Advertisement

இசை மேதை எம்எஸ்விக்கு ஓரு பிரம்மாண்ட விழா

Share


நினைத்தாலே இனிக்கும்இசை மேதை எம்எஸ்விக்கு எடுக்கப்படும் பிரம்மாண்ட விழா
தமிழ் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கி மெல்லிசை மன்னராக நமது இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகின்ற 7ஆம் தேதி ஞாயிறன்று மாலை 4.15 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், "நினைத்தாலே இனிக்கும்" என்ற தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எம்.எஸ்.வி. அவர்களின் இசையமைப்பில் உருவான அதியற்புதமான பாடல்களை "லஷ்மன் ஸ்ருதி" இசைக் குழுவினர் வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், டி.எம்.எஸ்.செல்வக்குமார், ஸ்ரீநிவாஸ், மதுபாலகிருஷ்ணன், முகேஷ், மாலதி லஷ்மண், கல்பனா, ப்ரியா ஹிமேஷ், சின்னத்திரை புகழ் சுசித்ரா பாலசுப்ரமணியம், ப்ரியங்கா, ஸ்ரீநிதி, வர்ஷா ஆகியோர் பங்கேற்று மெல்லிசை மன்னரின் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக மரியாதைக்குரிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மெல்லிசை மன்னருக்கு புகழ் சேர்க்க உள்ளனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தனது இசைக் கோர்ப்பின்போது பயன்படுத்திய இசைக்கருவிகளான....
ஹார்மோனியம், பியானோ, வீணை, சித்தார், சாரங்கி, சந்தூர், புல்லாங்குழல், சாக்ஸஃபோன், க்ளாரினெட், மெளத் ஆர்கன், ஷெனாய், நாதஸ்வரம், வயலின், வியாலோ, செல்லோ, டபுள் பேஸ், அக்கார்டியன், கிட்டார், மேண்டலின், ட்ரம்பட், ட்ராம்போன், யூஃபோனியம், ஃப்ரெஞ்ச் ஹார்ன், பேங்கோஸ், காங்கோ, தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, டேப், தபேலா, ட்ரம்ஸ், தும்பா, ரோட்டோ ட்ரம்ஸ், துந்தனா, பம்பை உடுக்கை, உருமி, செண்டை, டோலக், டோல்கீ, கோல், கடசிங்காரி, நகரா, பக்வாஜ்போன்ற பெரும்பான்மையான இசைக்கருவிகளை இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தி, மெல்லிசை மன்னரின் சாகாவரம் பெற்ற, சரித்திரம் படைத்த பாடல்களை ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் இசைவிருந்து படைக்க இருக்கின்றனர்.
(மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன்) என்ற எம்எஸ்வி, இளம் வயதிலேயே நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை முறைப்படி கற்று, தேர்ச்சிப் பெற்று, தனது 13 வது வயதிலேயே மேடை நிகழ்ச்சிகள் நிகழ்த்திய பெருமைக்குரியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் 1000 திரைப்படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார்.
நாம் அனைவரும் பெருமையுடன் பாடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தான ”நீராருங்கடலுடுத்த” பாடல் அவரது இசையில் உருவானதாகும்.
நாணம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, சாந்தம், வியப்பு, கருணை, கோபம், வீரம், காதல், மகிழ்ச்சி, அன்பு, சோகம், பாசம், பரவசம், பிறப்பு, இறப்பு, தாய்மை, தனிமை, நட்பு, போட்டி, எழுச்சி, நாட்டுப்பற்று, நையாண்டி என மனித உணர்வுகள் அத்தனையையும் தனது பாடல்களில் பிரதிபலித்தது மட்டுமின்றி, பல விதமான கதை களங்களை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் உயிரூட்டியவர்.எல்லா தரப்பினரையும் ரசிக்கவைத்தவர்.
அனைத்து மதங்களுக்குமான தனித்தன்மையுடன் கூடிய பக்திப் பாடல்களும் மெல்லிசை மன்னரின் புகழுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
மெல்லிசை மன்னரின் வெண்கலக் குரலில் நூற்றுக்கணக்கான பாடல்கள் நம்மைக் கவர்ந்திருந்தாலும், ”கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அவர் பாடிய ”விடைகொடு எங்கள் நாடே” பாடல், கேட்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் உள்ளத்தை உலுக்கி, உதிரத்தை உருக்கி, விழிகளில் நீர்பெருக்கி, நாடி நரம்புகளையெல்லாம் சோகம் இழையோட வைக்கும்.
கவியரசு கண்ணதாசனின் மனங்கவர்ந்த இசையமைப்பாளர் என்ற பெருமையும் மெல்லிசை மன்னருக்கே. கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இறவா வரம் கொடுத்தவரும் இவரே.
இந்த இரு யுகபுருஷர்களின் வரிகளைத்தாண்டி அவருடன் பணியாற்றிய அத்தனைக் கவிஞர்களின் வரிகளையும் உதட்டுச் சாயமாய் அல்லாமல் உதட்டுக்குள் உள்ளிருக்கும் உதிரமாய் கலந்து விட்டவர்.
இசைமேதை எம்எஸ்வி அவர்களுடன் சமகாலத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், அவரது இசையில் பாடிய பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழிட்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து, இன்றைய தலைமுறை நடிக-நடிகையர், பாடக-பாடகியரும் கலந்து கொண்டு இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியினை சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் பற்றிய விசாரணைக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளவும்: 77088 61500 / +91-44-4287 4044
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • karutthu - nainital,இந்தியா

    இதை ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பினால் எம் எஸ் விசுவநாதன் இசை அமைத்த , கண்ணதாசன் ,வாலி ஆகியவர்களின் பாடல்களை நாங்களும் கேட்டு மகிழ்வோம்

  • sathish - melbourne,ஆஸ்திரேலியா

    பிரமாண்ட விழா ,,இதில் ஒரு சதமாவது நிதி அவர் குடும்பத்திற்கு போகுமா ? இல்லை.. எல்லாம் அவரின் பெயரை சொல்லி ஆட்டை போடும் குள்ளநரி கூட்டம் தாம் .பழைய பெயர்களை சொல்லியே துட்டு சேர்க்கும் கேடு கெட்ட கேவல ஜென்மங்கள் தான் இப்போது .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement