Advertisement

உன்னத உழைப்பாளி பாண்டியம்மாள் பாட்டி

மதுரை புதுார் புனித லுார்து அன்னை ஆலயத்தின் வாசலை ஒட்டி வரிசையாக ரோட்டுக்கடைகள் நீண்டு கிடக்கின்றன.

அதி்ல் ஒரு கடைதான் பாண்டியம்மாளின் கடை

கடை என்று சொல்வதை வைத்து எதையும் கற்பனை செய்துவிடவேண்டாம்,ஒரு நைந்து போன சாக்குப்பைதான் பாண்டியம்மாளின் கடை.

சாக்கை விரித்து அதில் நெல்லிக்கனிகளை பரத்திவைத்து வேகாத வெயிலில் உட்கார்ந்தபடி நெல்லிக்கனிகளை வாங்கவரும் வாடிக்கையாளரை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறார்.

பாண்டியம்மாளுக்கு எண்பது வயதிருக்கும்,அவரது வறுமையின் அடையாளத்தை தேகமும் ஆடையும் பளிச்சென சொல்கிறது.காதும் கண்ணும் மூப்பின் காரணமாக செயலிழந்து கொண்டு இருக்கிறது.

திருப்புவனத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் மதுரைக்கு இடம் பெயர்ந்து நீண்ட வருடங்களாகிவிட்டது.கணவர் இறந்த பிறகு தனிமைக்கு தள்ளப்பட்டார்.

தனிமையும் தள்ளாமையும் தன்னை வாட்டியபோதும் வாடிவிடாமல் கண்ணீர்விடாமல், கையேந்தாமல்,கலங்காமல் கடைசி வரை உழைத்துப் பிழைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

லாபம் வந்தாலும் வரவிட்டாலும் நல்ல பொருளை மக்களுக்கு விற்பது அதில் வரும் வருமானத்தில் வாழ்வது காடு வா என அழைக்கும் போது செல்வது என்று முடிவு செய்தார்.

அவர் வாங்கி விற்பதற்கு முடிவு செய்த பொருள் நெல்லிக்கனி.

நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு.காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் சிஅதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.இவ்வளவு விலாவாரியான விவரம் எல்லாம் பாண்டியம்மாளுக்கு தெரியாது இவருக்கு தெரிந்தது நெல்லிக்கனி உடம்புக்கு நல்லது என்பது மட்டும்தான்.

அதன்படி நெல்லிக்கனியை நுாறு ரூபாய்க்கு வாங்கி ஒரு நாள் முழுவதும் ஐந்து பத்து என்று நுாற்றைம்பது ரூபாய்க்கு விற்றுவிடுவார் வரும் லாபம் ஐம்பது ரூபாயில் மூன்று வேளையும் எளிய உணவு சாப்பிட்டுக்கொள்வார்.

இரவு மூடிய ஏதாவது ஒரு கடை வாசலில் படுத்துக்கொள்வார்,மாநகராட்சி குளியலறையி்ல் குளி்த்துக்கொள்வார் கையில் ஒரு பை அந்தப்பையில் மாற்றாக இன்னோரு செட் உடை அன்றாடம் நெல்லி கொள்முதலுக்கு தேவையான நுாறு ரூபாய் இதுதான் பாண்டியம்மாள் இவ்வளவுதான் பாண்டியம்மாள்.

எவ்வளவு வெயில் குளிரானாலும் பாண்டியம்மாளை இந்த இடத்தில் நாள் தவறாமல் பார்க்கலாம், இப்படியே பல ஆண்டுகளை கடத்திவிட்டார்,சில வாடிக்கையாளர்கள் அன்பு காரணமாக பாண்டியம்மாளை முதியோர் இல்லம் அல்லது அரசு காப்பகத்தில் சேர்த்துவிடுவதாக சொன்ன போது, ‛வேண்டாம் தாயி எதுக்கு அடுத்தவங்களுக்கு நம்மாளல சிரமம் மேலும் அங்க போனால் சோம்பேறியாகிவிடுவோம்' என்று சொல்லி முதியோர் இல்லம் செல்ல மறுத்துவிட்டார்.

நெல்லிக்கனியைத் தவிர வேறு எதையும் விற்றதில்லை,பேரம் பேசமாட்டார் கொடுப்பதை வாங்கி்க்கொள்வார் இவருக்கு என்று வாடிக்கையாளர்கள் சிலர் உள்ளனர் அவர்களில் ஒருவரான மீனாட்சி, சமீபத்தில் இவருக்கு வெயில்,குளிர் பாதிப்பு தெரியாமல் இருக்க குடை போர்வை வாங்கிக் கொடுத்துள்ளார் எதற்கு என்று மறுத்தாலும் பின்னர் மாணவியின் அன்பு காரணமாக வாங்கிக்கொண்டார்.

இந்த வயதிலும் உழைத்துப் பிழைக்க விரும்பும், அந்த பிழைப்பிலும் ஒரு நேர்மையை கடைபிடித்தபடி வாழும் பாண்டியம்மாளை மனதார வாழ்த்தலாம் மற்றபடி அவருடன் தொடர்பு கொள்ள வேறு எந்த வழியும் இல்லை நேராகப் போனால்தான் உண்டு.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இந்த வயதிலும் உழைத்துதான் உண்ணவேண்டும் என்னும் வைராக்யமுள்ள உயர்ந்த உள்ளம் வாழ்க

  • King of kindness - muscat,ஓமன்

    20 ம் நூற்றாண்டின் மிச்சமிருக்கும் கடைசி உழைக்கும் தலைமுறை. பாண்டியம்மாள் உண்மையில் ஒரு உழைப்பின் உன்னதம். இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு இது போல (obesity காரணமாக) உட்கார கூட முடியாது. வேலை செய்தே பழகியதால் தான் பாண்டியம்மாள் 80 வயது வரை பிறர் துணை இல்லாமல் இன்றும் தனித்து நின்று இயங்க முடிகிறது.அந்த உழைப்பு இன்றைய obesity,மொபைல் தலைமுறைக்கு ஒரு பாடம்.அடையாளமே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இது போன்ற பல நல் உள்ளங்களை அடையாளம் கண்டு அங்கீகரித்து பிரசுரிக்கும் தினமலர் பத்திரிக்கைக்கு நன்றிகள் பல.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement