Advertisement

பாவம் பாவேந்தன்...

அந்த கோர்ட் அறையெங்கும் அப்படி ஒரு அமைதி
சிலர் விசும்புகின்றனர், சிலர் மனம் உடைந்து அழுகையை அடக்கிக்கொண்டு இருக்கின்றனர் , பலருக்கு அடக்கமுடியாத தடுக்கமுடியாத துடைக்க விரும்பாத நிலையில் கண்ணீர் பெருகி ஒடுகிறது


அப்படி கண்ணீர் சிந்தி கண்கலங்கியவர்களில் நீதிபதி கிருபாகரனும் ஒருவர்


இப்படி அனைவரையும் அழவைத்த அந்த வழக்கு விவரம் இதுதான்.


கடலுார் மாவட்டம் திம்மசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமேனி. இவரது மனைவி சசிகலா இவர்களுக்கு இரண்டு பெண் ஒரு பையன் பையன் பெயர் பாவேந்தன்.


ஆண்பிள்ளை வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மூன்றாவதாக பிறந்தவன் பாவேந்தன். ஆசை ஆசையாக பெற்றெடுத்த இந்த பிள்ளையை தயவு செய்து கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்கள் என்று கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் திருமேனி.


காரணம் மிக சோகமானது


பத்து வருடங்களுக்கு முன் பாவேந்தன் வயிற்றில் இருக்கும் போது மாதம் தவறாமல் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று குழந்தை நன்றாக கருவில் வளர்கிறா? என்று தவறாமல் சோதனை செய்து வந்தார் அவர்களும் நன்றாகவே இருப்பதாக சொன்னார்கள்.


அதே மருத்துவமனையில் பிரசவத்திற்கும் சேர்த்தார் குழந்தையும் பிறந்தது.


குழந்தைக்கு பாவேந்தன் என்று பெயரிட்டு சந்தோஷித்தனர் அந்த சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை பாவேந்தனுக்கு பல முறை வலிப்பு வந்தது என்ன பிரச்னை என்று கண்டுபிடிப்பதற்கு கடலுார் முதல் சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிவரை அலைந்துவிட்டனர்.


குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை உடம்பு மட்டுமே வளரும் பிறந்த குழந்தையாகத்தான் கடைசி வரை இருப்பான் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.


தலை நிற்கவில்லை உட்கார முடியவில்லை பேச்சு வரவில்லை எந்நேரமும் படுத்துக் கொண்டேதான் இருப்பான் மொத்தத்தில் ஒரு உயிருள்ள நோய்வாய்ப்பட்ட பொம்மையாகவே வளர்ந்தான்.


ஆனால் வளர வளர அதிகம் பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்பட்டது வலிப்பு வந்தால் தோளில் துாக்கிக்கொண்டு டாக்டரிடம் ஒடுவார்கள் வளர்ந்த பிறகு அப்படி துாக்கிக்கொண்டு ஒடமுடியவில்லை ஆட்டோ கார் என்று செலவாயிற்று மருந்து மாத்திரைகளின் விலையும் கூடுதலாயிற்று.


பாவேந்தனுக்கு தான் யார் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யார் என்பது எல்லாம் தெரியாது பசித்தால் அழுவான் அழுத உடனேயே சாப்பாடு கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அழும் சத்தம் அதிகரிக்கும் கொடுக்கும் சாப்பாட்டையும் மசித்து ஆறு மாத குழந்தைக்கு கொடுப்பது போல கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஊட்டிவிடவேண்டும் இல்லையேல் ஜீரணக்கோளாது வந்து அதற்கு தனியாக மருந்து மாத்திரை எடு்க்கவேண்டும்.


ஆனால் எப்போது அழுவான் என்பது தெரியாது ஆகவே அவன் பக்கத்தில் அம்மாவோ அல்லது அப்பா நானோ ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும்.இது போக ஒரு நாளைக்கு பலமுறை வலிப்பு வந்துவிடும் பக்கத்திலேயே இருந்து பார்த்து சரி செய்யவேண்டும் இல்லையேல் ஊர்ந்து ஊர்ந்து போய் சுவற்றி முட்டி தலையெல்லாம் ரத்த காயமாகிவிடும் அந்த காயத்தை ஆற்றுவதற்கு பெரும்பாடு படவேண்டும்.


இதன் காரணமாக கடைவீதியில் இருந்த எனது டெய்லர் கடையை வீட்டுக்கு மாற்றிக்கொண்டேன் ஒரு கண்ணை தையல் மெஷினிலும் இன்னோரு கண்ணை மகன் மீதும் வைத்திருப்பேன்.


மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மருந்து மாத்திரைக்கு செலவாகிறது ‛டயாபர்'(குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் உள்ளாடை) மட்டுமே மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது, கிராமத்து டெய்லரிங் தொழிலில் அவ்வளவு வருமானமும் இல்லை.சேமிப்பு பணம் எல்லாம் கரைந்தது, நிலம் மனைவியின் நகையெல்லாம் விற்றாயிற்று வயதானதன் காரணமாக எளிதாக துணி தைக்கலாம் என்று இருபதாயிரத்திற்கு வாங்கியிருந்த மோட்டார் வைத்த தையல் மிஷினைக்கூட கடந்த மாதம் விற்றுவிட்டேன்


குடியிருக்கும் வீட்டையும் அடமானம் வைத்தாயிற்று. இதற்கு மேல் பாவேந்தனுக்காக செலவழிக்க எங்களால் முடியவில்லை என்பதால் மருந்து மாத்திரை உணவு கொடுப்பதை நிறுத்த அனுமதியுங்கள். அவனை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டு சென்னை ஐகோர்ட்டை திருமேனி அணுகினார்.


பாவேந்தன் படும் துயரத்தையும் பெற்ற மகனை காப்பாற்ற முடியாமல் துடிக்கும் தந்தையின் சோகத்தையும் கேட்ட நீதிபதி கண்கலங்கினார்.பாவேந்தனுக்கு ஏதாவது செய்ய முடியுமா? என்று மருத்துவர்களை நியமித்தார். உயர்மட்ட மருத்துவ குழு பாவேந்தனை பரிசோதித்துப் பார்த்துவிட்டு எந்த மருத்துவத்தாலும் இனி பலனில்லை என்று கைவிரித்துவிட்டனர்.

பாவேந்தனை பராமரிக்க மத்திய மாநில அரசிடம் திட்டம் ஏதாவது இருக்கிறா? இல்லையென்றால் ஏன் இல்லை?என்றெல்லாம் கேட்டு வழக்கை வருகின்ற 23ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


கிராமத்திற்கு திரும்பி திருமேனியிடம் பேசும் போது எங்கள் வாசகர்கள் மிகவும் கருணை கொண்டவர்கள் உங்கள் மகனின் மருத்துவ செலவி்ற்கு நிச்சயம் உதவுவார்கள் உங்கள் வங்கிக்கணக்கை சொல்லுங்கள் என்ற போது,‛ வேண்டாம்யா நான் ஒரு ரூபாய் நன்கொடையாக வாங்கினால் கூட பிள்ளையை வச்சு சம்பாதிக்கிறான்' என்ற கெட்ட பெயர் வந்துவிடும் தவிர எனக்கு தெய்வம் போல இப்போது உதவிக்கொண்டிருக்கிற வழக்கறிஞர் கவிதா ரமேஷ்வர் கருத்தும் அதுதான், ஆகவே அவரது பேச்சை மீற முடியாது, தவிர இது என் குழந்தைக்கான போராட்டம் மட்டுமில்லை என்னைப் போல எத்தனையோ வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பல பெற்றோர்களின் சார்பிலான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கான தீர்வாக தீர்ப்பு 23 ந்தேதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் திருமேனி.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement