Advertisement

சிவகாசியில் ஒரு சிரிப்பு மாஸ்டர்

சிவகாசியில் ஒரு வேலை

சென்ற வேலை முடிந்தபிறகு நேரம் நிறைய இருந்தது.

போனில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நண்பர் கிரிதரனை அழைத்தேன் நேரில் பார்க்க இயலுமா?என்று கேட்டேன்.

நண்பர் கிரிதரன் சிவகாசியில் உள்ள சிறந்த போட்டோகிராபர்களில் ஒருவர்,இயற்கை ஆர்வலர் ,பண்பாளர் என்பதுதான் அவரது முகமாக அறிந்திருந்தேன் பார்த்தபிறகுதான் மற்றுமொரு புதிய முகத்தை அறிந்துகொண்டேன்.

அந்த முகம் எந்த நேரத்திலும் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்கவைக்கும் முகம்.அவருடன் பேசிக்கொண்டிருக்கும் யாருக்கும் அடுத்த சில நிமிடங்களில் அவரது சிரிப்பு தொற்றிக்கொள்வது நிச்சயம்.

சம்பாதிப்பதற்காக வாழ்ந்தது ஒரு காலம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக வாழ்வதே எனது நிகழ்காலம் என்றவர் வாங்க ஒரு இடத்திற்கு போகலாம் என்று தனது வாகனத்தில் சிவகாசிக்கு வெளியே உள்ள வெம்பக்கோட்டை என்ற ஊரில் உள்ள சோபியா ஆதரவற்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிட பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

இவர் போவதற்கு முன்பாகவே இவரது ஏற்பாட்டில் அங்குள்ள குழந்தைகளுக்கு கம்பு கொலுக்கட்டை, துளசி டீ போன்ற சிறுதானிய சிற்றுண்டிகள் போய்ச் சேர்ந்துவிட்டதால் அதைச் சாப்பிட்ட குழந்தைகள் தெம்பாக இருந்தனர்.

இவரைப் பார்த்ததும் அப்படி ஒரு அன்புடன் பாசத்துடன் ஒடிவந்தனர் வந்த உடனேயே தலையில் கொம்பு போல கைவைத்து ‛ஹாய் ஹாய்' எனச் சொல்லி அப்படி ஒரு சிரிப்பு சிரித்து வரவேற்றனர்.

சிரிப்பு யோகா என்பது வாய்விட்டு சிரித்துக்கொண்டே செய்யும் யோகா இப்போதுதான் பரவலாகிவருகிறது.இதைக் கற்றுக்கொண்ட பிறகு எனது வாழ்க்கை முறையே மாறிவிட்டது இதன் காரணமாக இதனை முழுமையாக கற்றுக்கொண்ட நான் இப்போது சிரிப்பு யோகா மாஸ்டராகிவிட்டேன்

சிவகாசியில் மாறன் ஐயா இயற்கை நல்வாழ்வு முகாம் நடத்தும் நாட்களில் நானும் இலவசமாக சிரிப்பு யோகா நடத்துகிறேன்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த குழந்தைகளுக்கு இந்த யோகாவை கற்றுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்து நானும் மகிழ்கிறேன் வாங்க இப்ப யோகாவிற்கு போகலாம் என்றார்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் ஆண் பெண் மாணவர்கள் அனைவரும் அவருக்கு முன் எப்போது இவர் யோகாவை ஆரம்பிப்பார் என்ற ஆர்வத்துடன் உட்கார்ந்து இருந்தனர்.

தலையில் ஒரு கோமாளி குல்லாவை கிரிதரன் போட ஆரம்பித்ததுமே குழந்தைகளிடம் சிரிப்பும் ஆரம்பித்துவிட்டது அடுத்த அரைமணி நேரம் அந்த இடத்தில் அப்படி ஒரு சிரிப்பு பார்வையாளராக கலந்து கொண்ட நானு்ம வாய்விட்டு சிரித்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

ஒன்றுமில்லை வயிற்றில் கையை வைத்துக் கொண்டு மூச்சை வேகமாக வெளியே விடுவது ஒருவித யோகா,மூச்சை வேகமாக வெளியே விடும்போது ஹா ஹா என்று சிரித்துக்கொண்டே வெளியே விடுவதுதான் சிரிப்பு யோகா.

இது சரியா? யோகா முறையா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டியது இல்லை. செய்து முடித்த உடன் மனமும் உடம்பும் அப்படி ஒரு சந்தோஷத்தில் திளைக்கிறது இப்படி ஒரு பலன் இதில் கிடைக்கும் போது இந்த சிரிப்பு யோகாவில் திளைப்பது நலமே.

இங்குள்ள குழந்தைகளில் பலருக்கு அப்பா அம்மா என்று யாருமே கிடையாது உணவும் உடையும் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், அத்துடன் அன்பையும் அதைவிட ஆனந்தத்தையும் சிரிப்பு யோகா மூலமாக என்னால் கொடுக்க முடிகிறது என்பதே எனக்கு பாக்கியம்தான்...நான் வாட்ஸ் அப் பேஸ் புக் என்று எதிலும் இல்லை அதற்கான நேரத்தை செலவிடுவதை விட பேசும் பொற்சித்திரங்களான இந்த குழந்தைகளிடம் நான் என் நேரத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செலவிடுகிறேன் என்று சொல்லும் கிரிதரனிடம் பேசுவதற்காக எண்:98430 77693.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in
Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • rathish -

    ிநான் கல்லூரி பயிலும் போது மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணி முகாமிற்க்கு மாறன் ஜி உடன் வந்தவர் என நினைக்கிறேன்

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    இவரோட பேசலாமா? அனுமதிப்பாரா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement