Advertisement

ஒரு டீ கதை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ‛லால்டி கா பவுல் பஜார் 'வழியாக பயணம் செய்யும் போது வித்தியாசமான காட்சி ஒன்றை காணநேர்ந்தது.

நிலோபர் கபே என்று பெயரிடப்பட்ட அது ஒரு டீ கடை, ஆனால் நகைக்கடை போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது,உறவும் நட்புமாக கூட்டம் கடைக்கு உள்ளும் புறமும் அலைமோதியது.

என்னதான் இருக்கிறது இந்த டீ கடையில் என்று பார்த்துவிடும் ஆர்வத்தில் கடைக்குள் நுழைந்தேன்,கடையில் வெளிப்புறம் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்ததோ அதைவிட அதிகமாக உள்ளே அலங்கரிக்கப்பட்டு இருந்தது.பிஸ்கட்களில் இத்தனை விதமான பிஸ்கட்டுகளா? கேக்குகளில் இத்தனை ரகங்களா? என்று வியப்பை ஏற்படுத்தினஉள்ளிருந்த உணவு பொருட்கள்.

வழக்கமான டீயுடன் பெப்பர் டீ, லெமன் டீ,ஜிஞ்சர் டீ என்று பலவிதமான டீ அங்கே விற்கப்பட்டு இருந்தது.டீ மிகவும் வித்தியாசமாகவும் அதிக சுவையுடனும் இருந்தது.பதினைந்து ரூபாயில் இருந்து டீயின் விலை ஆரம்பிக்கிறது இங்குள்ள பிஸ்கட்டை சுவைத்துக்கொண்டே டீ சாப்பிடுவது இன்னும் சுகம்.

டீ சாப்பிடும் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்து துபாய் அழைத்துச் செல்கின்றனர் இந்த டீ கடையின் இன்னோரு அம்சம் பார்சல் வாங்குபவர்களுக்கு ஒரு முறை உபயோக்கிக்கூடிய பேப்பர் பிளாஸ்க்கில் டீ தருகின்றனர் எவ்வளவு நேரம் கழித்து குடித்தாலும் சூடு ஆறுவதில்லை. டீ கடையின் அதிபர் பாபுராவ் சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

வெளியில் நிற்கும் விலை உயர்ந்த அவரது காரே சொல்கிறது அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பதை கடையின் உரிமையாளரான பாபுராவ் இதே டீ கடையில் நாற்பது வருடத்திற்கு முன்பாக கூட்டிப் பெருக்கும் வேலை செய்து கொண்டிருந்தார் என்று இன்று யாராவது சொன்னால் நம்பமாட்டார்கள் ஆனால் உண்மை அதுதான்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கிராமத்தில் உள்ள விவசாய கூலி தொழிலாளியின் மகனான பாபுராவால் படிப்பதற்கு புத்தகம் வாங்க இயலாத நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைதேடி ஹைதராபாத் வந்தார்.

அவருக்கு இந்த டீ கடையை கூட்டிப்பெருக்கும் வேலைதான் கிடைத்தது சரி என்று அந்த வேலையை ஆனந்தமாக செய்தார் இரவில் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் துாங்கிக்கொள்வார்.

சில வருடங்களில் டீ மாஸ்டராக பதவி உயர்வு பெற்றார் ஒரு நெருக்கடி காரணமாக இந்த கடையை நடத்த முடியாத முதலாளி கடையை பாபுராவிடம் விற்றுவிட்டார்.பாபுராவ் கடைக்கு பொறுப்பு ஏற்றபிறகு வெறும் டீ மட்டும் கொடுக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பிஸ்கட்டும் தயாரித்துக் கொடுத்தார்.கடைக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர் வரும்படியும் அதிகரித்தது.

நாற்பது ஆண்டு கால கடினமாக உழைத்தார் தனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தார் வியாபாரத்தில் ஜெயித்தார்.இன்று ஹைதராபாத்தின் செல்வந்தர்களில் ஒருவராக விளங்குகிறார் கடந்த வருடம் நட்சத்திர ஒட்டல் வடிவமைப்பில் இன்னோரு டீ கடையை திறந்தார் அந்தக் கடையின் டீ ருசிதான் நான் முன்பே விவரி்த்தது.

பாபுராவின் இன்னோரு பக்கம் கருணை நிறைந்தது.பசியின் கொடுமையை உணர்ந்ததாலோ என்னவோ தனது கடை அமைந்திருக்கும் தெருவில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பணமில்லாத நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு காலை மற்றும் மதிய உணவை இலவசமாக கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கிவருகிறார்.

மேலும் குணமான நோயாளிகள் ஊர் திரும்புவதற்கு தேவையான பணத்தையும் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான உதவியையும் இவரே செய்து வருகிறார்.

ஆதரவற்றவர்களை ஆதரித்து டீ கடையில் வேலை தருகிறார் கொஞ்ச நாளானதும் பணம் கொடுத்து அவர்களுக்கு இவரே ஒரு டீ கடைவைத்துக்கொடுத்து பிழைக்க வழிகாட்டுகிறார்.

உழைப்பால் உயர்ந்து இப்போது குணத்தாலும் உயர்ந்துள்ள பாபுராவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement