Advertisement

தேர்தல் முடிந்தும் பிரசாரமா?

தேர்தல் முடிந்தும் பிரசாரமா?

தர்மபுரி லோக்சபா தொகுதியில், பா.ம.க.,இளைஞரணி தலைவர், அன்புமணியை வீழ்த்தி, தி.மு.க.,வைச் சேர்ந்த, செந்தில்குமார் வெற்றி பெற்றார்.வெற்றிச் சான்றிதழ் பெற்ற பின், அவர் கூறுகையில், 'வெளியூரைச் சேர்ந்த, அன்புமணியால், இத்தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியாது என்பதால் தான், அவரை, இங்கு போட்டியிட வேண்டாம் எனக் கூறினேன். மத்தியில், எங்கள் கூட்டணி, ஆட்சியில் இல்லாவிட்டாலும், தொகுதி வளர்ச்சிக்காக, நிதி பெற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். மக்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வேன்' என்றார்.அங்கிருந்த பார்வையாளர் ஒருவர், 'அதான் ஜெயிச்சுட்டாரே... அப்புறம் எதுக்கு, பிரசாரம் பண்ணுறாரு...' என்றதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

கட்சி மாறினா, பேச்சும் மாறும்!

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வின் முன்னாள், எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், சுயேச்சையாக போட்டியிட்டார். இவர், 27 ஆயிரம் ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.இது குறித்து அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 'சுயேச்சையாக போட்டியிட்ட எனக்கு, 'டிபாசிட்' தொகையை திரும்ப பெறும் அளவுக்கு, விளாத்திகுளம் மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேனியில், தன் மகன் வெற்றிக்காக, துணை முதல்வர், பன்னீர்செல்வம், 400 கோடி ரூபாய் வரை, செலவு செய்துள்ளார். வரலாற்றில், இது மிகப் பெரிய கொடுமை' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'இத்தனை ஆண்டுகள், அ.தி.மு.க.,வுல இருந்தப்ப, இந்த விவகாரம் தெரியாதோ... ரொம்ப நேர்மையானவரு மாதிரி பேசுறாரே...' என, 'கமென்ட்' அடித்தபடி நகர்ந்தார்.

காலம் கடந்த ஞானேோதயம்!
திராவிடக் கட்சிகளில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா நினைவு நாளில், அவர்களின் உருவப்படத்தை வைத்து, நினைவு நாள் அனுசரிப்பது வழக்கம்.முன்னாள் பிரதமர், ராஜிவின், 28வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மாவட்டந்தோறும் அமைதிப் பேரணி நடத்த, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.அனைத்து மாவட்டங்களிலும், அக்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற, பேரணி நடந்தது. ராஜிவ் படத்தை வைத்து, நினைவு நாளை அனுசரித்தனர்.சென்னை, துறைமுகம் பகுதியில் நடந்த, ராஜிவ் நினைவு நாள் கூட்டத்தை பார்த்த, அப்பகுதி முதியவர் ஒருவர், 'பயங்கரவாதத்திற்கு பலியான, ஒரு தலைவரின் உயிர் தியாகத்தை, பொதுமக்களுக்கு உணர்த்த, ஆண்டுதோறும், இப்படி செய்திருந்தால், தமிழகத்துல, பல பிரிவினைவாத இயக்கங்கள் கிளம்பியிருக்காது' என்றபடியே, நடையைக் கட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement