Advertisement

உயிரினும் மேலானது எதுவுமில்லை!

குடும்பமாக சேர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி, நாளிதழ்களில் வந்த செய்திகள் தந்த அதிர்ச்சி தான், இந்தக் கட்டுரையை எழுத வைத்தது.குடும்பப் பிரச்னையால், தங்கள் குழந்தைகளை கொன்று, தாங்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர், சில பேர். தங்களுக்கு பின் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, ஒன்றும் அறியாத அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வதற்கு, எப்படி மனம் துணிகிறது... ஏதேதோ காரணங்கள், பல விதமான வலிகள்.... ஐயோ, கொடூரம்!பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகள், கண் முன் துடிதுடித்து சாவதைப் பார்க்கும் அசாத்திய தைரியம் கொண்டவர்கள், அந்தத் துணிச்சலை, பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவதில் காட்ட வேண்டியது தானே?நம் அன்புக்குரியவர்கள் படும் வேதனையை, அருகிலிருந்து பார்ப்பதை விட, பெரிய கொடுமை, தண்டனை வேறில்லை. இதை விடவா, வாழ்க்கை உங்களை துன்பப்படுத்தி விட முடியும்?இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்து விட்ட கோபத்தில், கணவனும், அவன் வீட்டாரும் பார்க்க வரவில்லை என்பதால், பிஞ்சுக் குழந்தைகளை, பால் குடிக்கும் போதே, மார்பில் அழுத்தி, மூச்சு திணறடித்து கொன்று விட்டாள், ஒரு நவீன பூதகி. பட்டதாரியான அவள், ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று கூட, கணவனின் துணையின்றி, அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி இருக்கலாம்.இதெல்லாம் விட, கள்ளக் காதலுக்காக, பெற்ற குழந்தைகளைக் கொல்வது, மன விகாரத்தின் உச்சம். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், இரு குழந்தைகளை கொன்று, பிரியாணி கடை ஊழியனுடன் ஓட நினைத்த அந்த இளம்பெண், தன் இரு குழந்தைகளையும் கொன்ற கொடூரத்தை, பத்திரிகைகளில் படித்த எனக்கே, மனம் பதறி போகிறதே... எப்படி அவளால், எவ்வித பதட்டமும் இன்றி, கொலை செய்ய முடிந்தது?இத்தகைய, பெண் பேய்களுக்கு, உடனடியாக சட்டத்தின் மூலம் கடுமையான, அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.'ஆண்டாண்டு காலம், அழுது புரண்டாலும், மாண்டார் மீண்டு வருவதில்லை' என்றார், பட்டினத்தார். 'புவியின் மிசை உயிர்களெல்லாம், அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ... தேனான உயிரை விட்டுச் சாகலாமோ...' என்கிறார், மகாகவி பாரதியார்.'மான அவமானங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலை குலைந்து போகச் செய்யும் சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், தொழிலில் நஷ்டங்கள், உறவினர், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், சுக, துக்கங்கள் எல்லாம், மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்.'இவற்றை மன உறுதியுடனும், துணிச்சலுடனும், பொறுமையுடனும், எதிர்கொள்ளும் மனிதனே, மிகச் சிறந்த வெற்றியாளனாக விளங்குகிறான்!-'இது, பகவான் கிருஷ்ணரின் உபதேசம்.இன்றைய கால கட்டத்தில், நாம் எல்லாருமே, மேற்கூறிய ஏதாவது ஒரு விதத்தில், பாதிக்கப்பட்டுத் தான் இருப்போம். ஆனால், எந்த ஒரு காரணத்துக்கும், தற்கொலை தீர்வாகாது.தேசிய அளவில், தற்கொலைத் துயரில், தமிழகம் இரண்டாமிடம் வகிப்பதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தொழில் நஷ்டம், கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, நோய் பாதிப்பு போன்றவையே, தற்கொலைக்குத் துாண்டுவதில் முக்கிய காரணிகளாக உள்ளன.சுய தொழில் துவங்கவும், அபிவிருத்தி செய்யவும், விவசாயம் செய்யவும், குடும்பச் செலவுக்காகவும், வங்கிகளிடமும், தனி நபர்களிடமும், கடன் பெற்றவர்கள், அதைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், அவமானத்துக்குப் பயந்து, குடும்பத்துடனும், தனி நபராக, பொன்னான உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.'சகிப்புத்தன்மை குறையும் போதும், வாழ்வின் எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன என, ஒருவர் விரக்தி அடையும் போதும், தற்கொலை எண்ணம் தலை துாக்குகிறது' என, மன நல நிபுணர்கள் கூறுகின்றனர்.நாமெல்லாம் உயிர் வாழ, உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை, மானிட சமுதாயத்துக்கே பெரும் அவமானம்.பல ஆயிரம் கோடி ரூபாய், வங்கிக்கடன் வாங்கி, ஏமாற்றிய வைர வியாபாரிகளும், விமான நிறுவன அதிபரும், வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்க, சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, காலத்தின் கோரம்!கடன் தொல்லை, பணப் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருந்தத்தக்க விஷயம். வாழ வேண்டும் என நினைத்தால், வைராக்கியம் கொண்டால், நேர்மையான வழியில் உழைத்துப் பிழைக்க, ஆயிரம் வேலைகள் உண்டு. வரவுக்குள், செலவுகளை அடக்கும் சாமர்த்தியமும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, செலவு செய்யும், மனப்பாங்கும் இருந்து விட்டால், கடன் வாங்க தேவை இருக்காது.வறட்டு கவுரவத்துக்காக செய்யப்படும், வீணான ஆடம்பரச் செலவுகள், பிற்பாடு, நம் கழுத்தை இறுக்கும் கயிறு என்பதை நினைவு கொள்ள வேண்டும்.பணம் என்பது, நாம் உயிர் வாழ, மிக மிக அவசியமானது தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், அதுவே நம் உயிரைப் பறிக்கும் எமனாக, ஒரு போதும் அனுமதிக்காதீர்; உயிரினும் மேலானது எதுவுமில்லை.மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்தால் தெரியும்...- எப்பாடு பட்டாவது நோயிலிருந்து விடுபட, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, போராடும் மனிதர்களின் வலி மிகுந்த, கவலை தோய்ந்த முகங்கள், உயிரின் அருமையை உணர்த்தும். இதில், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே கிடையாது.பணம் இல்லை என்பதற்காக, உயிரை மாய்த்துக் கொள்கின்றனரே... பணம் நிறைய இருப்பவர்கள், நோய் அல்லது மரணத்திலிருந்து தப்ப முடியுமா... அல்லது தள்ளிப் போடத் தான் முடியுமா... இயல்பான துாக்கத்தைக் கூட பணத்தால் வாங்க முடியாது என்பதே உண்மை!பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தவறான வாதம். பொன்னான நேரம், தேக ஆரோக்கியம், மன நிம்மதி போன்ற பல விஷயங்கள், பணத்தால் மட்டுமே கிடைத்து விடாது.பெரும் புகழ், செல்வாக்கு, கோடிகளில் பணம் என, எல்லாம் இருந்தும், மன அமைதியும், உறவுகளும், அமையப் பெறாத, ஹாலிவுட் நடிகை, மர்லின் மன்றோ, தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா ஆகியோரின் மரணங்கள் மர்மமாகவே இருக்கின்றன.அதே நேரம், 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...' என, பாடிய பாரதி, 'வெறும் உப்பு, புளி, பருப்புக்காக பாட வைத்திடுவாயோ பராசக்தி' என, முறையிடும் நிலையிலும், வாழ் நாள் முழுவதும், வறுமையில் வாடியவர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வறுமைக்காக அவர், தற்கொலை செய்து கொள்ளவில்லை. வாழ மனமிருந்தால் வழிகள் பல உண்டு!அது போல, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி என, இளம் வயதிலேயே சோக முடிவைத் தேடி, பெற்றோரை மீள முடியாத துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர், சில இளம் பிஞ்சுகள்.ஏழாம் வகுப்பு மாணவன், மதிப்பெண் குறைவால், மனமுடைந்து, துாக்கிட்டுக் கொண்டான் என, நாளிதழில் படித்த போது, பெரும் வருத்தத்தையும், மிகுந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.ஓடி விளையாடும் பருவமுள்ள, 10 - 12 வயதுச் சிறுவனுக்கு, இப்படியொரு விபரீத எண்ணம், சாகத் துணியும் அளவுக்கு மன வேதனையை எப்படி தரும்... படிப்பு ஏறாமல், தோல்வியைத் தழுவிய எத்தனையோ பேர், வாழ்க்கையில் ஜெயித்திருக்கின்றனர்.விளையாட்டு, இசை, நடனம், அரசியல் என, எத்தனையோ துறைகளில், சாதித்த பலர், பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். கல்விக்கண் திறந்த நம் காமராஜர், 'படிக்காத மேதை' இல்லையா...எனவே, படிப்பு என்பது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளத் தானே தவிர, வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கில்லை என்பதை, மாணவர்கள் உணர வேண்டும். ஆசிரியர்கள் திட்டினால், வீட்டில் பெற்றோர் கோபித்துக் கொண்டால், உடனே தற்கொலை முடிவு... சிறு சொல்லைக் கூட தாங்க முடியாமல், பொத்தி பொத்தி வளர்ப்பதால் விளையும் விபரீதம்!ஒரு வயதான தாய், மன வளர்ச்சியில்லாத, வயதுக்கு வந்த, தன் மூன்று பெண் குழந்தைகளை வைத்து, வாழ்க்கையோடு பெரும் போராட்டமே நடத்தி வருவதாக, நாளிதழில் படித்தேன்.சமீபத்தில் மறைந்த, அறிவியல் மேதை, பிரிட்டனைச் சேர்ந்த, ஸ்டீபன் ஹாகிங், தன் இளம் வயதிலேயே, ஏ.எல்.எஸ்., என்ற ஒரு வகையான, பக்கவாத நோயால் பாதிப்பு அடைந்தவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தன் விரல் நுனி அசைவால் மட்டுமே இயங்கி, இயற்பியல் ஆராய்ச்சித் துறையில், சாதனை படைத்திருக்கிறார்.மெல்ல மெல்ல அவரின் இயக்கங்கள் அனைத்தும் செயலிழந்து வந்து, கடைசியில் பேச்சுத்திறனும் அற்றுப் போன நிலையிலும், அறிவியல் தொடர்பான, பல ஆய்வு முடிவுகள், நுால்களை வெளியிட்டுள்ளார்.வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; தன்னம்பிக்கையுடன் தளராமல் நின்று, எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கு, இவரது வாழ்க்கை மிகப் பெரிய உதாரணம். இவரைப் போல, எத்தனையோ பேர், பல துறைகளில், பல விதமான கஷ்டங்களுக்கு பிறகே உச்சம் தொட்டுள்ளனர்.பொதுவாக, நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, மிக நெருக்கடியான, தடுமாற்றமான சூழல்களில், முடிவெடுப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. எந்தவொரு தீர்வும், தானாக வந்து விடாது. கடுமையான இடைவிடாத பேராட்டம் தான், சிக்கல்களை தீர்த்து வைக்கும்.பிரச்னைகளைக் கடக்க, அளவு கடந்த பொறுமையும், விடா முயற்சியும், தளராத நம்பிக்கையும், மீண்டு விட வேண்டும் என்ற உத்வேகமும் அவசியம்.சுய பச்சாதாபம், மிகப் பெரிய எதிரி; அதை முதலில் விட்டொழிக்க வேண்டும். அது போல, மாற்ற முடியாததை ஏற்கும் மனப்பக்குவத்தையும், வளர்த்துக் கொள்ள வேண்டும். இது தான் நிஜம், நிதர்சனம் என்பதை, கஷ்டமாக இருந்தாலும், மனம் ஒத்து, அனுசரித்தாக வேண்டும்.இதெல்லாம் ஆலோசனையோ, அறிவுரையோ இல்லை; எங்கள் குடும்ப அனுபவம். 'என்ன வாழ்க்கை இது...' என, மனம் நொந்து போகும் அளவுக்கு, கசப்பான அனுபவங்களும், வாழ்க்கையையே புரட்டிப் போட்ட, திடீர் சம்பவங்களும், எங்களை நிலை குலையச் செய்துள்ளன.மரணத்தின் வாசலை தொட்டு வந்த எங்களுக்கு தான், உயிரின் மதிப்பு நன்றாகத் தெரியும்.வலி மிகுந்த மனப் போராட்டத்திலும், மிகுந்த தன்னம்பிக்கையுடன், கொடும் நோயை எதிர்த்து போராடினோம். எப்படியும் கரை சேர்ந்து விடுவோம் என்ற ஆழ் மனதின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே, எங்களை செலுத்திக் கொண்டிருக்கிறது.கடும் மன அழுத்தத்திலிருந்து, என்னை மீட்டெடுப்பது இறை நம்பிக்கையும், இந்த எழுத்துமே. பிரச்னை என்பது யாருக்குத் தான் இல்லை... எனவே, 'இதுவும் கடந்து போகும்...' என, காத்திருங்கள்; இறைவன் அனுமதித்த காலம் வரை, வாழ்ந்து காட்டுங்கள்!ikshu1000@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement