Advertisement

அக்னி குஞ்சுகள் அமரத்துவம் அடைந்த நாள் இன்று

nsimg2239630nsimg இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்களோடு முடியப்போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப்போக்கில் தொடரும்” என்று முழங்கி துாக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகிய அக்னி குஞ்சுகள் அமரத்துவம் அடைந்திட்ட நாள் இன்று
"நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நாங்கள் மறைந்து விடுவோம். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...." என்று முழங்கிவிட்டு மரணத்தை வரவேற்றவர்கள் இந்த மாவீரர்கள்.nsmimg679380nsmimgஇந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத போராளிகள் இவர்கள். இன்றும் இளைஞர்கள் நெஞ்சில் விடுதலை வேள்வியைப் பற்ற வைக்கும் தீப்பொறியாக இருக்கின்றனர்.
1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார்.

இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.
1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, சென்ட்ரல் அசெம்பளி ஹாலில் கோர்ட் வளாகத்தில் பிரிட்டிஷ் அரசின் அநியாயத்தை கண்டித்து குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களுக்கான துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாள்தான் இன்று.
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி.....
பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்த லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டனர்.
பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.
அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது.
புத்தகப்பிரியரான பகத்சிங் துாக்கில் தொங்கவிடப்படுவோம் என்று தெரிந்த பிறகும் எவ்வித பதட்டமும் இல்லாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார் .அவருக்கு அப்போது வயது 24 தான்.அவரிடம் துாக்கு மேடைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னபோது இப்போதுதான் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன் முடித்துவிட நினைக்கிறேன் அவகாசம் கிடைக்குமா? என்று கேட்டபோது அதற்கு வாய்பில்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.
மொத்த சிறைச்சாலையிலும் மயான அமைதி நிலவியது இம்மூவரும் வரும் வழியை பார்த்தபடி மற்ற சிறைக்கைதிகள் இவர்களுக்காக காத்திருந்தனர் அவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சிறைக்கம்பிகளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.
எங்கும் ஒரே மவுனம்
அந்த மெளனத்தை கிழித்துக் கொண்டு மூன்று பேரும் துாக்கு மேடையை நோக்கி பாடல்கள் பாடியபடி வந்தனர்.கைகால்கள் விலங்கிடப்பட்ட நிலையிலும், கவலையில் தோய்ந்து போகாமல், மரண சோகம் படியாமல்,மிகக் கம்பீரமாக வந்தனர்.
அவர்களுக்கு விருப்பமாக அந்த சுதந்திர பாடல்கள் அங்கு இருந்த அனைத்து கைதிகளுக்கும் விருப்பமான பாடல்களாகாவும் மாறியது.வீரர்களுடன் சேர்ந்து அவர்களும் பாடினர்.அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.
மூவரும் துாக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, அவர்கள் விருப்பப்படி முகம் மூடப்படவில்லை, தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. கைகளும் கால்கள் கட்டப்பட்டன.
அதிகாரியின் உத்திரவிற்கு ஏற்ப விசை இழுக்கப்பட அவர்களை தாங்கி நின்ற காலின் கீழ் இருந்த பலகை பெரும் சத்தத்துடன் விலகிக்கொண்டது.கொஞ்ச நேரம் கயிற்றில் உடல் துள்ளியது துவண்டது பிறகு சலனமில்லாமல் மரணத்தை தழுவிக்கொண்டது.
சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.
16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • bskgiri - India,இந்தியா

    ஜெய்ஹிந்த்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement