Advertisement

கஜா நிவாரண நிதிக்காக அமெரிக்காவில் ‛மொய் விருந்து'.

எத்தனைதான் 2.0 வும், சர்க்காரும் சந்தடி செய்தாலும் மனம் கஜா புயல் பாதிப்பை நினைத்துதான் வருந்துகிறது

காரணம் அங்கு இருந்து வரும் செய்திகள்தான்

இன்னமும் நிவாரணங்கள் எட்டாத கடலோர கிராமங்களில் இருந்துவரும் கூக்குரல் அரசாங்கத்திற்கு கேட்டதோ இல்லையோ அமெரிக்காவிற்கு கேட்டுவிட்டது.

அமெரிக்காவில் உள்ள கரோலினா வாகை
பெண்கள் தன்னார்வக்குழுவினர் நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று சிந்தித்து எடுத்த முடிவுதான் ‛மொய் விருந்து.' வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரான யாமினி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.இந்த மொய் விருந்து பணம் திருப்பித்தரப்பட வேண்டாத ஒன்று என்பதுதான் முக்கியம்.


பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு மொய் விருந்து என்ற பெயரில் உறவினர்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற தொகையை அளிக்கின்றனர். அந்தத் தொகையின் மூலம் சம்பந்தப்பட்ட நபர் விவசாயம் அல்லது தொழில் செய்து தன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் தனக்கு மொய் அளித்தவர்கள் வீட்டு விஷேசத்தில் தான் பெற்ற மொய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இது தான் மொய் விருந்தின் தாத்பாரியம்.இந்த மொய் விருந்தின் பிறப்பிடம் தஞ்சை மாவட்டம் என்றாலும் புதுக்கோட்டை மாவட்டம் வரை பிரபலமாகியுள்ளது.

திட்டமி்ட்டபடி நடைபெற்ற மொய் விருந்தில் பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து நவீன உணவு வகைகள் வரை இடம் பெற்றிருந்தது. இந்த மொய் விருந்தில் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் தமிழர்கள் தமது குடும்பத்தினர்களுடன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிட்ட போரூர் இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான முனைவர்.பூங்குழலி குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிகழ்வாக இது இங்கு நிகழ்த்தப்பட்டாலும், தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கு வாழும் தெலுங்கர்கள்,கன்னடர்கள்,மலையாளிகள் என இந்தியர்களாக ஒன்றுகூடி சங்கமித்தது மனிதநேயத்தை உறுதிப்படுத்துவதாகவும், அதன் பெருமையை வெளிக்கொணர்வதாகவும் இருந்ததாக தெரிவித்தார்.

இம்மொய்விருந்து விழாவில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அளித்த நன்கொடை மூலம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பிர்க்கு 3 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்)வசூலாகியுள்ளது. இந்தப்பணத்தைக் கொண்டு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சோலார் விளக்குகள் அமைக்க இருப்பதாக இந்த நிகழ்வை தமிழ்நாட்டில் இருந்தபடியே ஒருங்கிணைத்த சிகரம் சதிஷ்குமார் கூறினார்.

இந்நிகழ்வு சிறக்க ஜெனிபர், அனிதா,அருள்ஜோதி,
திவ்யா,பிரேமலதா, நாகராணி,சத்யா,
கலைச்செல்வி,கிருஷ்ணவேணி,தேவகி என ஒரு மிகப்பெரிய மகளிர் பட்டாளமே இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் வாகை குழு நடத்திய மொய்விருந்தை தொடர்ந்து, அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் மிகமுக்கிய நகரங்களில் ஒன்றான டல்லாஸில் வரும் 16 ம் தேதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக நிதி திரட்டும் முயற்சியாக அங்குள்ள தமிழ்க்குடும்பங்களுடன் ஒன்றுசேர்ந்து மொய்விருந்து நிகழ்வினை தமிழ் மலரும் மையம் என்கிற தமிழ் கற்பிக்கும் பள்ளி முன்னெடுத்து நடத்த உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கீதாசுரேஷ், ஜெய் நடேசன், சதிஷ்,செந்தில்குமார், பிரவீனா ஆகியோர் செய்துவருகின்றனர்.

வட கரோலினாவி்ல் நடந்த மொய் விருந்தை தவறவிட்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் 16ம் தேதி டல்லாஸில் நடக்கவிருக்கும் மொய்விருந்தை தவறவிடாமல் கலந்து கொள்வீர்,புயல் பாதித்தவர்களின் கண்ணீர் துடைப்பீர்,நன்றி!

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement