Advertisement

மனிதாபிமானம் மிக்க மனிதர்கள்!

தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கில் முதியோர் இல்லங்கள் பெருகியுள்ளன. 'நியூக்ளியர் பேமிலி' எனப்படும், சின்னஞ்சிறு குடும்பங்கள் அதிகரித்து விட்டன; கணவன், மனைவி, ஒன்று அல்லது, இரண்டு குழந்தைகள் என்ற நிலை தான், அநேகமாக காணப்படுகிறது. அந்த குடும்பத்தின் ஆலமரமான, பெரியோர், அனாதரவாக விடப்படுகின்றனர்.நவீன வாழ்க்கை முறை மற்றும், கணவன் - மனைவி வேலைக்கு செல்லும் போது, சிறு குடும்பம் தான் லாயக்கு என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், முதிய பெற்றோர், தங்களுடன் இருப்பதை, பெரும்பாலான நவீன குடும்ப தலைவர்கள் விரும்புவதில்லை என்பது தான் உண்மை!கணவன் மற்றும் குழந்தைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு இடையூறாக, மாமனார், மாமியார் அல்லது பெற்றோரை வைத்துக் கொள்ள விரும்பாத போக்கு தான், இந்த இழி நிலைக்கு காரணம்.
'கணவன் வேண்டும்; கணவனின் பெற்றோர் வேண்டாம்' என, நினைக்கும் பெண்கள். 'தந்தை, தாய் தொணதொணப்பு சரிபட்டு வராது' என கருதும், இளம் வயது குடும்பத் தலைவனின், மனப்போக்கு தான் இதற்கு காரணம்.'மாமியார், வேண்டாத ஒரு ஜந்து' என கருதும், வேலை பார்த்துச் சம்பாதிக்கும் மருமகள்கள், தங்கள் தாய், தந்தையரைப் போற்றுவதற்குத் தவறுவதில்லை. அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே, வீடு பார்த்து, அங்கேயே குடி போய் விடுகின்றனர்.இதற்காக, அத்தகைய குடும்ப மருமகள்கள், பல நாடகங்களை நடத்தி, வெற்றியும் பெற்று விடுகின்றனர்.

சொந்த வீட்டில், பல ஆண்டுகளாக வசித்த மாமியார், மாமனாரை, அந்த வீட்டிலிருந்து, 'ஹைஜாக்' செய்து, முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.மத்திய, மாநில அரசு துறைகளில் பணி புரிந்து, ஓய்வு பெற்று, 25 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை அல்லது அதற்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறும் வயதானோர், வசதிகள் மிக்க, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், மாதக் கட்டணம் வாங்கும், நட்சத்திர ஓட்டல் சொகுசு வசதியுள்ள, முதியோர் இல்லங்களில் தங்கி விடுகின்றனர்.

மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும், பண வசதி இல்லாத முதியோரால், இந்த மாதிரி, சொகுசு வசதிகளுடன் கூடிய, முதியோர் இல்லங்களில் தங்குவது பற்றி, கனவு கூடக் காண முடியாது.நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு கீழான, முதியோர் பாடு தான் திண்டாட்டம். தனியார் நிறுவனப் பணிகளில், 60 வயது வரை, கடுமையாக உழைத்து, ஓய்வு பெற்ற, வயதானோரின் நிலைமை தான், மிகவும் பரிதாபமாக உள்ளது.இத்தகையோருக்கு, மாத ஓய்வூதியம் கிடையாது. ஓய்வு பெற்றதும், 'பிராவிடெண்ட் பண்ட், கிராஜுவிடி' என, சில லட்ச ரூபாய் கொடுக்கப்படுவதுடன் சரி. அந்த பணத்தில், குறிப்பிட்ட தொகையை, தங்களின் எதிர்காலத்திற்காக ஒதுக்கி வைக்கும் திறமை, இவர்களில் எல்லாருக்கும் வந்து விடாது.இத்தகையோர், ஓய்வு பெற்றதும் கிடைக்கும், கணிசமான பணத்தை, தங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்தில், 'தாம், துாம்' என, செலவு செய்து விட்டு, வாழ்வின் பிற்பகுதியில், கையில் பணமில்லாமல் திண்டாடு வது தான் யதார்த்தம்!பணியில் இருந்த வரை, மனைவி உயிரோடு இருந்தவரை, மகனிடமிருந்தும், மருமகளிடமிருந்தும் மரியாதை, கவனிப்பை பெற்ற முதியோர் நிலைமை, ஓய்வு பெற்ற பிறகு, தலை கீழ். ஊதியமும் வராது; பென்ஷனும் இருக்காது என்ற நிலையில், கறவை நின்று போய் விட்ட, பசு மாட்டின் நிலைக்கு, அந்த வயதான மனிதர் தள்ளப்படுகிறார்.

இன்னும் சிலர், தாங்கள் உயிருடன் இருக்கும் போது, சம்பாதித்து, பணம் சேர்த்து, கடனும் வாங்கி, கட்டிய சொந்த வீட்டை, மனைவி அல்லது மகன் பெயருக்கு, பத்திரம் எழுதிக் கொடுத்து விடும், அடி முட்டாள் தனத்தைச் செய்கின்றனர். வயதான காலத்தில், ஐந்துக்கும், பத்துக்கும், மகன் அல்லது மருமகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்பதை, அவர்கள் யோசிப்பதில்லை.அத்தகைய பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள் தான், சாலைகளில் திரிகின்றனர். கொஞ்சம் புத்திசாலித்தனமானவர்கள், கிடைக்கும் முதியோர் இல்லங்களில் புகுந்து கொள்கின்றனர். சிலர், தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.நன்றாக வாழ்ந்த வாழ்க்கையும், ருசியாக சாப்பிட்ட நாக்கும், சாகும் வரை, அவர்களை இம்சைக்கு உள்ளாக்குகின்றன.அத்தகைய அபலைகளுக்கு, நல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கும், உன்னத பணியில், சில நல்ல உள்ளங்கள், தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. தங்களை நாடி வருபவர்களுக்கு மட்டுமின்றி, தவிப்பில் உள்ள பல முதியோருக்கு தேவையான உதவிகள் செய்து, கட்டண முதியோர் இல்லங்களில் அல்லது விரும்புவோர் வீடுகளில் சேர்த்து விடும் பணியை, சேவையாக செய்கின்றனர்.மனிதாபிமானத்துடன் உயர்ந்த சேவை புரியும், எனக்கு தெரிந்த சிலரை, இங்கே குறிப்பிடுகிறேன்.ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த, சொக்கலிங்கம், இதுவரை, 450க்கும் மேற்பட்ட முதியோரை, 'கரை' சேர்த்துள்ளார். ஏழை நெசவாளரான அவர், பிறரின் உதவியுடன், முதியோர் பாதுகாப்பு, அவர்களுக்கான அரவணைப்பு சேவையில் தன்னலமற்று ஈடுபட்டுள்ளார்.அவரை நாடி வரும் முதியோர் மட்டுமின்றி, பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் பரிதவிக்கும் முதியோர் மற்றும் குழந்தைகளையும், பத்திரமாக மீட்டு, அவர்கள் புது வாழ்வு வாழ, வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்.அவரைப் போல, துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, உலகநாதன் முருகன், அந்த ஊரில், முதிய தம்பதியர் சொந்த மாக வீடு வாங்கி, தங்கள் வயோதிக காலத்தை கழிக்க, உதவி செய்கிறார். 'சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில், 40 லட்ச ரூபாய்க்கு மேல், முதியோர் காப்பகங்களில் செலவழிப்பவர்களுக்கு, ஸ்ரீவைகுண்டத்தில், வசதியான வீடுகள், 15 லட்ச ரூபாயில் கிடைக்கும்' என்கிறார்.மனைவி இறந்த, சோக நிலையிலும், உடல் நலக்குறைவிலும், இதை சேவையாக செய்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான கிராம வாழ்க்கைக்கு, ஸ்ரீவைகுண்டம் ஏற்றது என்பது, இவரது யோசனை.இவர்களைப் போல, ஈரோடு ஆனந்தன், குருகுல கல்வியை, குறைந்த செலவில், ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். அத்துடன், தன்னால் இயன்ற வகையில், முதியோர் அடைக்கல பணிகளையும், பிறரின் ஒத்துழைப்புடன் செய்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், முழு நேரமாக இந்த சேவையில் ஈடுபட்ட இந்த முதியவர், இப்போதும் இந்த சேவையை செய்கிறார்.இவர்களுடன் சேர்ந்து நானும், உதவி தேவைப்படும் முதியோருக்கு, அடைக்கல, அரவணைப்பு ஏற்பாடுகளை செய்கிறேன். வசதி உள்ளவர்களை அணுகி, அவர்களின் வீடுகளில் அல்லது பிற இடங்களில் தங்க வைக்க, ஏற்பாடு செய்கிறோம்.

அதற்காக, ஐந்து நட்சத்திர ஓட்டல், சொகுசுடன், முதியோருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என, அர்த்தமில்லை. தங்களின் வயதான காலத்தை, எந்த பிரச்னையும் இன்றி கழிக்க, எளிய வழிமுறைகளை செய்து கொடுக்கிறோம்.பெரிய வீடு, வசதி, வாய்ப்பு இருப்பவர்களை அணுகி, அவர்கள் வீட்டில், ஒன்றிரண்டு முதியோரை தங்க வைக்கிறோம். அதை ஏற்றுக் கொள்ளும் வெகு சிலர், தங்கள் பெற்றோர் போல, அந்த புதிய பெற்றோரை அரவணைத்துக் கொள்கின்றனர்.தங்கள் சொந்த அப்பா, அம்மாவைப் போல கருதி, அந்த முதியோர் வசிக்க, அறை ஒதுக்கி, கவுரவமான உணவு வழங்கி, மருத்துவ சிகிச்சைகளுக்குச் செலவும் செய்து, உரையாடி, மகிழ்ச்சி அடைய செய்து, புண்ணியத்தை தேடிக் கொள்கின்றனர். இதை, ஆண்டவன் விரும்பும், தெய்வீக சேவையாக மேற்கொள்கின்றனர்.இத்தகைய எண்ணம் கொண்டோர், வெகு சிலரே. இன்னும் பலருக்கு, அத்தகைய எண்ணம் வர வேண்டும்; வயதான காலத்தில் துன்பத்தை அனுபவிக்கும் முதியோரை, பராமரிக்க வேண்டும் என்பது தான், என் சிந்தனையின் விருப்பம்.'நம் சொந்தத் தாய், தந்தையர், உயிரோடு இருந்த காலத்தில், நம்மால் அவர்களைச் சரியான படி, கவனிக்க முடியாமல் போய் விட்டது. நமக்கு இப்போது வசதியும் பெருகியுள்ளது.'முதியோரை பேணுவது இறைவனுக்குச் செய்யும் சேவை என்ற எண்ணமும் உதித்துள்ளது. எனவே, நம் தாய், தந்தையருக்குச் செய்யத் தவறிய சேவைகளுக்கு பிராயச்சித்தமாக, உதவி தேவைப்படும், வேறொரு முதிய தம்பதியரை பராமரிப்போம்' என்ற மனோபாவம், பலருக்கும் வர வேண்டும்.மூதறிஞர் ராஜாஜி, பல உயரிய பதவிகளை வகித்து, ஓய்வு பெற்ற நிலையில், வயது முதிர்ந்த காலத்தில், 'சுதந்திரா கட்சி'யை துவக்கினார். அப்போது பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேருவின், சோஷியலிஷக் கொள்கையை, அவர் மதிக்கவில்லை.மாறாக, 'நமக்கு சோஷியலிசம் என்ற வெளிநாட்டுக் கொள்கை எல்லாம் வேண்டாம். நம், அவ்வைப் பாட்டி அறிவுறுத்திய, 'ஒப்புறவு' என்ற, நடவடிக்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள், வசதியற்றவர்களுக்கு, அவர்கள் கேட்காமலே, ஓடிச்சென்று உதவுவது தான் ஒப்புறவு' என்றார்.வயதாகி, ஆதரவற்றவர்களாகி விட்ட முதியோருக்கு, ஆதரவு அளித்து, அரவணைக்க வேண்டும் என்ற எண்ணம், தமிழகத்தில் உள்ள, வசதியுள்ள எல்லாருக்கும் ஏற்பட வேண்டும். அத்தகைய எண்ணம், வந்து விட்டால், கட்டண முதியோர் இல்லங்கள் காணாமல் போய் விடும்.முதியோருக்கு தேவையான, அரவணைப்பிற்கான ஏற்பாடுகளை, மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்து வரும், எனக்கு தெரிந்த, மூவருடன், என் மொபைல் போன் எண்ணும் கீழே!சொக்கலிங்கம், ஈரோடு 9486307484உலகநாதன் முருகன், ஸ்ரீவைகுண்டம் 9597851309ஆனந்தன், ஈரோடு 9080970830இவர்களுடன் நான், சுப்ர.அனந்தராமன், சென்னை - 8099107855

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    அருமை .நீங்கள் வாழுங்கள் வளமுடன் நலமுடன் .

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Naarpathu vayathu thaandiyavargal Petra pillaikalaikooda nambakoodaathu sivajiganesan nadiththa vaalkai thiraipadathai naarpathuvayathukadantha Vargal paarkanum

  • Ramalingam Gurusamy - Toronto ,கனடா

    வசதி வாய்ப்பு உள்ளவர்கள் முதியோர்களை ஆதரித்து, அரவணைப்பு செய்கின்ற கலாச்சாரமும், திறந்த மனமும் பெருகிடவும், முதியவர்களை ஆதரிக்கின்ற மனப்பக்குவமும் வரவேற்புக்குரியது அவை நாளும் பெறுகிட இறைவனை வேண்டுகிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement