Advertisement

நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்போல் ஆகிடுமா?முன்னுாறு சதுர அடிக்குட்பட்ட சின்னஞ்சிறு வீடு அது.

அதில்தான் எங்களது பெரிய குடும்பம் வளர்ந்து வந்தது அம்மாதான் எல்லோரையும் வளர்த்தார்

அப்பா அப்போது லெமன் சாதம் தயிர் சாதம் போன்றவைகளை வீட்டில் தயார் செய்து பொட்டலம் கட்டி வெளியில் கொண்டு போய் விற்றுக்கொண்டு வருவார்,அந்த வருமானத்தில்தான் குடும்பம் போய்க்கொண்டிருந்தது.

அம்மாவிடம் ஒரு ‛அமுதசுரபி' போல ஒரு பாத்திரம் இருந்தது, நாங்கள் அம்மாவை சுற்றி உட்கார்ந்து கொள்வோம் அவர் அந்த பாத்திரத்தில் உள்ள கலவை சாதத்தை உருட்டி உருட்டி ஊட்டிவிடுவார் அனைவருக்கும் வயிறும் மனசும் நிறைஞ்சுரும்.

வெறும் சாதத்தை மட்டும் ஊட்டிவிடவில்லை அத்துடன் ஒழுக்கத்தை பக்தியை அன்பை பாசத்தையும் சேர்த்தே ஊட்டிவிட்டார்

ஒரு முறை விருந்து சாப்பிட்ட வீட்டில் கொடுத்த இனிப்பு பீடாவை சாப்பிட்டேன், வாய் சிவந்தது பெருமையாக அம்மாவிடம் சிவந்த வாயைக் காட்டினேன் அவரது கண்களில் சந்தோஷத்திற்கு பதிலாக கவலை கூடவே கண்ணீர்.

‛தம்பி இதெல்லாம் வேண்டாம்யா இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம் தப்பு தப்பான பழக்கம் வந்துரும்யா, உன்னை நான் அப்படி பார்க்கிற சந்தர்ப்பம் வந்துச்சுன்னா அந்த நிமிஷமே உயிரவிட்டுருவேன்யா' என்று சொன்னதுதுான் தாமதம் ஒடிப்போய் வாய் நாக்கு எல்லாம் கழுவிவிட்டு திரும்ப அம்மாவிடம் வந்து ‛இதுதான் என் முதலும் கடைசியுமான பீடா' என்று சொன்னேன், அம்மா என்னை பாசத்துடன் ஆரத்தழுவிக்கொண்டு கண்ணீர் விட்டார் அது, தன் பேச்சை உடனே கேட்கும் பிள்ளையை பெருமையாக நினைத்து உகுத்த ஆனந்த கண்ணீர்.

அந்த பெருமைக்குரிய அம்மாவின் பெயர் நாராயணீயம்மா அவரது பெருமைக்குரிய மகன்தான் இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.முரளி

அவருடனான ஒரு மாலை நேர நேருக்கு நேர் சந்திப்பில் தனது அம்மாபற்றி மேலே சொன்ன அனுபவங்களை பகிர்ந்து கொண்ட எம்.முரளி மேலும் பேசுகையில்..

தாய்ப்பாசத்திற்கு நிகரானது எதுவும் இல்லை அது வெறும் பாசம் மட்டுமில்லை அது ஒரு உணர்வு அந்த உணர்வுதான் நம்மை எல்லாம் ஒரு கட்டுப்பாடுடன் வைத்திருக்கிறது.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் ஒரு காலகட்டத்தில் மனிதனாக மாறினான் என்றால் அதற்கு தாய்ப்பாசம் மட்டுமே காரணம்.அந்த தாய்ப்பாசம்தான் குடும்பம் உறவு நட்பு என்று மெல்ல மெல்ல பரவுகிறது அந்தப்பாசம்தான் தாய்நாட்டு பாசமாகவும் மலர்கிறது ஆக எங்கே பாசம் என்றாலும் அதன் ஊற்றுக்கன் தாய்ப்பாசம்தான்.

இத்தகைய பாசத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அள்ளி அள்ளி வழங்கும் தாய்மையை போற்ற நடத்தப்படுவதுதான் அன்னையரை வணங்கும் விழா.

கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் இந்த விழாவில் இதுவரை பல கல்வியாளர்கள் அறிஞர்கள் கலைஉலகினர் என்று பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களின் தாயார்கள் கவுரவிக்கப்பட்டு உள்ளனர்.

தாய்மார்களுக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்படும் மாலைகள் சூடப்பட்டு பாதபூஜை செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்,தன்தாயால் நான் அடைந்த முன்னேற்றம் என்று சபையறிய முழங்கி அவர்களை தனயன்கள் பெருமைப்படுத்துவர்.இதைவிட பெற்ற தாய்க்கு வேறு என்ன பெரும்பேறு கிடைத்துவிடும்.

இங்கு கொண்டாடப்படும் இந்த தாய்மையின் பிரவாகம் இவர்கள் மனதிலிருந்து நம் எல்லோர் மனதுக்கும் வந்து நிறையும் நம் மனங்களிலிருந்து நம் பெற்றோருக்கு பயணப்படும், எங்கும் நிம்மதியும் நிறைவும் பரவும் பரவவேண்டும் அதுதான் இந்த விழாவின் நோக்கம்.

பத்தாவது ஆண்டாக இந்த விழா இன்று 18 01 2019 மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் மாலை 6 மணி்க்கு துவங்குகிறது.

இன்றைய விழாவில் பதினைந்து தாய்மார்கள் கவுரவிக்கப்பட உள்ளனர் அவர்களில் போரில் தன் கணவன் மற்றும் மகனை பறி கொடுத்த செந்தாமரை என்ற தாயாரும் ஒருவர்.

விழாவினை சிறப்பு செய்ய கர்நாடகா வித்வான்கள் பலர் தாய்மையைப் போற்றி பாடஇருக்கின்றனர்,அனுமதி இலவசம் அனைவரும் வரலாம்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சுவீட் பீடா சாப்பிடுவதை விட பல மடங்கு உடலுக்கு தீமையானது கிருஷ்ணா சுவீட்ஸ் பண்டங்கள். சக்கரை, கொழுப்பு அதை தவிர எதுவும் இல்லை. இந்திய இதய நோய் மருத்துவ கவுன்சிலால் தடை செய்யப்பட வேண்டும். பார்த்தாலே கொலஸ்ட்ரால் எகிறிவிடும், சக்கரை எகிறி விடும்.. ப்ப்ப்பா..

  • Rajesh - Chennai,இந்தியா

   ரசாயன முறையில் எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட வெள்ளை சக்கரையினால் செய்யும் எல்லா தின்பண்டங்களும் உடலுக்கு தீமையே... இதுதான் உண்மை.

 • skv - Bangalore,இந்தியா

  பல அம்மாக்கள் அப்படித்தான் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாங்க என்பது 100% உண்மைங்க தன் அம்மா தன்னை அன்பாலே அணைச்சும் அன்புடன் கண்டிச்சும் வளர்த்தாங்க என்று பல மகன்கள் சொல்லும் நிலைமை இருந்தது ஆனால் அம்மாக்கள் தரும் ஓவர் செல்லம் பல தாத்தாரிகளை உருவாக்கறது என்பதும் உண்மை

 • G.Krishnan - chennai,இந்தியா

  அன்னையை மதித்தால் முன்னேற்றம் என்பது நிச்சயம்... கெட்ட பழக்கங்கள் எப்படி பழக்கம் ஏற்படுகிறது என்பதை ... பீடாவில் ஆரம்பித்து.... மேலும் முன்னேறும் என்று உணர்த்தி... தனது மகனை நல்வழிப்படுத்தி.... இன்றைக்கு ஒரு பெரிய தொழிலதிபராக அவர் ஆனதுக்கு.. அவரது தாயின் நல்ல அறிவுரைகளே?. இந்தக்கால சந்ததியினர் இதை உணர்ந்து...பெற்றோர்களை மதித்து நடந்து கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்... வருங்கால சந்ததியினருக்கு நல்ல கருத்துகளை தெரிவித்த திரு. முரளி அவர்களுக்கு நன்றிகள் பல . . . . . வாழ்க வளமுடன்

 • karutthu - nainital,இந்தியா

  மனதை நெகிழ வைத்த நல்லவிஷயம் . தாயிற் சிறந்த கோவிலுமல்ல ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை .இப்பொழுது இதை எத்தனை பேர்கள் கடைப்பிக்கிறார்கள் .?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement