Advertisement

என்ன ஆகப் போகிறது இலங்கையில்?

கடந்த ஒரு வாரமாக இலங்கை அரசியலில் நிலவிவந்த பரபரப்பு, உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு பார்லிமென்ட்டை கலைத்து, மக்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார், இலங்கை அதிபர் சிறிசேனா.அதன்படி, வரக்கூடிய ஜனவரி மாதம், 5ஆம் தேதி, தேர்தலை எதிர்நோக்கியுள்ளது இலங்கை.


கடந்த சில வாரங்களுக்கு முன், யாரும் எதிர்பாராதவிதமாக, ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.அந்த இடத்துக்கு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கொண்டுவந்தார் இலங்கை அதிபர் சிறிசேனா. 'என்னை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது' என்பதே, இந்நடவடிக்கைக்கு அதிபர் சிறிசேனா முன்வைத்த காரணம்.ரணிலுடன் இனி எக்காலத்திலும் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்றும், நாட்டை தவறான பாதைக்கு ரணில் இட்டுச்செல்வதாகவும் குற்றச்சாட்டினார் மைத்திரிபால சிறிசேனா.


ராஜபக்சேவின் நியமனத்தை வரவேற்காத அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள், உடனடியாக பார்லி.,யைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரி வந்தன. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பார்லி.,யில், ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க, 113 இடங்கள் தேவைப்பட்டன.அன்றைய நிலையில், ராஜபக்சேவுக்கு, 96 உறுப்பினர்களும், ரணிலுக்கு, 103 உறுப்பினர்களும் ஆதர வாக இருந்தனர்.


பெரும்பான்மைக்கு, 113 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், இலங்கை அரசியலில் குதிரை பேரம் சூடுபிடித்தது. 50 கோடி ரூபாய் துவங்கி, 300 கோடி ரூபாய் வரை, ஒவ்வொரு உறுப்பினருக்கும் விலை பேசப்பட்டதாக, ஊடங்களில் தகவல்கள் கசிந்தன.எதிர்முகாமில் ஆட்களைப் பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபட்ட, ராஜபக்சே தரப்பு பலம், 'மளமள'வென கூட்டியது.ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் சரியத் துவங்கியது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற, ராஜபக்சே தரப்பு பல முயற்சிகளை செய்தது.எனினும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு என்பதில், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி யாக இருந்தார். இவர்களிடம் 15 உறுப்பினர்கள் கைவசம் இருந்தனர்.இதனிடையே, நவம்பர் 16ஆம் தேதி பார்லி., கூட்டப்பட்டு, பெரும்பான்மை நிரூபிக்கப்படும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்தார். அதன்பின், இரண்டு நாட்கள் முன்கூட்டியே தேதியை மாற்றி, நவம்பர் 14, பார்லி., கூட்டப்படும் என்று கூறி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.


ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையின் வெளிப்பாடாகவே அந்நடவடிக்கை அமைந்தது.இதனிடையே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட நாடுகளும், பார்லி.,யைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அழுத்தம் கொடுத்தன.இதைத் தொடர்ந்தே, நேற்று முன் தினம் நள்ளிரவு, பார்லி.,யைக் கலைத்து அதிரடியாக உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா.


இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று, மகிந்த - சிறிசேனா தரப்பினரிடையே ஆலோசனை நடத்தப்பட்டது.அதில், மகிந்த ராஜபக்சேவை தலைவ ராக ஏற்றுக்கொள்ள அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நள்ளிரவில், பார்லி., கலைக்கப்படுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிபர் சிறிசேனா.


எனினும்,சமீபத்தில் நிறைவேற்றபட்ட,19-வது சட்ட திருத்தத்தின்படி,பார்லி.,யை கலைப்பதற்கு, 150 எம்.பி.க்களின் பரிந்துரை வேண்டும். ஆனால் அதன்படி எதுவும் இல்லாமல் சிறிசேனா கலைத்து விட்டார் என்றும், விமர்சனங்கள் எழுந்துள்ளன. இம்முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, ரணில் தரப்பு முடிவெடுத்துள்ளது. சிறிசேனாவின் நடவடிக்கையால், உலக நாடுகளும், ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கண்டனங்கள் வெளியிட்டுள்ளன.


தேர்தல் நடத்தப்பட்டால், கூட்டணி மூலம் எளிதாக, 70 சதவீத வாக்குகள் பெற முடியும் என்று, சிறிசேனா - ராஜபக்சே தரப்பினர் கணக்கு போட்டு வருகின்றனர்.ஐக்கிய தேசிய கட்சி, ரணிலுக்கு பதிலாக,சஜித் பிரமேதாசாவை தலைவராககொண்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறது. இலங்கையில் அதிபர் சொன்னபடி தேர்தல் நடக்குமா அல்லது அதிபரின் அறிவிப்பில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்யுமா என்பதை, இனி வரப்போகும் காலங்களில், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆரூர் சலீம்,


இ-மெயில்:saleem1090@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement