Advertisement

வலியுடன் புயலில் வழியில்...

கஜா புயல் வீசிய பகுதிகள் கலவர பூமிபோல காட்சி தருகிறது.

புயல் வீசிய பகுதிகளில் அமைதி நிலவும், பாதிப்புகள் சீரமைக்க துவங்கி இருப்பர் என்று நினைத்து சென்றால் நிலமை தலைகீழாக இருக்கிறது.

சாலை நடுவில் இருந்த மரங்களை இழுத்து ஒரமாக போட்டு போக்குவரத்தை பிரதான சாலையில் விட்டு இருக்கிறார்களே தவிர மற்றபடி பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

நாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் அவலம் நடந்த பகுதிகளில் சைரன் கார் முழங்க பத்து இருபது கார்களுடன் அணிவகுத்து செல்வதைக்கூட இன்னும் குறைத்துக் கொள்ளவில்லை.

நாகையில் இருந்து வேதாராண்யம் வழியாக கோடியக்கரை வரையிலான மெயின் ரோட்டில் சுமார் ஐம்பது கிலோமீட்டர் துாரத்திற்கு ஒரு அணிவகுப்பு நடத்திவிட்டு திரும்பி விடுகின்றனர். மெயி்ன் ரோட்டில் இருந்து மக்கள் வாழும் பகுதியின் உள்ளே சென்றால்தான் அவர்களது வேதனை புரியும் அவலம் தெரியும்.

இத்தனை முறை வந்து போனாலும் வேரறுந்த ஒரு புளிய மரத்தை முட்டுக்கொடுத்து ஒரு வாரமாக நிறுத்திவைத்திருக்கிறேன் எப்போது வேண்டுமானாலும் வீட்டின் மீதும் என் மீதும் விழலாம் என்று பார்க்கும் உங்களுக்கு தெரிகிறது தெரிய வேண்டியவர்களுக்கு ரியவி்ல்லையே என்கிறார் வாய்மேடு என்ற பகுதியில் உள்ள மூதாட்டி.

வானவன் மாதேவி என்ற சுமார் 350 குடும்பங்கள் கொண்ட மீனவ கிராமத்தை புயல் புரட்டி போட்டுவிட்டது அவர்களது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகள் இவர்களது வாழ்க்கையைப் போலவே.

வீசியெறியப்பட்டு நொறுங்கி்க்கிடக்கிறது எங்கும் இல்லாத மின்சாரம் இங்கும் இல்லை பக்கத்து கிராம மீனவர்கள் கடல் வழியாக கொண்டுவந்து கொடுக்கும் அரிசி பருப்பில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், அடுப்பு எரிக்க தேவையான மண்எண்ணெய் கூட கிடைக்காமல் காத்து கிடந்தே சோர்ந்து போய்விட்டனர்.

யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் கடலை நம்பி வாழ்ந்தோம் இன்னும் கொஞ்ச நாள் எங்களுக்கு எந்த நிவராணமும் கிடைக்காவிட்டால் கடலில் விழுந்தே மாய்வோம் என்கின்றனர் கேட்கவே சோகமாக இருக்கிறது.

லாரி லாரியாக வரும் நிவாரண பொருட்கள் எங்கு போகின்றன என்றே தெரியவில்லை தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் பிஸ்கட் பாக்கெட்டிற்காக கையேந்தியபடி வாகனங்களின் பின்னால் ஓடுகின்றனர்.

கொட்டும் மழையில் அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து ஏதாவது சாப்பாடு போர்வை இருக்கிறதா? என்று கேட்டு வாங்கிக்கொள்கின்றனர்.

கடந்த புயல்களில் தாக்குப்பிடித்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலய காடுகள் அழிந்து கிடக்கிறது கடல் மண்ணால் சேதமடைந்துள்ளது உள்ளே சென்று முழுமையாக பார்த்தால்தான் தெரியும் எத்தனை ஜீவன்கள் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று.

பள்ளிக்கூட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது சேதமடையாத கட்டிடங்கள் தற்காலிக நிவாரண முகாம்களாகியுள்ளது அனைத்தையும் இழந்தவர்கள் உடுத்திய உடைக்கு மாற்று உடை கூட இல்லாமல் இங்கே தவிக்கின்றனர் கொஞ்சமாய் சாப்பாடு கிடைக்கிறது சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர் அவ்வளவுதான்

ஆரியக்காரன்புலம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக் கூரையை ஆசிரியர்களே ஆள்வைத்து சீரமைக்கின்றனர் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும் என்ற கவலை அவர்களுக்கு.

திருவாரூர் வரும் வழியில் அமளூர் என்ற இடத்தில் நடு ரோட்டில் சிறுவர்கள் நிவராணத் தொகை என்று எழுதப்பட்ட பாத்திரத்தை வாகனங்களில் செல்பவர்களிடம் காசு கேட்கின்றனர் இது அவர்களுக்கோ பெற்றோர்களுக்கோ கேவலம் கிடையாது அரசுக்குதான் என்பதை உணரவேண்டாமா?

ஆலங்காடு என்ற இடத்தி்ல் புயலால் கொஞ்சமாய் சிதைந்த பஸ் நிறுத்தம், அதையே தட்டிவைத்து அடைத்து தனக்கான வீடாக்கி கொண்டுள்ளார் ஒருவர், கேட்டால் ‛வேறு வழி? நடுரோட்டிலா உடை மாற்றவோ உறங்கவோ முடியும்' என்கிறார் கோபத்துடன்.

திருவாரூம் மாவட்டம் கீழக்காடு என்ற இடத்தில் அரிசி தருவதாக கேள்விப்பட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பேர் காத்துகிடக்கின்றனர் எப்போது தருவார்கள் யார் தருவார்கள் எதுவும் தெரியாது தந்தால் பொங்கி சாப்பிடுவோம் இல்லாவிட்டால் எங்காவது வாங்கி சாப்பிடுவோம் என்கின்றனர் விரக்தியாக

பட்டு்க்கோட்டையில் முதல்சேரி என்ற இடத்தில் விழுந்துகிடக்கும் மின் கம்பத்தை துாக்கி நிறுத்தக்கூட மின் ஊழியர் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மின் ஊழியர்களையும் அமைச்சர் முகாமிட்டு இருக்கும் நாகை பகுதிக்கு அனுப்பிவிட்டால் மற்ற ஊர்களில் எப்படி இருப்பர் அங்கே குவிந்துள்ளவர்களில் நுாறில் ஒரு பங்கினரை மற்ற ஊர்களுக்கும் சீரமைக்க அனுப்பிவைக்க வேண்டும்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் அழுகுரல் இன்னும் அடங்கவேயில்லை சொல்லப்போனால் இப்போதுதான் பெருங்குரலெடுத்து அழுகின்றனர் பிள்ளையை விட உன்னை நம்பித்தானே வாழ்ந்தோம் இனி யாரை நம்பி வாழ்வோம் என்று தென்னையை இழந்தவர்களும்,கதிர் சூழ் பிடிக்கும் நேரம் காற்றடித்து கருச்சிதைவு போல நடந்துவிட்டதே என்று நெல்விவசாயிகளும் இன்னும் வாழை உள்ளீட்ட விவசாயத்தில் ஈடுபட்டவர்களும் ஏற்பட்டுவிட்ட இழப்பை தாங்காமல் அழுகின்றனர்.

இது மக்களின் துயர் துடைக்க கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்ற எண்ணத்துடனும் நிறைய மனிதாபிமானத்துடனும் அரசு எந்திரம் உடனடியாக சுற்றி சுழன்று பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement