Advertisement

டி.வி.ஆர்., ஒரு கடல் வட்டம்!

Share

இன்றைக்கு தொழில்நுட்பம் நிறையவே வளர்ந்திருக்கிறது. ஊடகங்களின் வளர்ச்சியோ அபரிமிதமாக இருக்கிறது. இயற்கையும் மழையை குறைவின்றி பொழிகிறது. ஆனாலும் ஆட்சியாளர்களிடமும், அதிகாரி களிடமும் போதிய நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால், தண்ணீர் பிரச்னை எங்கும் நிலவுகிறது; எப்போதும் பயமுறுத்துகிறது.

ஆனால், தனி ஒரு பத்திரிகையாளராக இருந்து, ஒரு ஊருக்கு ஏற்பட இருந்த தண்ணீர் பிரச்னையை தடுத்து நிறுத்தியதுடன், இன்று வரை அந்த பிரச்னை, அந்த ஊரில் எட்டிப் பார்க்காத அளவிற்கு, திட்டம் வர துணை நின்று, துணிச்சலுடன் செயல்பட்டவர் தான், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., என, மரியாதையுடன் அழைக்கப்படும் டி.வி.ராமசுப்பையர். இன்று அவரது, 111வது பிறந்த நாள். தண்ணீர் பிரச்னையை தீர்க்க அவர் எடுத்த தீர்க்கமான விஷயங்களை சொல்வதில் பெருமைப்படுகிறோம்.பிரிக்கப்படாத, அன்றைய நாஞ்சில் நாடான, நாகர்கோவிலை ஆண்டு வந்த, திருவிதாங்கூர் ராஜ வம்சத்தினர், பரம்பரையாகவே, நாஞ்சில் நாட்டு மக்களிடம் தனிப்பற்று உடையவர்களாக இருந்தனர். திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கு, தமிழ் மக்களிடம் பாசம் அதிகம்.

ரூ.10 லட்சம்நாகர்கோவில் நகரம், குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. அழகிய பாண்டியபுரம், கன்னியாகுமரி சாலைக்கு கீழ்ப்பகுதியில் எங்கு தோண்டினாலும், உப்பு கலந்த நீரே வரும்.அந்த சாலைக்கு மேற்கு பகுதியில், கிணறுகளில் நல்ல தண்ணீர் உண்டு. அதுவும் எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. பெரும்பான்மையான இடங்களில் கிணற்றில் ஆழம், 80 அடி முதல், 100 அடி வரை இருந்தது. குடிநீருக்காக மக்கள், வெகுகாலமாகப் போராடி வந்தனர்.லாரிகளில் பெரிய, 'டேங்க்' வைத்து, நல்ல தண்ணீரைக் கொண்டு வந்து, ஒவ்வொரு வார்டிலும் விற்று வந்தனர். சமைக்கவும், குடிக்கவும் மட்டும் அந்த தண்ணீரை வாங்கினர்; மற்ற தேவைகளுக்கு கிணற்றுநீரை உபயோகித்து வந்தனர்.இந்நிலையில், சர்.சி.பி.ராமசாமி அய்யர், நாகர்கோவில் குடிதண்ணீர் திட்டத்திற்காக, 10 லட்ச ரூபாய் அனுமதித்து, பாதி மானியமாகவும், மீதி கடனாகவும் தரப்படும் என, அறிவித்தார். நாகர்கோவிலிலிருந்து, 11 கி.மீ., வட திசையிலிருக்கும் முக்கூடல் என்ற ஊரில், சிறிய அணையைக் கட்டி, அங்கு இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது தான் திட்டத்தின் நோக்கம். தீவிரமாக வேலை நடந்து கொண்டிருக்கும் போது, நீலகண்டய்யர் என்ற, ஓய்வுபெற்ற இன்ஜினியர் திடீரென ஒர் அறிவிப்பை விடுத்தார்.

அரசு கைவிட்டது'அரசால் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த குடிநீர்த் திட்டம் வீண் பணச்செலவு; நகர சபையையும், மக்களையும் வருங்காலத்தில் பெரிய கடனாளியாக்கி விடும். அதற்கு பதில், செலவு குறைந்த ஒரு திட்டத்தை நான் வகுத்திருக்கிறேன். அதை அரசு தான் மேற்கொள்ள வேண்டும்' என்று சொல்லி, மனுவை, சர் சி.பி.ராமசாமி ஐயரிடமும், மகாராணி அம்மையாரிடமும் கொடுத்தார்.'அவர், பெரிய இன்ஜினியர். ஆகவே, அவரின் திட்டத்தை அலட்சியம் செய்வதற்கில்லை. அவரது திட்டம் நியாயமாகவும் இருக்கும்' என்று கருதி, அதைக் குடிநீர் வாரியத்தின் பரிசீலனைக்கு அரசு அனுப்பி வைத்தது. இதன் காரணமாக, நாகர்கோவில் நகர குடிநீர்த் திட்டத்தை அரசு கைவிட்டது போன்ற நிலை ஏற்பட்டது .

நீலகண்டய்யரின் திட்டம் இது தான்: நாகர்கோவில், கோட்டார் பகுதிகளில், அச்சன் கிணறு என்ற ஒரு கிணறும், ஜில்லா கோர்ட் காம்பவுண்டிற்குள் ஒரு கிணறும், கிருஷ்ணன் கோவில் கிணறும் என, மூன்று வற்றாத கிணறுகள்இருந்தன. இவற்றை நன்றாக ஆழப்படுத்தி, மேல்நிலைத் தொட்டி கட்டி, மின்சார பம்பு செட் வைத்து, நகரை மூன்று பிரிவுகளாக்கி குழாய்கள் மூலம் எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் கொடுத்து விடலாம். குறைந்த செலவில் திட்டம் அமலாகும்.இவ்வாறு திட்டத்தில் விளக்கப்பட்டிருந்தது.

மனுஒரு வேலையாக, தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்த, டி.வி.ஆரின் கவனத்திற்கு இந்த விஷயம் வந்தது. அங்கு இருந்த அதிகாரி ஒருவர், 'உங்கள் ஊர் குடிநீர் திட்டம், கோவிந்தா ஆகி விடும் போலிருக்கிறதே...' என்று சொல்லியிருக்கிறார். பதறிப் போன டி.வி.ஆர்., என்ன... ஏது என்று விசாரித்து விபரம் முழுவதையும் சேகரித்துக் கொண்டார்.டி.வி.ஆர்., மனதில் வருத்தம் வந்து விட்டது. கிணற்று தண்ணீர் இறைப்பு என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்பது அவர் கணிப்பு. வெளிப்படையாகச் சொன்னால், பைத்தியக்காரத்தனமான திட்டம் என்றே கருதினார். உடனே, நாகர்கோவில் திரும்பியவர், ஒரு மனுவை தயாரித்து, அதில், 'கிணறு திட்டம் வேண்டாம்; அரசு ஏற்கனவே தயாரித்த திட்டம் தான் வேண்டும். அதற்கான கடன் சுமையை தாங்க, நாங்கள் தயார்' என்று விவரமாக மனுவை தயாரித்தார்.அந்த மனுவை, தானே, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எடுத்துச் சென்று, விஷயத்தை எடுத்துக் கூறியதுடன், அவர்களது கையெழுத்தையும் பெற்று, அரசுக்கு, திவானுக்கு என்று தனித் தனியாக அனுப்பி வைத்தார்.மேலும், நகரசபைத் தலைவராக இருந்த சத்திய வாகீஸ்வர ஐயரிடம், நாகர்கோவிலுக்கு வர இருக்கும் ஆபத்தை விளக்கி கூறினார். அவரும் ஒரு பொறியாளர் என்பதால், விஷயத்தை விளங்கிக் கொண்டார்.

இதன் காரணமாக நகரசபையின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க நீலகண்ட ஐயருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.அவரும் வந்து, திட்டம் பற்றி சொன்னார். ஒரு உறுப்பினருக்கு கூட அவர் சொன்னது சரியெனப் படவில்லை.உடனே அவரது திட்டத்தை நிராகரித்து, அரசின் முந்தைய திட்டத்தை அமலாக்கக் கோரியும், கடன் பொறுப்புகளை ஏற்பதாகவும், ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, மகாராஜாவிற்கும் திவானுக்கும் அடுத்த நாளே அனுப்பி வைத்தனர்.

அரசு விழித்துக் கொண்டதுஒவ்வொரு கிணற்றிலும், 3 அங்குலம் விட்டம் உள்ள பம்பு வைத்து, 15 நிமிடம் எடுத்தவுடன் கிணறு வற்றி விடுகிறது. மீண்டும், 15 நிமிடம் தண்ணீர் ஏற, 12 மணி நேர இடைவெளி வேண்டும்.எனவே, நீலகண்ட ஐயரின் திட்டம் அர்த்தமற்றது; உடனே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குடிநீர் வாரிய பொறுப்பாளர், பாலகிருஷ்ண ராவின் அறிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.டி.வி.ஆரின் இந்த அடுத்தடுத்த அறிக்கை தயாரிப்பு மற்றும் அணுகுமுறை காரணமாக, அரசு விழித்துக் கொண்டது. திரை மறைவில் ஏதோ சூது இருக்கிறது என்றும் கருதியது. ஆகவே, நீலகண்ட ஐயரின் திட்டத்தை தள்ளுபடி செய்து விட்டு, அரசின் பழைய திட்டத்தை வேகமாக நிறைவேற்ற உத்தரவு போட்டது.அந்த திட்டத்தை, டி.வி.ஆர்., தொடர்ந்து முடுக்கி விட்டுக் கொண்டே இருந்ததால், 1945ம் ஆண்டு, ஜூன் 20ம் தேதி, திருவனந்தபுரம் இளையராஜா மார்த்தாண்ட வர்மா, நாகர்கோவில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுவே இன்றளவும், மக்கள் பயன்பெறும் முக்கடல் குடிநீர்த் திட்டம்.இது போல, கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைப்பதிலும், டி.வி.ஆர்., முன் நின்றார்.

வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்டி.வி.ஆரின் சமுதாய பார்வையும், பணிகளும் இப்படித்தான் இருந்தது. இது குறித்து பேராசிரியர் டாக்டர் வி.ஐ.சுப்பிரமணியம் குறிப்பிடுகையில், டி.வி.ஆரின் குணநலன்களை செயல்களை, நாங்கள், 'கடல் வட்டம்' என்போம்.கடலில் முதலில் ஒரு சிறு புள்ளி வட்டம் தோன்றி, அது, அடுத்தடுத்து பெரிதாகிக் கொண்டே பல வட்டங்களாகப் பெருகும். டி.வி.ஆரும் அப்படித்தான். மக்களுக்கு நல்லது செய்ய, ஒரு சிறு புள்ளி கிடைத்தால் போதும். அதை வைத்து பெரிய வட்டமாக்கி திட்டத்தை செயல்படுத்திவிடுவார் .

தொண்டுள்ளம் கொண்ட டி.வி.ஆர்.தன் கிராமத்தில் இருந்த கல்யாண மண்டபம் புதுப்பிப்பு, தழுவிய மகாதேவர் கோவில் திருப்பணி, வாசக சாலை அமைத்தல் என, நல்ல விஷயங்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.அவர் நாகர்கோவில், கன்னியாகுமரியில் மேற்கொண்ட சமுதாய பணிகள், ரயில் பாதை இணைப்பு, பல்கலைக்கழகம் என்பதெல்லாம் அவரது மனதில் விரிந்து பரந்த, பெரிய கடல் வட்டமாகும்.மொழி, இனம் என்று எவ்வித பாகுபாடுமின்றி, இந்த கடல் வட்டம் பெரிதாகிக் கொண்டே போனது தான் அவரது நீண்டபுகழுக்கு காரணம்.
நன்றி: கடல் தாமரை(தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாற்று நுால்)-எல்.முருகராஜ்,பத்திரிகையாளர்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement