Advertisement

அதெல்லாம் தொழில் ரகசியம்


அதெல்லாம் தொழில் ரகசியம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமையில், ஒன்றிய ஊழியர்கள், 10 பேர், கனகம்மாசத்திரம் பஜாரில், தடை செய்யப்பட்ட, 'பிளாஸ்டிக்' பொருட்கள் விற்கப்படுகிறதா என, ஆய்வு நடத்தினர்.பெரும்பாலான கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கடைக்காரர்களுக்கு, அபராதமும் விதித்தனர்.அங்கிருந்த பெட்டிக் கடைக்காரர், 'பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும், 50 - 100 கம்பெனிகளை, அரசு மூடலாமே... ஏன் தேவையில்லாமல், தமிழகத்தில் உள்ள, லட்சக்கணக்கான கடைகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தணும்?' என்றார்.வாடிக்கையாளர் ஒருவர், 'இதெல்லாம், ஒரே கல்லுல, ரெண்டு மாங்காய் அடிக்கிற தொழில் ரகசியம்' என்று கூறி, ஒன்றிய ஊழியர்களை முறைத்தார்; அவர்கள், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர்.

'ஜெ., என்ன பாடு பட்டாங்களோ...!'
கோவையில் நடந்த, வனத்துறை காப்பாளர்கள், வனவர்களின் பயிற்சியை பார்வையிட்டு, அமைச்சர் சீனிவாசன், சமீபத்தில் ஆய்வு செய்தார்.பின் நிருபர்களுக்கு அவர், பேட்டி அளித்தார். ஒரு நிருபர், 'ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக, டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க.,வை அனுமதிக்கவில்லையாமே...' என கேட்டார்.அதற்கு, அமைச்சர், சீனிவாசன், 'என்ன தம்பி, இதெல்லாம் கேட்குறீங்க... டில்லியில் நடக்குறதை, எங்ககிட்ட கேட்டா எப்படி?' என, 'எஸ்கேப்' ஆனார்.நிருபர் ஒருவர், 'பாவம், ஜெ., இந்த மாதிரி அமைச்சர்களை வச்சிக்கிட்டு, என்ன பாடு பட்டாங்களோ...' என, அங்கலாய்த்தார்; மற்ற நிருபர்கள், அதை ஆமோதித்தனர்.

சீனா மவுனம் ஏன்?

மதுரை, மடீட்சியா அரங்கில், மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக, பா.ஜ., மாநிலச் செயலர், சீனிவாசன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'இந்தியா, 130 கோடி மக்கள் தொகை உடைய, உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தை. எனவே தான், சிக்கிம் மாநிலம், டோக்லாம் பிரச்னையின் போது, இந்தியாவிடம், சீனா பின்வாங்கியது. 'சீனப் பொருட்களை விற்கும் மையமாக, இந்தியா உள்ளது. எனவே, வர்த்தகம் தான் பெரிது என, டோக்லாம் பிரச்னையில், சீனா மவுனம் காத்தது' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'இப்ப வௌங்கிடிச்சு... இனி, நாடு முழுக்க, சீனப் பொருட்கள் தான் சந்தையில கிடைக்கும்...' என்றதும், சுற்றியிருந்தோர், கலவரப் பார்வை பார்த்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement