சிதைந்து உருவாகும் கனிமம் தான், மணல் என்பதைப் பலரும் அறிவதில்லை. அது இயற்கையாக உருவாக, பல ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும்.கட்டடங்களுக்கு இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணலை, எக்காரணம் கொண்டும் விரைவாக உற்பத்தி செய்ய முடியாது.

மணலை ஆழமாகத் தோண்டி எடுப்பதன் மூலம், ஆறுகளைப் பள்ளமாக்கி, அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.இதன் விளைவாக, குளங்கள் வறண்டு போய், தமிழகத்தின் நீர்வளம் குன்றி வருகிறது. ஆறுகள் பாதுகாப்புச்சட்டம் என்ற ஒன்றை, ஆங்கிலேய அரசு, 1884ல் அறிமுகம் செய்தது.

அந்த சட்டத்தின் படி, ஆறுகளின் இரு புறமும், கரைகளுக்கு அப்பால், 100 அடி துாரம் வரை மண் அல்லது மணல் அள்ளக்கூடாது; தனியார் நிலமாக இருந்தாலும் அதே விதி தான்!தமிழக நீர் ஆதாரங்களைப்பாதுகாக்கும் வகையிலும்,மணலை பக்குவமாக கையாளும் வகையிலும், 1920ல், கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால், இப்போதைய அரசுகள், மணலின் மகத்துவம் தெரியாமல், விலை பேசி விற்று, தமக்கு காசு பெற்ற வருகின்றன.தமிழகத்தின் முக்கியமான ஆறுகளில், வைகையும் ஒன்று. மாநிலத்தில் குறைவாக மழை பெறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பியிருந்த இந்த வைகை ஆறு தான், நம் மாநிலத்தில் முதன் முதலில் சீரழிக்கப்பட்டது.

ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால், அதன் அருகில் உள்ள குளங்கள் அடைந்த சேதத்தை, வைகைப் பாசனப் பகுதி முழுவதும் இன்றும் காண முடியும். 19ம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட, மதுரை நாட்டு அரசிதழ் நுால், வைகையை நம்பி, 3,000த்திற்கும் மேலான ஏரிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுஉள்ளது.

தென்னிந்திய நீர் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும், பிரடெரிக் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர், 1901ம் ஆண்டில், 'நீர் பாசனத்தை பெருக்குவது என்றால், வைகையைப் போல செய்ய வேண்டும்' என்றார்.

ஆண்டுக்கு, 20 நாட்களுக்கும் குறைவாக மட்டுமே நீர் ஓடும் வறண்ட வைகையில், அப்படியென்ன சிறப்பு இருக்கும் என்ற வினா எழுகிறது!

வைகை ஆற்றின் நீர் எப்போதோ, ஒரு முறை மட்டுமே கடலில் சேர்கிறது. அதனால், அந்த ஆற்றின் ஒவ்வொரு துளி நீரும், மக்களின் பயன்பாட்டிற்கு செல்கிறது.மழைக்காலங்களில் வெள்ளம் பெருகி வரும் போது, ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளால், தண்ணீர் திசை திருப்பப்பட்டு, அப்பகுதி நீர்ப்பாசனத் தேவையை முழுமையாக நிறைவு செய்யும் வண்ணம் குளங்களில் சேமிக்கப்படுகிறது. இது தான், அந்த ஆற்றின் சிறப்பு.

ஆனால், 2004ம் ஆண்டில்,வைகை ஆறு குறித்து வெளியான, மிக விரிவான சுற்றுப்புறச் சூழல் அறிக்கை, மதுரை அருகே, விரகனுார், கீழ் வைகை கால்வாய்களை பற்றி கூறியது, அந்த ஆற்றின் தற்போதைய இழி நிலையை இனங்காட்டுகிறது.

'வைகை ஆற்றில் மிக ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் தோண்டப்பட்டதாலும், ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், கால்வாய்கள் ஏராளமாக காணாமல் போய் விட்டன.கட்டனுார் கால்வாய் இருந்த இடம் தெரியாமலே போய் விட்டது. இது தவிர்த்து, இரண்டு கால்வாய்கள், தொடங்கும் இடத்திலேயே காணவில்லை.

'வைகை ஆற்றிலிருந்து அந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வைகை ஆற்றின் நீர்ப்பாசனப் பகுதி நெடுகிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுகள் கலக்கின்றன. இதனால் ஆறும், பாசனக் குளங்களும் எதிர்நோக்கும் பிரச்னைகள் ஏராளம்' என, விரிவாகத் தெரிவிக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, உலகப் பெரும் பொறியாளர்களும் வியக்கும் வண்ணம் ஓடிய வைகை ஆறும், அதன் கால்வாய்களும் இன்று அழிந்து வருகின்றன என்பதை, மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தோர் நன்றாகவே அறிவர்!

கர்நாடகாவில், கோலார் மாவட்டத்தின் நந்திமலைப் பிரதேசத்தில் உருவாகி, கர்நாடகாவில், 93 கி.மீ., ஆந்திராவில், 23 கி.மீ., பயணம் செய்யும் பாலாறு, தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக, 223 கி.மீ., ஓடி, மாமல்லபுரம் அருகே வயலுார் முகத்துவாரத்தை அடைந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

ஆனால், பாலாற்றின் தற்போதைய நிலையோ தலை கீழ். தமிழகத்தில் அமைந்துள்ள மொத்த தோல் தொழிற்சாலைகளில், 75 சதவீதத்திற்கும்அதிகமானவை, பாலாற்றின்நீர்ப்படுகைகளிலேயே அமைந்துள்ளன.அதனால் தான், பாலாற்றை ஒட்டி இருந்த, 600 துாய்மையான நீரோட்டம் நிறைந்த கால்வாய்கள், இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு உள்ளன.

களிமண் தட்டுப்படும் அளவுக்கு, பல மீட்டர் ஆழத்திற்கு, பாலாற்றில் மணல் தோண்டி எடுக்கப்பட்டதால், அந்த ஆறு, இப்போது பாதி துாரம் கூட தண்ணீருடன் பயணிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவால், மணல் எடுப்பது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், பால் போல ருசியாக இருந்த அந்த ஆற்றின் நீர், சுவையே இன்றி, பல பகுதிகளில் உப்பு கரிக்கிறது.

அண்மையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த பெரு மழையும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்ட, இதுவரை இல்லாத அளவிலான தண்ணீரின் அளவும், நீர் மேலாண்மையிலும், நீர் ஆதாரங்களைப் பராமரிப்பதிலும், தமிழகம் பின்தங்கி இருப்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

திறந்து விடப்பட்ட பல லட்சம் கன அடி தண்ணீரும், சேமிப்பின்றி, வீணாகக் கடலில் கலந்து கொண்டிருக்கும் காட்சியை காண்கிறோம். ஆனால், இவ்வளவு நீர் பெருக்கெடுத்து வந்தும், தஞ்சை கடைமடைப் பகுதி விவசாயத்திற்குப் போதுமான நீர் இன்னமும் வராமல், கடலில் சேர்கிறது.

மதகுகளை முறையாகப் பராமரிக்காத காரணத்தாலும், அதைச் சுற்றி, மணலைச் சுரண்டியதாலும், முக்கியமான, முக்கொம்பு கதவணை, திருச்சி கொள்ளிடம் பாலம் உடைந்தது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி, அதை சரி செய்யும் வேலைகள் நடக்கின்றன. ஆற்றிலிருந்து அபரிமிதமாக அள்ளப்பட்ட மணல், மீண்டும் ஆற்றுக்கே இந்த விதத்தில் வருவது, இயற்கையின் விளையாட்டு தானே!

இந்த இழிநிலை, தமிழகத்தில் மிச்சமிருக்கும் மற்ற நீர் ஆதாரங்களுக்கும் விரைவில் வரும் என்பதே நிதர்சனம். அதற்குள் தமிழக அரசு விழித்து, நீர் ஆதாரங்களைப் புனரமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம்; ஆறுகளில் ஒரு பிடி மணல் கூட அள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மணல் அதிகமுள்ள பிற மாநிலங்களில் இருந்து, தமிழக தேவையை ஈடுகட்ட வேண்டும். தமிழக வாகனங்களின் எரிபொருள் தேவைக்காக, பல ஆயிரம், கி.மீ.,யிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவது, காலம் காலமாக, தொழில்நுட்ப ரீதியில் நடக்கிறது.அது போல, மணலையும் கொண்டு வர வேண்டும். பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, தமிழகத்திற்கு கொண்டு வந்தால் தான், இயற்கையான நீர் வழிகள், எதிர்கால சந்ததிக்கு இருக்கும். ஏனெனில், நீரின்றி அமையாது இவ்வுலகு!

மணல் இருந்தால் தான், ஆறு, ஆறாக இருக்கும். மணல் இல்லையேல், அமிர்தமே ஓடி வந்தாலும், சாக்கடையாகவே இருக்கும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து, ஆற்றில்இருக்கும் மணலை காப்பாற்ற வேண்டும்.

முனைவர்
இரா.பன்னிருகை
வடிவேலன்
உதவி பேராசிரியர் இ -மெயில்:
pann1973@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement