Advertisement

சிவசந்திரன் சொன்னது உண்மையானது

கையில் துப்பாக்கி; முகம் நிறைக்கும் சந்தோஷம்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கம்பீர சீருடை... பார்த்ததும் கலங்க வைக்கிறது, 34 வயது சிவச்சந்திரனின் புகைப்படம். அருகில், சோக தீபம் ஏந்தியபடி ஒரத்தில் காமாட்சி விளக்கு. புகைப்படத்திற்கு நேர் கீழே தரையில், துவண்ட கொடியாய் காந்திமதி; சிவச்சந்திரனின் மனைவி; இரண்டு மாத கர்ப்பிணி.

சிவச்சந்திரனின் புகைப்படத்தில் இருந்து உதிரும் மலரிதழ்கள், காதோரத்தை தீண்டும் போதெல்லாம், பொங்குகின்றன காந்திமதியின் கண்கள். அரியலுார் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், சுத்தமல்லி ஊராட்சியின், கார்குடி கிராமம் மொத்தமும், இக்காட்சியைப் பார்த்து உறைந்து போய் கிடக்கிறது.நாட்டை காக்கும் தீரமிக்க பணிக்குச் செல்வோரில் சிலருக்கும், அவர்களைச் சார்ந்த உறவுகளுக்கும், வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்வு இது!

உயிர் யார் கையில்?'மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக, 35 ஆண்டு கால அனுபவம் எனக்கு. 1971 இந்தியா - பாகிஸ்தான் போர்க்களம் பார்த்துட்டேன். மிசோரம், நாகாலாந்து, ஸ்ரீநகர்னு பல இடங்கள்ல காவலுக்கு நின்னுருக்கேன். நினைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா, இதுக்காக நான் இழந்தது ரொம்பவே அதிகம்.

'என் தாய் சாவுக்கு என்னால வர முடியலை... அப்போ, நாகாலாந்துல பணி; தகப்பன் சாகுறப்போ, ஸ்ரீநகர்ல பணி; அண்ணன், தம்பிங்க செத்தப்போ அருணாச்சல பிரதேசத்துல பணி; இதனால தான், விடுமுறையில வர்றப்போ கூட, உறவுகள் கிட்டே பாசம் காமிக்கிறது இல்லை.'உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த வேலையில, நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா அதுகளால தாங்க முடியுமாங்கிற எண்ணம் தான், இதற்கு காரணம்!'

உயிர் கசியப் பேசும், 70 வயது பெர்னார்டு, 1968ல், தன், 19வது வயதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்திருக்கிறார். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவருக்கு வயது, 54.

சொன்னது பலித்தது!பெர்னார்டின் மனநிலையிலேயே தான், எட்டு ஆண்டு பணி அனுபவம் கொண்ட சிவச்சந்திரனும் இருந்திருக்கிறார். அதைச் சொல்லி சொல்லியே, கண்ணீர் துடைக்கிறார் அவரது தாய் சிங்காரவள்ளி.'இந்த வேலைக்கு போனதுக்கப்புறம், எங்க எல்லார்கிட்டேயும் முகம் கொடுத்து பேசுறதையே அவன் குறைச்சுக்கிட்டான். லீவுக்கு வர்றப்போ கூட, எங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வர மாட்டான்.

'அவன் தம்பி இறந்த நேரத்துல, 'நான் இல்லேன்னாலும் நீ வீட்டை பார்த்துக்குவேங்கிற தைரியத்துல தானடா இருந்தேன்; இப்படி என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டியே...'ன்னு அவன் படத்துக்கு முன்னாடி கதறி அழுதான்!' - தேம்புகிறார் சிங்காரவள்ளி.

தம்பி செல்வசந்திரன், 2017ம் ஆண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பணி செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி இறந்து போக, ஜம்முவில் பணியில் இருந்த சிவச்சந்திரனால், உடனடியாக இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை.ஏழாம் நாள் காரியத்திற்கு தான் வந்திருக்கிறார். அப்போதும், எப்போதும், பிப்ரவரி 9 அன்று, விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போதும் அவர் சொன்ன வார்த்தைகள்...'என்னை கடைசியா எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க!

''ஏன்டா இப்படி அபசகுனமா பேசுறே...' - தாய் சிங்காரவள்ளி'என் வேலை அப்படிம்மா... எப்போ வேணும்னாலும், என்ன வேணும்னாலும் நடக்கும்' - சிவச்சந்திரன்.ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பிப்ரவரி, 14 அன்று நடந்த கோர தாக்குதல், சிவச்சந்திரன் சொன்னதை அப்படியே உண்மையாக்கி விட்டது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அளவிற்கு அத்தனை அபாயகரமானதா, சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸின் பணி?இப்படையின் வரலாறு என்ன; பணிகள் என்னென்ன என அறிவோம்.

இவர்கள் போலீஸ் அல்ல; ராணுவமும் அல்ல; ஆனால், இந்த இரு தரப்பினரும் பார்க்க வேண்டிய வேலைகளையும் சேர்த்துப் பார்க்கும் துணை ராணுவம்.'சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ்' எனும், சி.ஆர்.பி.எப்., படை, துவக்கத்தில், 'கிரவுன் ரெப்ரசன்டேட்டிவ்ஸ் போலீஸ்' எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டிருக்கிறது. 1949, டிசம்பர், 28ம் தேதி, சி.ஆர்.பி.எப்., சட்டத்தின்படி, 'சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ்' என, பெயர் மாற்றம் கண்டது.இந்த படைப்பிரிவு, 78 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இப்படை பிரிவு, 246 பட்டாலியன்களை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பட்டாலியனுக்கும் பொறுப்பு அதிகாரியாக, கமாண்டன்ட் இருக்க, அந்தபட்டாலியனுக்கு கீழே, ஏழு கம்பெனிகள் இயங்கும்.ஒரு கம்பெனியில், 135 கான்ஸ்டபிள்கள் இருப்பர். ஒவ்வொரு கம்பெனியும், ஏ முதல், ஜி வரை குறியிடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு கம்பெனியின் பொறுப்பு அதிகாரி, அசிஸ்டென்ட் கமாண்டன்ட். அவருக்கு கீழே, ஒரு இன்ஸ் பெக்டர் இருப்பார்.ஏ முதல், ஜி அடையாளம் கொண்ட ஏழு கம்பெனிகளில், ஒவ்வொரு கம்பெனியும், 'பிளாட்டூன்' எனும் பெயரில், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிற்கும், 35 கான்ஸ்டபிள்கள். இதற்கு பொறுப்பு அதிகாரியாக, ஒரு சப் இன்ஸ்பெக்டர்.இந்த 35 கான்ஸ்டபிள்களையும் மூன்று குழுவாக பிரித்து, குழுவிற்கு ஒரு ஹெட் கான்ஸ்டபிள் தலைமை வகிப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படையின் தலைமையகம் டில்லியில் இருக்கிறது.
- வாஞ்சிநாதன்--

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement