Advertisement

யார் வலையில் யார் சிக்குவர்?

கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட மேடையில், 'ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்' என, உணர்ச்சி பொங்க, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் சொன்ன போது, ஒரு கதை நினைவிற்கு வந்தது.புலவன் ஒருவன், அரசனிடம் வருகிறான். பணிவாய் வணக்கம் வைத்து, 'மன்னா... நீங்கள் மாபெரும் வெற்றியை பெறப் போகிறீர்கள்' என்கிறான். 'அப்படியா... மிக்க மகிழ்ச்சி. உனக்கு, 100 பொற்காசுகள் தரச் சொல்கிறேன்' என்கிறான் மன்னன்.'ஆஹா... மன்னரை புகழ்ந்து பேசினால் பொற்காசுகள் கொட்டும்' என, அகம் மகிழும் புலவன், 'இந்த உலகம், உங்கள் காலடியில் விழப்போகிறது' என்கிறான். மறுபடியும் குஷியாகும் அரசன், 'அருமை... அருமை... உனக்கு, 500 பொற்காசுகள் நிச்சயம்' என்கிறான்.புலவனுக்கு இன்னும் ஆசை. 'மன்னா... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது' என்கிறான். அகம் குளிர்ந்த மன்னன், 'உனக்கு, 1,000 பொற்காசுகள்' என்கிறான்.பொற்காசுகள் வரும் என, புலவன் காத்திருந்த போது, 'புறப்படுங்கள்' என, மன்னன் சொல்ல, பதறிய புலவன், 'மன்னா... எனக்கான பொற்காசுகள் எங்கே...' என கேட்க, புன்னகைத்த மன்னன், 'உனக்கு எதற்கு பொற்காசுகள்... நீ என்னை மகிழ்விக்க பாராட்டினாய்.'நான் உன்னை மகிழ்விக்க பொற்காசுகள் தருவதாய்ச் சொன்னேன்; அவ்வளவு தான்... இரண்டிற்கும் சரியாகப் போய்விட்டது' என்கிறான். வெளிறிப்போய், வெளியேறுகிறான் புலவன்.இந்த கதை நினைவூட்டிய புலவன் யார்; அரசன் யார் என்பதை, கட்டுரையை படித்து பார்த்து, புரிந்து கொள்ளுங்கள்.'ராகுல் வருக... நாட்டுக்கு நல்லாட்சி தருக... நாசிஸ, பாசிஸ மோடி அரசை வீழ்த்தும் வல்லமை, ராகுலுக்கு உண்டு; ராகுல் கரத்தை வலுப்படுத்துவோம்; நாட்டை காப்பாற்றுவோம்' என, ராகுலை, பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்தார்.ஆனால், அதற்கு, ராகுலிடம் இருந்து, எந்த ஒரு நன்றி வார்த்தையும் இல்லை. சரி... சோனியாவாவது, ஸ்டாலினுக்கு நன்றி சொல்வார் என, எதிர்பார்த்தால், அவரும், கருணாநிதி புகழ் பாடியதோடு, நின்று விட்டார்.இத்தனைக்கும், 'சோனியாவின் பிள்ளையாய், ஸ்டாலின் அருகில் அமர்ந்திருக்கிறார்' என, துரைமுருகன் நெகிழ்ந்தும், சோனியா, பக்குவமாக நழுவி விட்டார்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூட, ஸ்டாலின் முன்மொழிந்ததை, வழிமொழியவில்லை. எதிரே கூடியிருந்த கட்சியினர் மத்தியில் கூட, ஆரவாரம் இல்லை. 'ஸ்டாலின் ஏன் இப்படி, கைகளை உயர்த்தி, ஆவேசப்படுகிறார்' என, அவர்கள் யோசித்துக் கொண்டிருந்த போதே, ஸ்டாலின் பேசி முடித்து, இருக்கைக்கு சென்று விட்டார்.மேடையில் இருந்தவர்களாவது, ஸ்டாலினின் அறிவிப்புக்கு, பாராட்டு தெரிவித்தார்களா என்றால், ஒருவர் கூட, பிரதமர் வேட்பாளர் குறித்து, ஸ்டாலின் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கவில்லை.இது, ஒரு புறம் இருக்கட்டும். பிரதமர் பதவிக்கு, ராகுல் தகுதியானவர் என்பதை, கூட்டணியில் இருக்கும் பிற தலைவர்கள் உணர்வதற்கு முன், முந்திரிக்கொட்டை போல, எதன் அடிப்படையில், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது, கூட்டணியிலேயே பலருக்கு புலப்படவில்லை.நாட்டிற்கு நல்லாட்சி தரும் அளவிற்கு, ராகுலில் நிர்வாகத் திறனை, எதை வைத்து, ஸ்டாலின் அளந்தார் என்பதும், அவர்களுக்கு தெரியவில்லை. சமீபத்திய மூன்று மாநில தேர்தல் வெற்றிகள் மட்டும், ஸ்டாலினுக்கு போதுமானதாகி விட்டதா... ஸ்டாலினுக்கு தான் வெளிச்சம்!காங்கிரஸ் தலைமையில், தி.மு.க., உள்ளிட்ட, 21 கட்சிகள் நட்பாக இருப்பது போல் தோன்றினாலும், மூன்று மாநில தேர்தல் வெற்றிக்குப் பிறகும், யாரும் ராகுலை, பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கவில்லை... ஸ்டாலினைத் தவிர! காரணம், இந்த கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான தலைவர்களுக்கு, ராகுலை விட, பிரதமர் கனவு அதிகம். ஸ்டாலினுக்கு இல்லாததால், 'சட்'டென அறிவித்து விட்டார்!இதை இப்படி யோசிப்போம்...'ராகுல் தான், பிரதமர் வேட்பாளர்' என, காங்., கூட்டணியில் யாரும் அறிவிக்கப் போவதில்லை. ஆனால், காங்கிரசிற்கு அந்த அறிவிப்பு அவசியம். காங்கிரசே அதை அறிவிக்குமாயின், தற்போதைய, நட்பு கூட்டணி, துவக்க நிலையிலேயே சிதற வாய்ப்புண்டு.ஆக, 'யாரை வைத்து மணி கட்டுவது...' என, யோசித்த காங்கிரசின் பார்வைக்கு, சிலை திறப்பு விழா அழைப்பிதழோடு, டில்லி சென்ற, ஸ்டாலின் சிக்கினார். அவரை நன்கு உபசரித்து, புளகாங்கிதம் அடையச் செய்து, 'மணி கட்ட' வைத்து விட்டது காங்கிரஸ்.அதுவும், மெகா கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டு, 'பிரதமர் நாற்காலி' கனவில் சுற்றி வரும், ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுவின் முன்னிலையிலேயே, காங்கிரஸ் செய்து விட்டது!'ராகுலின் ராஜ தந்திரம் இது...' என, 'கை'காரர்கள் பூரிக்கின்றனர்.அதற்காக, 'ராகுலை, ஸ்டாலின் முன்மொழிந்தற்கான காரணம் இது தான்' என, உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இதுவும் ஒரு காரணம் என்பது மட்டும் உறுதி. இப்படி அல்லாமல், வேறு வகையில், கருணாநிதியின் மகனாக ஸ்டாலின் யோசித்திருந்தால்...கடந்த, 2004ம் ஆண்டு, சென்னை தீவுத்திடல் கூட்டத்தில், 'இந்திராவின் மருமகளே வருக; இந்தியாவின் திருமகளே வெல்க' என, சோனியாவை முன்மொழிந்து வெற்றி பெற வைத்து, பின், 'செய்நன்றி' அடையாளத்துடன், விரும்பியதை சாதித்துக் கொண்ட, கருணாநிதி திட்டத்தின் நீட்சியாக இருக்கலாம்.அல்லது... தற்போது பின்னப்பட்டு வரும் கூட்டணியை சிதற வைத்து, தமிழகத்தில், தி.மு.க., கொடுக்கும் இடங்களை, சத்தமின்றி வாங்கிக் கொள்ளும் நிலைக்கு, காங்கிரசை தள்ளுவதற்காகவும் இருக்கலாம்.யூகங்களை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று முன்தினம் நடந்த, மூன்று மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழாக்களை, எதிர்க்கட்சிகளில் முக்கியமான கட்சிகளான, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி புறக்கணித்துள்ளன.உண்மை எதுவானாலும், மேற்சொன்ன இரண்டு யூகங்களிலும், தி.மு.க.,வுக்கு லாபமே! ஆனால், இத்திட்டம், ராகுலிடம் எடுபடுமா என்பது, பெருத்த சந்தேகமே!காரணம், தமிழக ஆட்சியாளர்களை, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் மத்திய, பா.ஜ., அரசு இயக்குகிறது என சொல்லி, பிரதமர் மோடியை, ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும், 'வறுக்கின்றனர்!'ஆனால், ராகுலோ, 'ரிமோட் கன்ட்ரோல்' விஷயத்தில் அமைதி காக்கிறார்.'கருணாநிதிக்கு பின் தமிழக மக்களின் குரலாக இருப்பது ஸ்டாலின் தான்' என, எந்த கூட்டத்திலாவது, ராகுல் சொல்லியிருந்தால், ஸ்டாலின் வலையில் இரை சிக்கியது என, நம்பியிருக்கலாம்.ஆனால், 'தமிழக மக்களின் குரலாக இருந்தார் கருணாநிதி. அவரை நினைவில் வைத்து, நாட்டு மக்களின் குரலையும், எண்ணங்களையும் மதித்து, மத்தியில் ஆளும், பா.ஜ., ஆட்சியை அகற்ற வேண்டும்' என்பதோடு நிறுத்தி விட்டார், ராகுல்.ஆக, அரசியலில் ராகுல் முதிர்ச்சி பெற்று வருகிறார். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் அசைக்க முடியாமல் இருந்த, பா.ஜ., கோட்டையை அசைக்கும் அளவிற்கு, தேறி வருகிறார். அப்படிப்பட்டவர், தமிழக அரசியல் சூழலை அறிந்திருக்காமல் இருப்பாரா என்ன...ஒரு சின்ன உதாரணம். 2016, நவம்பர் 2ம் தேதி, தருமபுரி மாவட்ட, தி.மு.க., செயலரின் இல்லத் திருமண விழாவில், ஸ்டாலின் முன்னிலையில் பேசிய துரைமுருகன், 'ஆறு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். தி.மு.க., ஆட்சி மலர்ந்து விடும். இளைய தலைவர் தலைமையில், 2017ல், தமிழகத்தில் நல்லாட்சி அமையும்' என்றார்.ஜெயலலிதா உயிரோடு மருத்துவமனையில் இருந்த அந்த நேரத்திலேயே, ஏதோவொரு நம்பிக்கையில், ஏதோ அடிப்படையில், துரைமுருகன் அப்படி பேசினார். அதற்கு பிறகும், பல முறை, அப்படி பேசி விட்டார். ம்ஹும்... எதுவும் நடக்கவில்லை!இப்போது, அதே துரைமுருகன், 'சென்னைக்கு வந்தால் புதிய பதவிகள் தேடி வரும். அடுத்த பிரதமர், ராகுல் தான்!' என்கிறார்; உடன்பிறப்புகள் கை தட்டுகின்றனர்; ராகுல் புன்னகைக்கிறார். அந்த அமைதி புன்னகையின் பின், ஆயிரம் அர்த்தங்கள்.பின்னே... 'சாடிஸ்ட் மோடி' என, ஸ்டாலின் இப்போது முழங்கிய போது, 'பீரங்கி திருடன்' என, தி.மு.க., யாரை வசை பாடியது என்பது, ராகுலின் நினைவிற்கு வராமலா போயிருக்கும்?அவருக்கு பழைய வரலாறு தெரியாமல் போனாலும், காங்கிரஸ் பெருசுகள், தி.மு.க.,வின் இரட்டை முகம் பற்றி, ராகுலுக்கு எடுத்து கூறாமலா இருந்திருப்பர்?இந்த இடத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி... 16 வயதில் அரசியல் பயணம் துவக்கி, அரை நுாற்றாண்டு காலம், தமிழக அரசியலில் இருந்து விட்டீர்கள். இன்னும் ஏன், தமிழக முதல்வர் பதவிக்கு குறி வைக்கிறீர்கள்?மத்திய அரசின் கூட்டணியில், ஓர் அங்கமாக, தி.மு.க., திகழ்ந்தாலே, தமிழகம் வளம் பெறும் எனும் போது, பிரதமர் பதவியில் நீங்கள் இருந்தால், தமிழகம் எப்படியெல்லாம் செழிக்கும்!இதோ, முன் மாதிரியாய், தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர் ராவ் சிந்திக்க ஆரம்பித்து விட்டார். தேசிய அரசியலில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக, அவரின் கட்சிக்கு செயல் தலைவராக, மகனை நியமித்து விட்டார்.இப்போது சொல்லுங்கள்... ராகுல் தான் அடுத்த பிரதமரா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement