Advertisement

இன்னும் கொஞ்ச நாள் கண்ணதாசன் இருந்திருக்கலாம்?

இன்னும் கொஞ்ச நாள் கண்ணதாசன் இருந்திருக்கலாம்?

nsmimg670355nsmimg


கவியரசர் கண்ணதாசனை கொண்டாடும் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும் போது அவர் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது என நா தழுதழுக்க அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பேசினார்.

nsimg2207609nsimg


காலங்களில் அவன் வசந்தம் என்ற தலைப்பில் கண்ணதாசனை கொண்டாடும் விதத்தில் இசைக்கவி ரமணன் மாதந்தோறும் சென்னையில் நடத்திவரும் நிகழ்வில் கண்ணதாசனின் மகனும் தற்போது சினிமா தொடர்பான பல்வேறு தளங்களில் இயங்கிவருபவருமான அண்ணாதுரை கண்ணதாசன் கலந்து கொண்டார்.
nsmimg670356nsmimg

அப்பாவைப் பற்றிய அவரது அனுபவங்களாவது...அப்பா கண்ணதாசனின் இரு மனைவியருக்கு பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன் வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன் ஒருவனை கடத்தினால் வீடு அமைதியாகிவிடும் என்பது அப்பாவின் கணிப்பு, ஆகவே பாட்டு எழுதப்போகும் போது ‛நீ வந்து வண்டியில் ஏறு' என்று சொல்லி என்னையும் பாடல் எழுதும் இடங்களுக்கு அழைத்துப்போய்விடுவார்.இது அவரைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய பயன்பட்டது.


nsmimg670357nsmimg


அப்படித்தான் 1969ம் ஆண்டில் வெளிவந்த சாந்தி நிலையம் படத்தில் பாடல் எழுதும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சரி பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை சொல்லுங்கள் என்றார் பள்ளிப்பிள்ளைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர் இதுதான் சூழ்நிலை என்றார் இயக்குனர் ட்யூன் போட்டாகிவிட்டது பத்து நிமிடம் யோசித்தவர் எழுதிக்கொள் என்று சொன்ன பாடல்தான் ‛கடவுள் ஒருநாள் உலகைக்காண தனியே வந்தாராம்' பாடல்.

பாடல் நன்றாக வந்தது ‛இன்னோரு பாட்டுக்கும் எழுதலாமா? கவிஞரே' என்றார் இயக்குனர் ‛சரி சூழ்நிலையை சொல்லுங்கள்' என்றார் அப்பா. ‛அதே சூழல்தான் பி்ள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றார் இயக்குனர் ‛அப்படியா' என்ற அப்பா முதல் பாடலின் எந்த வரியும் பொருளும் திரும்ப வராமல் ‛பூமியில் இருப்பது வானத்தில் இருப்பதும்' என்ற பாடலைச் சொன்னார் பாடல் பிரமாதமாக இருப்பதாக பாராட்டிய இயக்குனர் கவிஞர் உற்சாகமான மூடில் இருப்பதை புரிந்து கொண்டு ‛இன்னோரு பாடல் சூழ்நிலை சொல்லவா' என்றார்.

‛சரி சொல்லுங்கள்' என்றார் கவிஞர் ‛அதே சூழ்நிலைதான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றதும் ‛என்னப்பா இப்பதானே இரண்டு பாடல் கொடுத்தேன்' என்றவர் ‛சரி எழுதிக்கோ' என்று சொல்லி மூன்றாவதாக சொன்ன பாடல்தான் ‛செல்வங்களே நாளை தலைவர்களே' என்ற பாடல்.

கைதட்டி பாராட்டிய இயக்குனர் ‛இந்த படத்தின் நாலாவதாக இடம் பெறும் ஒரு பாடலையும் கொடுக்கமுடியுமா?' என்று கேட்டார் ‛ம்' என்றார் கவிஞர். இயக்குனர் மிக மெல்லிய குரலில் ‛அதே சூழ்நிலைதான் பி்ள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே போகின்றனர்' என்றதும் அப்பா டென்ஷனாகிவிட்டார் ‛ஏம்பா படம் முழுவதும் பிள்ளைகளை வெளியேவே கூட்டிட்டு போக போறீங்களா?' என்று வேடிக்கையாகக் கேட்டவர் சரி பாடலைத்தருகிறேன் என்று சொல்லிவிட்டு தந்த பாடல்தான் ‛இறைவன் வருவான்' என்ற பாடல்.இப்படி ஒரு சூழலுக்கு நான்கு விதமான பாடல்களை அப்பாவால்மட்டுமே தரமுடிந்தது அதுதான் அவரது அபாரஆற்றல், ஒரே நாளில் பத்து பாடல்கள் கூட எழுதிக்கொடுத்துள்ளார்.

அப்பா நிறைய படிப்பார் அந்த விஷயங்களை மனதில் ஏற்றிவைத்துக் கொள்வார் இயக்குனர்கள் பாடலுக்கான சூழ்நிலையை விவரிக்கும் போது தான் படித்த விஷயங்களை பாடல் சூழலுடன் ஒப்பிட்டு பிரமாதமாக எழுதிவிடுவார் கம்பராமாயணத்தையும் அபிராமி அந்ததாதியையும் இப்படித்தான் பல பாடல்களில் எளிமைப்படுத்திக் கொடுத்தார்.இயக்குனர் பாலசந்தர் தனது ஒவ்வொரு படத்திலும் பாடலிலும் ஏதாவது புதுமையை செய்வார் மூன்றாவது முடிச்சு படத்தின் ‛வசந்த கால நதிகளிலே'பாடல் அப்படிப்பட்டதுதான் முழுக்கதையும் படமும் அந்தப்பாடலை வைத்தே நகர்த்தப்படும்.சினிமாவில் நானும் காலுான்ற முயற்சித்த காலத்தில் கவிஞர் மகனாப்பா நீ அப்ப நீயும் ஏதாவது பாட்டு எழுதுவியா? என்று கேட்காதவர்களே கிடையாது இதன் காரணமாக நாமும் சினிமாவிற்கு ஒரு பாட்டு எழுதிவிடுவோம் என முயற்சித்தேன் ஒரு ட்யூனை வைத்துக்கொண்டு ஒரு இரவு முழுவதும் விழித்திருந்ததுதான் மிச்சம் இந்த அனுபவத்தையும் பிறகு ஒரு அனுபவத்தையும் வைத்து ஒரு முடிவு எடுத்தேன் இனிமேல் சினிமாவிற்கு பாடல் எழுதுவது இல்லை என்பதுதான் அந்த முடிவு.


கண்ணின் அருமை அருகில் இருந்தாலும் இமைக்கு தெரிவதில்லை என்பது போல அப்பாவின் அருகிலேயே இருந்தாலும் அவரது அருமை அப்போது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை ஆனால் இப்போது அவரது ஒவ்வொரு பாடல்களையும் ஆழமாக வாசித்து யோசித்து நேசித்து பலர் பேசும் போதும் பாடும்போதும்தான் தெரிகிறது.ஐம்பத்து நான்கு வயதில் இறந்துவிட்டார் இன்னும் கொஞ்ச நாள் இருந்து அவரை உலகம் எப்படியெல்லாம் கொண்டாடுகிறது என்பதைப் பார்த்துவிட்டு போயிருக்காலாமோ? என்ற எண்ணம் இது போன்ற சபைகளைப் பார்க்கும் போது ஏற்படுகிறது என்று அண்ணாதுரை கண்ணதாசன் சொல்லும் போது அவரை அறியாமலே நா தழுதழுத்தது கண்ணீர் துளிர்த்தது.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement