Advertisement

இதுதான் காதல் சன்னதி

வேலுாரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தின் வாசல் அகலமாக திறந்து வைக்கப்பட்டு உள்ளது.வயதான ஒரு பெண்மணி கண்களில் காதல் வழிய வழிய வாசல் மீது விழி வைத்து காத்திருக்கிறார், சாதாரண காத்திருப்பு அல்ல 28 வருட காத்திருப்பு அது.


சிறை தந்த பரிசால் பேசமுடியாமல் போன அந்தப் பெண்ணின் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை ‛மாமா' என்பதுதான்


இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னைத்தேடி தன் மாமா வரப்போகிறார் என்பதை எல்லோரிடமும் மகிழ்ச்சி பொங்க தன் நெஞ்சி்ல் கைவைத்து செய்கையாலும் ஒற்றை வார்த்தையாலும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தார்.


அவர் அன்பு மாமா வருவதற்குள் அவரின் இதயத்தை பிழியும் காதல் கதையை தெரிந்து கொள்வோம்.

விஜயாஇலங்கையைச் சேர்ந்தவர் அங்குள்ள கூத்து பட்டறை கலைஞராக வலம் வந்தவர் இனக்கலவரம் காரணமாக அகதியாக தமிழகம் வந்தவர்களில் இவரும் ஒருவர்.அப்போது இவருக்கு வயது 27.
தமிழகம் வந்தவர் தனக்கு தெரிந்த நாட்டியத்தை தெருவில் ஆடி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.இப்படி இவர் திருப்பூர் நாச்சிபாளையத்தில் நடனமாடும் போது பலரும் காமக்கண்ணோடு பார்த்த போது இவரை காதல் கண்கொண்டு பார்த்தவர்தான் சுப்பிரமணியம், அப்போது அவருக்கு வயது 32.இவரது அணுகுமுறையும் அன்பும் விஜயாவிற்கும் பிடித்துப் போக இருவருக்குள்ளும் காதல் துளிர்த்து இலை விட்டு கிளைவிட்டு வேகமாக வளர்ந்தது.


செல்வந்தர் வீட்டு பிள்ளையான சுப்பிரமணியம் நம் வீட்டு பெண்ணை கட்டமாட்டாரா? என்று உறவினர்கள் பலர் காத்து கிடக்க, இவரோ விஜயாவைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதிபடக்கூறியிருக்கிறார்.


தெருவில் கூத்தாடும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் குடும்ப மானம் மரியாதை எல்லாம் போய்விடும் ஒரு தம்பிடி பைசா கூட வீட்டில் இருந்து தரமாட்டோம் என்றெல்லாம் சொல்லிய போதும் ‛எனக்கு விஜயா போதும்' என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி விஜயாவை திருமணம் செய்து கொண்டார்.


தனக்காக வீடு பணம் உறவு என அனைத்தையும் உதறிவிட்டு வந்த காதலன் சுப்பிரமணியத்தை கணவனாக அன்புடன் ஏற்றுக்கொண்டார் தனக்கு தெரிந்த ஆடல் கலையை கணவருக்கு கற்றுக்கொடுத்தார்.


இருவரும் சேர்ந்து ஊர் ஊராக போய் நடனமாடி அதில் வரும் வருமானத்தில் சந்தோஷமாக ஐந்து வருடங்கள் குடும்பம் நடத்தினர்.குழந்தை இல்லை, நிரந்தர வீடோ வருமானமோ இல்லை, ஆனாலும் இருவருக்குள்ளும் குறையாத காதலும் குன்றாத அன்பும் வற்றாத பாசமும் வளமான நேசிப்பும் இருந்தது.


இப்படி தென்றலாய் சென்றவர்கள் வாழ்க்கையி்ல் ஒரு குடிகாரனால் புயல் வீசியது.ஒரு ஊரில் ஆடிவிட்டு அந்த களைப்போடு தெருவில் படுத்திருந்த விஜயாவை ‛அடையும்' நோக்கோடு போதையோடு ஒருவன் நெருங்கினான் விஜயாவை நெருக்கினான்.


அந்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க திமிறியபடியே கூச்சல் போட்டு இருக்கிறார் விஜயா அருகில் அசந்து படுத்திருந்த சுப்பிரமணியம் தன் அன்பு மனைவியின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்


சில வினாடிகளில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தவர் அருகில் இருந்து கல்லை எடுத்து அவன் தலையில் தாக்க அடுத்த சில நிமிடங்களில் அந்த மிருகம் சுருண்டு விழுந்து செத்தது.


இதெல்லாம் எந்திரமாகிவிட்ட மனிதர்களுக்கு குறிப்பாக கோவை சூலுார் போலீசுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா தெரியவில்லை.


நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டாலும் ,அவர்களாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து ஐநுாறு ரூபாய் வழிப்பறி செய்யும் நோக்கோடு இளைஞன் ஒருவனை கொலை செய்ததாக இருவரையும் கைது செய்தனர்.


வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது கணவன் கல்லைத்துாக்கி போட்டு கொலை செய்தது உண்மைதானே? என்று கேட்டவர்கள் ஏன் கல்லைத்துாக்கி போட்டார்? என்று கேட்டு இருந்தால் என் மானம் காக்க கல்லைத்துாக்கி போட்டார் என்று சொல்லியிருப்பார் விஜயா ஆனால் அப்படி ஒரு கேள்வியே எழவில்லை.


எங்கே கணவனை சட்டம் தனியாக பிரித்து சிறையில் போட்டுவிடுமோ? என நினைத்து நானும் சேர்ந்துதான் கல்லைத்துாக்கி போட்டேன் எனறார்‛ அப்படியானால் உனக்கும் ஆயுள் தண்டனைதான்' என்றபோதும் அதையேதான் விஜயா சொன்னார்.


இதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்லி நல்ல வழக்கறிஞரை வைத்து வாதாடியிருந்தால் எப்போதே வெளியில் வந்திருப்பர் ஆனால் கவுரவம் சுப்பிரமணியம் குடும்பத்தாரை கட்டிப்போட நிர்க்கதியான இருவரும் வேலுார் சிறையில் தண்டனை அனுபவிக்க துவங்கினர்.சிறைக்குள் போகும் போது சுப்பிரமணியத்திற்கு வயது 37 விஜயாவிற்கு வயது 32.


தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்ததைவிட தன்னால் தன் காதலித்து கைபிடித்த கணவர் நிலை இப்படியாகிவிட்டதே என்று நினைத்து உடலும் மனமும் சோர்ந்து ஒரு மனநோயாளி போலவே விஜயா ஆகிவிட்டார். யாரிடமும் பேசாமல் தனிமையிலும் வெறுமையிலும் இருந்த நிலையில் பேச்சும் இவரிடம் இருந்து விடைபெற்றுவிட்டது.ஒரு நடைப்பிணமாகவே சிறையில் இருபத்து மூன்று வருடங்கள் இருந்தார்.நீண்ட காலம் சிறையில் வாடும் பெண் என்று விஜயாவைப்பற்றி ஒரு வழக்கறிஞர் வெளிஉலகத்திற்கு விஷயத்தை கொண்டு வந்ததன் எதிரொலியாக கடந்த 2013 ம் ஆண்டில் விஜயா விடுதலை செய்யப்பட்டார்.


இளமை தொலைந்து முதுமையும் நோயும் வாட்டிய சூழலில் வெளிவந்த விஜயாவை வேலுார் தஞ்சம் முதியோர் இல்லம் தஞ்சம் கொடுத்து பார்த்துக் கொண்டது.


ஆனாலும் விஜயாவின் கண்களில் சோகம் குறையவில்லை அந்த சோகத்திற்கு காரணம் தான் வெளியில் வந்தாலும் இன்னும் தன் கணவர் சுப்பிரமணியம் வெளியில் வரவில்லை என்பதுதான்.


இன்று வருவார் நாளை வருவார் என்று உயிரைப்பிடித்துக் கொண்டு நடமாடிக்கொண்டிருந்தவரின் காதில் ஐந்து வருடங்கள் கழித்து தேனாக விழுந்த செய்திதான் கணவர் சுப்பிரமணியம் விடுதலையாகிறார் என்பது.
ஆம் எம்ஜிஆர் நுாற்றாண்டை முன்னிட்டு வேலுார் ஜெயிலில் 28 வருடங்கள் சிறைவாசமிருந்த சுப்பிரமணியம் கடந்த 6ந்தேதி சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
வாலிபராக உள்ளே சென்ற சுப்பிரமணியம் 65 வயது முதியவராக வெளியே வந்தார் சுதந்திரக்காற்றை இழுத்து வாங்கி மூச்சு விட்டவர் கேட்ட அடுத்த கேள்வி எங்கே என் மனைவி விஜயா? என்பதுதான்.


அவர் முதியோர் இல்லத்தில் காத்திருக்கும் செய்தியைச் சொன்னதும் ஒட்டமும் நடையுமாக இல்லம் வந்தார்.


காலம் எத்தனைதான் முகத்திலும் தலையிலும் முதுமைக் கோலத்தை போட்டு இருந்தாலும் விஜயா ஒரு நொடியில் தன் கணவரை அடையாளம் கண்டுகொண்டார்.‛ மாமா' என்று அழைத்தபடி வாசலை நோக்கி ஓடிவந்து கைபிடித்துக் கொண்டார் பிடித்த கையை தன் முகத்திலம் கண்களிலும் கன்னத்திலும் வைத்துக்கொண்டார் பின் அந்தக்கைக்கு பல முறை முத்தமிட்டு மகிழ்ந்தார்,நெகிழ்ந்தார்.


சுப்பிரமணியத்தின் நிலைமையும் அப்படித்தான் மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சிதான் நிரம்பியிருந்தது சாப்பிட்டியா? சாப்பிட்டியா? என்று மனைவியைப் பார்த்து கேட்டுக்கொண்டே இருந்தார். இனி கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்வதைப்போல விஜயாவின் தோள் தொட்டு அணைத்துக்கொண்டார்


இருவரின் கண்களில் இருந்தும் தாரை தாரையாக கண்ணீர், இருவரும் ஒருவரை ஓருவர் பார்த்தபடி அமைதியாக இருந்தனர். ஆனால் அந்த மவுனம் கடந்த கால காதல் கதையை இருவருக்குள்ளும் கடத்திக்கொண்டு இருப்பதை சுற்றியிருந்தவர்கள் உணர்ந்தனர். அவர்கள் கண்களில் இருந்தும் கண்ணீர்,இந்த அப்பாவிகளையா இத்தனை வருடம் சிறையில் வைத்து தண்டித்துவிட்டார்கள் என்ற ஆதங்கமும் அந்த கண்ணீரில் நிறையவே கலந்து இருந்தது.


கணவரின் கையை பிடித்துக் கொண்டு மிடுக்குடன் நடந்த விஜயா முதியோர் இல்லத்து செக்யூரிட்டி முதல் காப்பாளர் வரை அனைவரிடம் சென்று சுப்பிரமணியத்தை என் மாமா என்று அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டுக்கொண்டு இருந்தார்.


எல்லோருக்கும் நன்றி என் சொந்த ஊருக்கு போறேன் அங்கே போய் எப்படியும் பிழைத்துக் கொள்வேன் இனி சாகிற வரை என் விஜயாவை நான் பார்த்துக்குவேன் அவளும் என்னைப் பார்த்துக் கொள்வாள் என்றபடி கிளம்பிச்சென்றனர்.


எங்கிருந்தோ காற்றில் கலந்து கண்ணதாசன் பாடல் ஒன்று அந்த நேரம் மிதந்து வந்தது...பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..


அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....


அதுதான் காதலின் சந்நிதி...
-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Balaji Dasarathan - Chennai,இந்தியா

    எத்தனையோ நாள் இந்த செய்தியை படிக்கணும்னு bookmark பண்ணி இருந்தேன். முருகராஜ் சார், உங்க பேருல வந்த செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது சார். இந்த செய்தி மற்றும் கண்ணதாசன் வரிகள் எல்லாம் அருமை சார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement