Advertisement

இன்னா செய்தார் நாணட்டும்!

குலோத்துங்க மன்னனின் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற, புலவர்கள் பலர், மன்னனின் புகழ் குறித்தும், பரம்பரையின் வீரம் குறித்தும் புகழ்ந்து பாடினர். ஆனால், அவ்வையார் மட்டும், 'வரப்புயர' என்ற, ஒற்றை வார்த்தையில், வாழ்த்துக் கூறினார்.


மன்னரும், அமைச்சரும், அதன் விளக்கம் கோரியபோது, 'வரப்புயர நீருயரும் / நீருயர நெல்லுயரும் / நெல்லுயரக் குடியுயரும் / குடியுயரக் கோலுயரும் / கோலுயரக் கோனுயர்வான்' என்றார்.அப்பாடலின் பொருள் என்னவென்றால், வயலில், வரப்பு உயர்ந்தால், நீரின் அளவு அதிகரிக்கும்; தண்ணீர் இருந்தால், நெல் விளையும்; விளைச்சலால், மக்களின் வாழ்வு சிறக்கும்; மக்களின் வாழ்வு சிறந்தால், மன்னனின் ஆட்சி சிறக்கும்.அதாவது, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே, நாட்டின் முதன்மையான வளர்ச்சி. உணவு உற்பத்தியே, மற்ற அனைத்து வளர்ச்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.


இந்தியா எனும் வளமிக்க நாட்டில், ஒரு பக்கம், நதி நீர் வீணாவதும், மறுபக்கம், தண்ணீரின்றி மக்கள் துயர்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே, 1858ல், 'இந்தியாவில், நதிகளை இணைக்க வேண்டும்' என, பிரிட்டிஷ் பாசன பொறியாளர், ஆர்தர் காட்டன் தெரிவித்துள்ளார்.கொள்ளிடம் ஆற்றில், மேலணை மற்றும் ஆந்திர மாநிலம், கோதாவரி நதியின் குறுக்கே, அணை கட்டி, 10 லட்சம் ஏக்கர் நிலத்தில், விவசாயத்தை செழிக்க செய்தவர், ஆர்தர் காட்டன்.'இந்திய நீர்பாசனத்தின் தந்தை' என, போற்றப்பட்ட, ஆர்தர் காட்டன் கூறி, 160 ஆண்டுகளாகியும், நதி நீர் இணைப்பு, இதுவரை சாத்தியப்படவில்லை.நதிகள் இணைப்பால், 3.5 கோடி ஹெக்டேர் நிலங்களுக்கு, பாசன நீர் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க முடியும். வேலை வாய்ப்பு பெருகும். உணவு உற்பத்தியில், நாடு தன்னிறைவு அடையும்.


இந்திய நிலப்பரப்பு, கரடு முரடானது. மலை, சமவெளி, பாலைவனம், காடு, கடற்கரை என, பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது.நதிநீர் இணைப்புத் திட்டத்தில், இமயமலையில் இருந்து உருவாகும், 14 நதிகளையும், 16, தீபகற்ப நதிகளையும், ஒன்றோடொன்றும் இணைக்க வேண்டும். இதற்கு, 15 ஆயிரம் கி.மீ., நீளத்துக்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.கடந்த, 2001ல், இமயமலையில் தோன்றும் நதிகள் மற்றும் தீபகற்ப ஆறுகளை இணைக்க, 5.60 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, நிபுணர் குழு தெரிவித்தது.இந்த திட்டம் செயல்படுத்தும்போது, கட்டப்படும் அணைகள், கால்வாய்கள் மற்றும் பிற கட்டுமானங்களைப் பராமரிப்பதற்கு, ஆண்டிற்கு, 2 லட்சம் கோடி ரூபாய் வரை தேவைப்படும்.

நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது, இந்திய பொருளாதாரத்தில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், நதி நீர் இணைப்பு என்பது, அசாத்தியமானது என, பிரமிப்பு ஏற்படுவது, தவிர்க்க முடியாதது. ஆனால், முயற்சித்தால், முடியாதது எதுவுமில்லை என்பதற்கு, தசரத் மஞ்சி என்பவரே உதாரணம்.

பீகாரின், கயா மாவட்டத்தில் உள்ள, கெலார் என்ற கிராமத்தில், 1934ல் பிறந்தவர், தசரத் மஞ்சி. காணி நிலமில்லாத, விவசாயக் கூலி.கடந்த, 1959ம் ஆண்டு, அவரின் மனைவி பாகுனி தேவி, மலையிலிருந்து விழுந்து, படுகாயமடைந்தார். மலையைச் சுற்றி, 80 கி.மீ., துாரம் சென்று, மருத்துவமனையை அடைவதற்குள், பாகுனி தேவி இறந்தார்.மலையை பிளந்து, பாதை உருவாக்கியிருந்தால், தன் மனைவியை காப்பாற்றி இருக்கலாம் என நினைத்தவர், பிறருக்கு, அந்த கதி ஏற்பட கூடாது என்பதற்காக, சுத்தியல், உளியோடு, மலையை குடைந்து, பாதையை உருவாக்க, களமிறங்கினார்.ஒரு தனி மனிதன், மலையை குடைந்து, பாதை அமைக்க முடியுமா என்ற, கேள்விகளும், கிண்டல்களும், அவரின் மனதை மாற்றவில்லை.தனி மனிதனாக, 22 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, மலையின் நடுவே, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்தில், பாதை அமைத்தார்.


இப்போது, கெலார் மக்கள், 13 கி.மீ., துாரத்தில் மலை கடந்து விடலாம்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2007 ஆக., 17, 'மலை மனிதன்' தசரத் மஞ்சி காலமானார். சாதாரண மனிதனின், அசாதாரண செயலால், அவரது உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.தனி மனிதனால், மலையை தகர்க்க முடியும் போது, மாபெரும் அரசு இயந்திரத்தால், நதி நீர் இணைப்பை சாத்தியமாக்க முடியாதா?


கடந்த, 2015ல், ஆந்திர மாநில அரசு, கிருஷ்ணா - கோதாவரி நதிகளை இணைக்கும், 'பட்டீசீமா' திட்டத்தை செயல்படுத்த களமிறங்கி, வெற்றி கண்டது. 1,300 கோடி ரூபாய் நிதியில், கோதாவரி நதி நீர், 174 கி.மீ., துாரம் கால்வாய் வழியாக கொண்டு சென்று, கிருஷ்ணா நதியின் அணைக்கட்டில் சேர்க்கப்பட்டது.

இதேபோல, மத்தியப் பிரதேசத்தின், கென்- - பேட்வா நதிகள் இணைப்புத் திட்டம், சாத்தியமானது.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய நீர் வளத் துறை அமைச்சர், நிதின் கட்காரி, 'நீர் அதிகமாக உள்ள மாநிலத்தில் இருந்து, பற்றாக்குறையாக உள்ள மாநிலத்திற்கு, தண்ணீர் கொண்டு செல்லுவதைப் பற்றி, ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். 'ஆந்திர மாநிலம்,கோதாவரி ஆற்றில் இருந்து, ஆண்டுக்கு, 1,100 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. அதை பயன்படுத்த, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம், 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.கால்வாய் திட்டத்துக்கு மாற்றாக, 'பைப் லைன்' மூலம், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்' என்றார்.

அவரின் திட்டப்படி, 'பைப் லைன்' திட்டத்திற்கு, அதிக நிதி தேவைப்படாது. அது, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி, நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தில், பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.இந்நிலையில், மத்திய அமைச்சர், நிதின் கட்காரி, தன், 'டுவிட்டர்' சமூகவலைதளப் பக்கத்தில், 'தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க, கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான், என் முதல் பணி' என, குறிப்பிட்டுள்ளார்.

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'

- திருக்குறள்.தமிழர்களுக்கு, இக்குறளின் அர்த்தம் புரியும் என, நம்புகிறேன்.

சி.கலாதம்பி
சமூக ஆர்வலர்
இ-மெயில்: sureshmavin@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Siva_Muscat - Muscat,இந்தியா

  அருமையான பதிவு. நாம் தற்போதய அரசியல் கட்சிகளை அல்லது அரசியல் வாதியை பற்றி எதிர்மறை கருத்துக்களை தவிர்த்து ஆக்கபூர்வமாக சிந்திப்போம், மற்றும் ஆட்சியாளர்களை இதை செய்ய நிர்பந்தம் செய்வோம். அந்த பீகார் மாநில மஞ்சியை போல, நாமும் இந்த நற்காரியத்தை செய்ய முயற்சிப்போம் அதனால் நம் வருங்கால சந்ததியினர் பயனடையட்டும்.

 • Raj - coimbatore,இந்தியா

  மக்கள் தீர்ப்பு சரியானதே. ஏற்கனவே இணைந்திருக்கும் காவேரி போன்ற நதிகளில் நீர் பங்கீடு முறைப்படி இல்லை. காவேரி குறித்த உயர் நீதி மன்ற தீர்ப்பில் தமிழ் நாட்டு மக்களுக்கு "scheme " என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்து விட்டது. அந்த வார்த்தையின் பொருள் தெரியவில்லை என்ற மத்திய அரசின் மனு அவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு காட்டி விட்டது. தமிழ் நாட்டு மக்கள் இன்னா செய்யவில்லை. மாறாக நீர் ஆதாரங்களை சூறையாடுவதற்கு துணை போய் விட்டார்கள். தங்கள் தலையில் மண் அள்ளி போட்டுகொண்டு 40 வருடமாக வெளி ஊரிலிருந்து தண்ணீர் வரும் என்று நம்பி உள்ளூரில் நீர் செல்வங்களை துண்டாடி அழித்துவிட்டார்கள். நதி நீர் இணைப்பு பற்றிய உங்கள் சிந்தனையும் , வரலாற்று சான்றுகளும் சிறப்பு. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

 • Nathan - Bengaluru,இந்தியா

  மிக அருமை... இவை நிறைவேற்றப் பட்டால் இதானால் பல லட்சங்கள் கோடி ரூபய்களை ஈட்ட முடியும்... நாடு முழுவதும் உள்ள விவசாயம், அதைச் சார்ந்த தொழில்கள் செழிக்கும்... வேலை வாய்ப்பு பிரச்சனைகள் இல்லாமல் போகும்... நமது உள் நாட்டின் தேவைகள் பூர்த்தியாகும்... ஏற்றுமதிகள் மூலாம் அன்னிய செலாவனி நிதியைக் அதிகரிக்க செய்ய முடியும்... நீர் போக்குவரத்து சாத்தியமாகும்...மக்களின் கனவு திட்டத்தை இந்த அரசு நிறைவேற்ற முடியுமானால் உலகின் எந்த சக்கரவர்த்திகளும் செய்யாத சாதனையாக என்றென்றும் வரலாறு பேசும்.... இந்தியாவின் லீ குவான் யூவாக இன்றைய ஆளுபவர்கள் பேசப் படுவார்கள்... அதில் தமிழகத்தில் தினமலரும் பங்கும் வரலாற்றில் இருக்கும்...

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  இப்படி நல்ல கருத்துக்களை கூறாதிறீர்கள். உங்களை தமிழின துரோகி, இந்து தீவிரவாதி, பட்டியலினத்தவரின் எதிரி என்று முத்திரை குத்திவிடுவார்கள் இந்த திராவிட திருட்டு கும்பல்.

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  அருமையான பதிவு திரு கலாதம்பி அவர்களே. நல்ல சிந்தனை. நன்றி. ஆனால், இங்குள்ள அற்ப திராவிட கட்சிகள் மக்களை ஜாதிவாரியாக பிளவுப்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார்கள். தமிழகத்தையே அசிங்கப்படுத்திவிட்டார்கள். அரசியல் என்ற பெயரில் சுயநலவாதிகள் பெருகி மக்களை அழித்துவிட்டார்கள். மக்களிடையே மனத்தளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டாலொழிய, எதுவும் இங்கே சாத்தியமில்லை. அடுத்த தலைமுறையையும் குழப்பி கெடுத்துவிட்டார்கள் நாசகார பாவிகள் ஜாதியின் பெயரால்... எங்கும் தனி, எதிலும் தனி, எப்போதும் தனி என்று எல்லாவற்றிலும் தனித்தன்மையோடு இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தி, இப்போது ஒட்டு மொத்த இந்தியாவால் "தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்". இவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களை திருத்த முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உண்மையும் நிதர்சனமும் புரியும் போது, நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்...சரி செய்ய முடியாத அளவிற்கு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement