Advertisement

பெஸ்ட் காமெடி நாடகம் ‛பராகாய பிரவேசம்'.

Share


இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு சிரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு உண்டு.

அப்படி ஒரு சிரிப்புக்கு கியாராண்டி தரும் நாடகம்தான் பராகாயா பிரேவேசம்.பராகாய பிரேவேசம் என்றால் கூடுவிட்டு கூடு பாய்தல் என்று அர்த்தம்.
இன்றைய தேதியில் இன்றைய பிரச்னையில் நாமெல்லாருமே பெரும்பாலும் உம்மனா மூஞ்சிகளாகத்தான் மாறிவிட்டோம்.
எங்காவது காமெடி நிகழ்ச்சிக்கு போனால் கூட,‛ எங்கே என்னை சிரிக்கவைத்துவிடு பார்ப்போம்' என்று சவால் விடாத குறையாகத்தான் போய் பார்வையாளர்களாக உட்காருகிறோம்.
இந்த நிலையில் கல்லுாரியில் படித்துக்கொண்டு இருக்கும் மற்றும் அப்போதுதான் படித்து முடித்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய நாடகம் மீது பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனேன்.
ஆனால் நாடகம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ஆரம்பித்த சிரிப்பு முடியும் வரை நிற்கவேயில்லை உண்மையைச் சொல்லப்போனால் இந்த அளவிற்கு வாய்விட்டு சிரித்தே ரொம்ப நாளாகிவிட்டது.
அரைவேக்காடான அமெச்சூர் திருடர்கள் ஒன்று சேர்ந்து ஏடிஎம் மெஷினை கொள்ளை அடிக்கின்றனர்.அதைத் திருடிக்கொண்டு வந்த பிறகுதான் தெரிகிறது அது ஏடிஎம் மெஷின் அல்ல பாங்க் பாஸ் புக்கில் கணக்கை பதிவு செய்துதரும் பிரிண்டிங் மெஷின் என்று.
அப்போது ஆரம்பிக்கும் காமெடி அதற்கு பிறகு நான் ஸ்டாப்பாக செல்கிறது.அந்த மெஷின் ஒவ்வொருத்தர் கைக்காக மாறி கடைசியில் ஒரு லுாசுத்தனமான சயன்டிஸ்டிடம் மாட்டுகிறது.
அந்த விஞ்ஞானி தன் கண்டுபிடிப்பை செயல்படுத்தும் நேரம் அவரிடம் வந்து மாட்டுகிறார் ஒரு கிரெடிட் கார்டு விற்கும் பார்ட்டி.சரியாகச் சொல்லப்போனால் கிரெடிட் கார்டு விற்கும் பார்ட்டியிடம்தான் விஞ்ஞானி மாட்டிக் கொள்கிறார்.இவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் கோமாளித்தனமும் நகைச்சுவையின் உச்ச கட்டம்.
மனிதனைப் போலவே இன்னோரு மனிதனை உருவாக்கும் அந்த பிரிண்டரில் நடக்கும் குளறுபடிகள் பெரியவர்களையும் குழந்தைகளைப் போல விழுந்து விழுந்து சிரிக்கவைக்கி்ன்றன.
நாடகத்தை மிக நகைச்சுவையாகவும் புத்திசாலித்தனமாகவும் இயக்கிய பிரவீன்குமார் பாராட்டப்பட வேண்டியவர் மிகப்பெரிய எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.நாடகத்தில் பிரதான கேரக்டர்கள் முன் வெளிச்சத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது பின்னால் இருக்கும் மற்ற கேரக்டர்கள் தங்கள் நேரத்திற்கு காத்துக்கொண்டு இருப்பர் ஆனால் இந்த நாடகத்தில் நாடகத்தின் பின்னால் முன்னால் என்று எல்லா பக்கத்திலும் ஏதாவது ஒரு விஷயம் நடந்து கொண்டு நம்மை ஈர்க்கிறது என்றால் அது இயக்குனரின் கெட்டிக்காரத்தனம்தான்.
இந்த நாடகத்திற்கான கதை வசனம் எழுதிய சந்திரசேகர் வெங்கட்ராமனுக்கு விசேஷ பாராட்டுக்கள்.ஆர்கே நகர் தேர்தல் விவகாரத்தை இவ்வளவு நையாண்டியாக இதுவரை யாரும் எழுதியது இல்லை.ஒன்று இரண்டு இடத்தி்ல் மட்டும் விரசம் தட்டும் வசனங்களை தவிர்ததுவிட்டால் போதும் மற்றபடி குறையொன்றும் இல்லை.
அரவிந்தன் ராமகிருஷ்ணன்,ஜெயசூர்யா,கார்த்திக்,பூஜா,மணிரத்தனம், ரமேஷ்,ராகுல்,சிவா,விக்னேஷ் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்து இந்த நாடகத்தை சிறப்பாக்கினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த நாடகம் பார்ப்பவர்கள் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்கச் செய்து எல்லா கவலைகளையும் மறக்க செய்வது நிச்சயம்.மிகக் குறைந்த செலவில் குடும்பத்தோடு நண்பர்களோடு உறவுகளோடு இந்த நாடகத்தை உங்கள் பகுதியிலேயே நடத்தி பார்க்கலாம் வாய்விட்டு சிரிக்கலாம்.இந்த நாடகம் தொடர்பான விசாரணைக்கு இயக்குனர் பிரவீனை தொடர்பு கொள்ளவும்:8939780883.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement