Advertisement

'இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்'

எப்படி வாழவேண்டும் என்பதைப் போதிப்பதற்காகத்தான் எத்தனையோ இதிகாசங்களும், இலக்கியங்களும் படைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நல்ல மனிதர்களும், மகான்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். 'இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்' என்று முன்னுதாரணம் காட்டத்தக்க முழுநேர உதாரணங்களைத்தான் மேலோர் பாடிப் புகழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு அல்லாதவர்களை முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்வதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. செய்துகொள்ளவும் கூடாது.வியப்பான அரசியல்காமராஜர் குறித்து எண்ணற்ற செய்திகளில் பகிர்ந்து கொள்ளலாம். இப்படியெல்லாம்கூட அரசியல்வாதிகள் இருப்பார்களா என்று வியப்பின் விளிம்பிற்கே நம்மைக் கொண்டுசென்றுவிடும் அவர்களது வாழ்க்கை.அரசியலைக் குடும்பமாக்கி குடும்பத்துக்கு அரசியலை உரிமையாக்கி எண்ணற்ற அலங்கோலங்கள் அரங்கேறியிருக்கிற இந்நாள்களைப்போல இல்லை. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை தென்மாவட்டங்களுக்கு நேருவை அழைத்துப்போயிருக்கிறார். வழியில் அவருடைய தாயாரைப் பார்க்க விரும்பியிருக்கிறார் நேரு. அவரது கார் நேராக காமராஜரின் வீட்டுக்குச் செல்லவில்லை. மாறாக சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தப்படுகிறது. காமராஜின் தாயாருக்குத் தகவல் சொல்லியனுப்பப் படுகிறது. வயற்காட்டில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த சிவகாமி சேறும் சகதியுமாக வந்து நிற்கிறார். நேரு அதிர்ந்து போகிறார். ஒரு மாநில முதலமைச்சரின் தாயார், மகன் அந்தப் பதவி வகிக்கிறபோதே வயற்காட்டில் இறங்கி வேலை செய்து கொண்டிருப்பது அன்றைக்கு வியப்பென்றால் இன்றைக்கு அதீதமான கற்பனை. இன்றைக்கு ஒரு நகராட்சி உறுப்பினரின் மைத்துனர்கூட மச்சான் வகிக்கிற பதவி ஆதிக்கத்தில் விலையுயர்ந்த கார்களில் வலம்வந்து கொண்டிருப்பார்.இன்றைய குடியரசுஅரசியலில் குடும்பத்தை அண்டவிடாமற் பார்த்துக்கொண்டது அன்றைய அரசியல். அரசியலில் யாரையும் அண்டவிடாமல் பார்த்துக்கொள்கின்றன இன்றைய அரசியல் குடும்பங்கள். ஒரு குடும்பத்தைத் தவிர்க்க நினைத்தால் இன்னொரு குடும்பம் வந்து நிற்கிறது. குடும்பம் குடும்பமாக அரசியல் என்று சேர சோழ பாண்டியர்களைப்போல அரச பரம்பரைகளை உருவாக்கி கொண்டுவிட்டது இன்றையக் குடியரசு.இவையெல்லாம் சகஜமென்று மக்கள் ஏன் சமாதானம் செய்து கொள்கிறார்கள் என்றால் அரசியல் நடத்த பணம் வேண்டும். தேர்தலுக்குச் செலவிடவேண்டும். கட்சித் தலைமைக்குக் கொட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற கடப்பாடுகள் தான். பணமில்லாதவர்களையும் பணம் பார்க்க ஆசைப்படாதவர்களையும் மக்களும் அவ்வளவு பெரிதாக வரவேற்கத் தயாரில்லை. காரணம் தமக்கும் அவர்களிடமிருந்து வேண்டும் என்கிற தேவையும் எதிர்பார்ப்புகளும்தான்.இந்த நிலைமை இப்படியேதான் இருக்குமா? இதுமாற சாத்தியமுண்டா என்றால் முடியும் என்றுதான் தோன்றுகிறது. முயன்று பார்க்கிற முனைப்புதான் வேண்டும்.காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறுகிறவர்கள் ஒருபுறம், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பவர்கள் மறுபுறம். காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவது இருக்கட்டும்; முதலில் காமராஜர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இனிமேல் அரசியலில் இதெல்லாம் சகஜமென்று சமாதானம் சொல்லாமலும் சமரசம் செய்துகொள்ளாமலும் மாற்றத்தை நிகழ்த்த விரும்புகிற இளைஞர்களைக் கொண்டு ஒரு மாற்றத்தை நாளை நிகழ்த்திக் காட்ட வேண்டும். அரசு அலுவலகங்கள்'இங்கு லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது; யாருக்கும் கையூட்டு கொடுக்க வேண்டாம்' என்ற அறிவிப்புகளுக்குக் கீழமர்ந்து அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள் நமது அலுவலர்கள். இதைவிட அதிகமாய் அவர்களை கேவலப்படுத்த முடியாது. அரசு அலுவலர்கள் இதை அகற்றப் போராட வேண்டும். அரசே அவர்களை அவமானப்படுத்துவதாக நான் கருதுகிறேன். ஆனால் அரசு அலுவலகமென்றால் இதெல்லாம் சகஜம்தானே என்று மக்கள் நியாயப்படுத்தத் தொடங்கிவிட்ட பிறகு லஞ்ச லாவண்யங்கள் அமோகமாக கிளைவிட்டு, விழுதுவிட்டுப் படர்ந்த பிறகு அரசுக்கும் வேறு வழியில்லை. ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிலர் சிக்குகிறார்கள் என்றாலும் பலர் வாங்குவதும் இயங்குவதுமாக வளர்ந்தோங்கி விடுகிறார்கள். கொடுத்தாலும் வேலை நடந்துவிடுகிறது என்கிற நிம்மதியும், வாங்கினாலும் மனுஷன் வேலையை முடிச்சிகொடுத்திடுறான் என்கிற பாராட்டும் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்தி அதை ஒரு தேசியப் பண்பாடாகவே வளர்த்துவிட்டது வேதனைக்குரியது.அந்நாளில் லஞ்சம் வாங்குவது தவறு என்று உணர்ந்திருந்தார்கள்.பிறகு தவறில்லை என்று கருதினாலும் பயந்திருந்தார்கள். பயமிருந்தாலும் பாதியை மேலே கொடுத்தால் பழியில்லை என்றானது. இப்படி லஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக்கு காரணம் இதெல்லாம் அரசு அலுவலகங்களில் சகஜம் என்கிற நிலைப்பாடுதான். கண்காணிப்பு கேமராக்கள் மேலே இருப்பதிருக்கட்டும். கடவுள் என்று ஒருவன் பார்த்துக் கொண்டிருப்பதிருக்கட்டும். நமக்குள்ளே இருக்கிறதே மனசாட்சி; அதை ஏன் சாகடிக்கவேண்டும்?இப்படி அரசியலில், குடும்பங்களில், அரசுப்பணிகளில், பொது வாழ்க்கையில், கல்வியில் நாளின் நியாயம் (Order of the day) என்று தீயவற்றிற்குத் துணைபோவதும், நியாயப்படுத்துவதுமாக இருந்தால் நேற்றிருந்த நாளையும், நேற்று வாழ்ந்த நல்லவர்களை நாம் காண்பது எப்போது?முன்னுதாரணங்கள்“இப்படித்தான் இருக்கும்” என்பதை அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதாக நாம் முயன்று மாற்றினால்தான் நாடும் நாமும் எப்படி இருக்கவேண்டும் என்கிற நலமான நாள்கள் நமக்காக விடியும். தவறான முன்னுதாரணங்களைத் தவிர்த்து நல்ல முன்னுதாரணங்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் நமக்கும் நாட்டுக்கும் நல்லது. அப்படித்தான் இருக்கும் என்று இன்றைய நடைமுறைகளுக்கு நம்மை சமரசம் செய்துகொள்வதா? அல்லது இப்படித்தான் இருக்கவேண்டுமென்று நல்ல முன்னுதாரணங்களை பின்பற்றுவதா என்கிற தேர்வில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.எடுத்துக்காட்டாக யாரை, எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் நமக்கு ஒரு தெளிவு, இப்போது தேவையாக இருக்கிறது.-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement