Advertisement

தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு!

பொங்கலுக்கு அடுத்த நாளில், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், உழைக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும், மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மதுரை மாவட்டத்தின் பல இடங்களிலும், மாநிலத்தின் வேறு சில கிராமங்களிலும், தமிழர்களின் வீரத்தைப் பறை சாற்றும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சீறிப்பாயும் காளைகளை அடக்கும், தமிழர்களின் வீரத்துக்கும், ஆர்வத்துக்கும் வேறு எதுவும் ஈடாக முடியாது. வாடிவாசல் வழியாக கம்பீரமாக பாய்ந்தோடி வரும் காளைகளின் ஆக்ரோஷத்தை, கட்டுப்படுத்தத் தயாராக நிற்கும் மாடு பிடி வீரர்களின் மனதில் ஏற்படும் உற்சாகத்தையும், அதை கண்டு ரசிக்கக் கூடியிருப்போரின் மகிழ்ச்சியையும், வேறு எந்த விளையாட்டுடனும் ஒப்பிட முடியாது.


தமிழர்களின் வீர விளையாட்டுகளில், ஜல்லிக்கட்டு என்பது, தமிழ் மண்ணின், பண்பாட்டின் அடையாளமாக கருதப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். 'சல்லி' என்பது, விழாவின் போது, மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையத்தை குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து, காளையின் கழுத்தில் அணியும் வழக்கம், தற்போதும் வழக்கத்தில் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்த, 'சல்லிக்காசு' என்னும் நாணயங்களைத் துணியில் வைத்து, மாட்டின் கொம்புகளில் கட்டி, அந்த பண முடிப்பு, மாட்டை அடக்கும் வீரருக்கு வழங்கப்படும். 'சல்லிக்கட்டு' என்பது, பேச்சு வழக்கில் திரிந்து, ஜல்லிக்கட்டு என்று மருவியது.இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் இந்த திருவிழா, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.

தமிழனின் வாழ்வு, காதல், வீரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில் வீரத்தை, தன் உயிரை விட மேலானதாகக் கருதுகிறான், தமிழன்.சங்க காலத்தில், ஒருவரால் செய்ய முடியாத காரியத்தை, வேறு ஒருவர் செய்வதைத் தான், வீரம் என்று குறிப்பிடுகின்றனர். அப்படி செய்பவரை பாராட்டி, வெகுமதி அளித்து கவுரவிக்கிறோம். ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதை போர்க்களத்தில் பிற ஆண்கள் காண முடியும்.பெண்களும் காணும்படி, தன் வீரத்தைப் பறைசாற்ற, வீர ஆண் மகனுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு தான், ஜல்லிக்கட்டு விளையாட்டு.இந்த விளையாட்டு, தமிழனின் ஆன்மாவில் உரமேறிய நம்பிக்கை. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, பெண்களை திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறுகிறது.

ஐவகை நிலங்களில் ஒன்றான, முல்லை நிலத்தில் தான், 'ஏறு தழுவுதல்' எனும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடந்திருக்கிறது. காளைகளோடு போராடி, உயிர் துறப்பது, வீரமாகக் கருதப்பட்டுள்ளது. காளையை அடக்கி, வீரத்தை நிலை நாட்டுபவனையே, முல்லை நிலத்துப் பெண், மணம் செய்து கொள்வாள்.'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்புல்லாளே ஆயமகள்' என்பது, முல்லைக் கலிப்பாடல் வரிகள்.எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் என, ஏறு தழுவுதலில் நடக்கும், களம் பற்றிய சித்திரமும், களத்தில் இறங்கும் மாடுகளைப் பற்றிய வர்ணனைகளும். இப்பாடல்களில் இடம் பெற்று உள்ளன.

ஒரு நாணயத்தின், இரு பக்கங்களைப் போன்றவை தான், பொங்கலும், ஜல்லிக்கட்டும். கால மாற்றத்தால், பல்வேறு மாற்றங்களுடன், சமூக நிலைகளுக்கு ஏற்பவும், இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது.எனினும், இது பழமையான விளையாட்டு என்பதும், தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும், சிறிதளவும் ஐயமில்லை.

ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ போன்ற நாடுகளில், காளை போர் முக்கியமான பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது.காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, அவற்றிற்கு ஆத்திரமூட்டி, சண்டையிட்டுக் கொல்வதே, இக்காளைப் போரின் நோக்கமாகும். இந்த, மேனாட்டுக் காளை போரும், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் ஒன்று போல் தோன்றினாலும், இரண்டும் வேறுபட்டவை.

வெளிநாடுகளில் நடைபெறும் காளைப் போரில், காளைகள் கொல்லப்படுவதைப் போல, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு விளையாட்டில், காளைகளை வீரர்கள் அடக்குவதன் மூலம், தங்களது வீரத்தைப் பறை சாற்றுகின்றனர்.தமிழர்களிடம் எஞ்சியிருக்கும், பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான, ஏறு தழுவுதலை உரிமையாக, தமிழக அரசு பெற்றுத் தந்திருக்கிறது. உரிமைக்குரலை உரத்துச் சொன்னவர்கள், இளைஞர்கள். அவர்களோடு இணைந்து, அதை எழுச்சி பெற வைத்தவர்கள் பெண்களும், பொதுமக்களும்.

பண்பாட்டு ஆதிக்கத்திற்கும், தனித்த இனங்களின் கலாசாரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் எதிராக, போராடியவர்கள், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை. அவர்கள் இருவரும் வளர்த்தெடுத்த சிந்தனை, இன்னும் மழுங்கி விடவில்லை.அதைத் தான் கடந்த, 2017ம் ஆண்டு, சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடந்த போராட்டம், தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நிரூபித்தது.ஈ.வெ.ரா., அண்ணாதுரை வழியில், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், சுயமரியாதை தீபம் அணைந்து விடாமல், தொடர்ந்து பாதுகாத்து வந்தனர்.


தி.மு.க.,வினரின் அரசியல் சுய லாபங்களுக்காக மாநில நலன்கள் பல, மத்தியில் அடகு வைக்கப்பட்ட போதெல்லாம், தீரத்துடன் எதிர்த்து நின்று உரிமைகளைப் போராடி மீட்டெடுத்தவர், ஜெயலலிதா.தான் உயிருடன் இருந்த வரை, தமிழர் வாழ்வுரிமைகளில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாதவர், ஜெ., அவரின் ஆசியோடு செயல்படும், இப்போதைய, அ.தி.மு.க., அரசு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில், துரிதமான நடவடிக்கைகளை எடுத்தது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என, அனைவரின் உணர்வுகளையும் புரிந்து, அறவழிப் போராட்டத்திற்கு அரணாக நின்றது.சென்னை மெரினாவில், ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற முழக்கத்தோடு, கண்ணியம் குறையாமல், கட்டுப்பாடு காத்து, அமைதி வழியில் நடந்த போராட்டத்தை, இப்போதைய, அ.தி.மு.க., அரசு, புரிந்து கொண்டு விரைந்து செயல்பட்டது.

மாநில முதல்வரோடு, அரசு துறைகளின் உயரதிகாரிகளை உடனடியாக டில்லிக்கு அனுப்பி, பிரதமரைச் சந்திக்க வைத்ததோடு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரையும், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்திக்கச் செய்து, வலியுறுத்தப்பட்டது.அரசு சார்பான நடவடிக்கைகள் ஒரு புறம், அரசியல் ரீதியான அழுத்தம் வேறொரு புறம் என்பதோடு, சட்ட நிபுணர்களோடும் ஆலோசித்து, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஆவன செய்தது.தங்களின் அறவழிப் போராட்டத்தால், உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள தமிழ் இளைஞர்கள், நம்மைப் பெருமை கொள்ள வைத்தனர்.


அவர்களின் மகத்தான அறவழிப் போராட்டத்தை மதித்துச் செயல்பட்ட, அ.தி.மு.க., அரசு, அந்த உணர்வுகளை தானும் உள்வாங்கிக் செயல்பட்டது.தமிழர்களின் பண்பாட்டு உரிமைக்கு கிடைத்த பரிசாக, இந்த அரசு, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து, காளையை நீக்கி, விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், நம் பண்பாட்டு அடையாளமான, ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், எப்படிச் செயல்பட்டிருப்பாரோ, அதே வேகத்தோடு, உணர்வோடு, உண்மையாக, திறந்த மனதுடன் இவ்விவகாரத்தைக் கையாண்டு வெற்றி கண்டிருக்கிறோம்.


எதிர்வரும் காலங்களிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு, மக்களோடு தோள் நின்று, இணைந்து செயல்படும்.மேலும், கலாசார, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பதில் மட்டுமல்லாமல், தமிழ் இனத்தின் உரிமை காக்கும் அனைத்து விஷயங்களிலும், எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.

வைகைச்செல்வன்,
முன்னாள் கல்வி அமைச்சர்,
அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement