Advertisement

வீர வணக்கங்கள்; ஆழ்ந்த அனுதாபங்கள்

ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தின், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனங்கள் மீது, 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும், நம் வீர வணக்கங்கள்; அவர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தினர் மீதான பயங்கரவாதிகளின், பத்தாவது தாக்குதல் இது. முந்தைய தாக்குதல்களை விட பயங்கரமானது; கொடூரமானது.இது வரை, இத்தகைய துணிச்சலான தாக்குதலை, பயங்கரவாதிகள் செய்தது இல்லை.அவர்களுக்கு இந்தளவு, 'குளிர் விட்டுப்போக' பாகிஸ்தானே காரணம். முப்படைகளுடன், நான்காவதாக, பயங்கரவாதிகள் படையையும் வைத்துள்ளது பாகிஸ்தான். அந்த கொடூர படையை வைத்து, நம் நாட்டின் மீது, பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது.ஆனால், 'இந்த முறை, தகுந்த பதில் சொல்லியே ஆக வேண்டும்' என, மத்திய அரசு சூளுரைத்துள்ளது.நம் நாட்டிலேயே, தங்கள் கடமையை, சரியாக நிறைவேற்றுவது, ராணுவ வீரர்கள் மட்டும் தான். சாவு எந்த நேரத்திலும் வரும் என தெரிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல், பயங்கரவாதிகளுக்கு, சிம்ம சொப்பனமாக திகழ்பவர்கள், நம் வீரர்களே!தங்கள் இன்னுயிரை கொடுத்து, மக்களை காப்பவர்கள். இப்படிப்பட்ட வீரர்களை நாம் பெற்று இருப்பது, நாம் செய்த பாக்கியம்.ஆனால், அநியாயமாக அவர்கள், இனி மேலும் மரணம் அடையக்கூடாது. பொறுத்தது போதும், பொங்கி எழுந்து, பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.நாட்டை காப்பாற்ற, உயிர் தியாகம் செய்த, நம் வீரர்களின் அர்ப்பணிப்பு, விலை மதிப்பற்றது. அவர்களின் தியாகம், வீண் போகக் கூடாது. நாம் கொடுக்க போகும் பதிலடியில், எதிரிகள் நம்மை சீண்டி பார்க்க, கனவிலும் இனி நினைக்கக் கூடாது.இந்தியாவை நேரடியாக தாக்கினால், எப்போதும் தோல்வி தான் என்பதை புரிந்து கொண்ட, பாக்., இது போன்ற, கோழைத்தனமான, ஈனத்தனமான செயல்களில், கூலிப்படையை ஈடுபடவைத்துள்ளது.பலத்த கண்டனங்கள் எழும் போது, 'இதற்கு நாங்கள் பொறுப்பில்லை' என்று சொல்லி, விஷயத்தை முடித்துக் கொள்கிறது, அந்த கோழை நாடு.ஒரே நாடாக இருந்த, இந்தியாவும், பாகிஸ்தானும், எப்போது பிரிந்ததோ, அப்போது முதல், இந்தியா மீது வன்மம் வைக்க துவங்கிய, பாக்., கடந்த, 40 ஆண்டுகளாக கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.'இது கோழைத்தனம். என் மகன்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியமில்லாத பேடிகளின் செயல் இது...' என, கதறுகிறாள் பாரதத்தாய். தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதை பார்த்து, அவளின் கண்ணீரை துடைக்கவும், கயவர்களை வேரறுக்கவும், நம் வீரர்கள் களமிறங்கப் போகும் நாள், வெகு தொலைவில் இல்லை!நம் பொறுமையை, பலவீனமாக அவர்கள் நினைக்கின்றனர். பொறுமையும், ஒரு நாள், 'சுனாமி' போல, பொங்கி எழும் என்பதை, நாம் நிரூபித்து காட்ட வேண்டியது கட்டாயம்.இனி, ஒரு வீரனின் உயிர் போனால் கூட, பொறுக்காது இந்திய இனம் என்பதை, பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்.நம் ராணுவம் கொடுக்கப் போகும் பதிலடியில் தான், கொதித்துப் போயிருக்கும், ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் அடங்கும்; அமைதி பெறும்.ஜெய்ஹிந்த்!மொபைல் எண்: 99443 09637இ - மெயில்: murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

    இப்பேர்ப்பட்ட பயங்கரவாத செயல்களை பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் செய்யவில்லை , நமது மத்திய அரசே திட்டம் போட்டு செய்துள்ளது என்று சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் சொல்லுகின்றனர் . இவர்கள் எப்பேர்ப்பட்ட பயங்கரவாதிகள் , தீவிரவாதிகள் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement