Advertisement

ஒரு பிரதமர் தமிழன் ஆனார்!

ஐந்தாண்டுகள் மோடி பிரதமராக பணியாற்றி, மீண்டும் 2019 தேர்தலில் போட்டியிட்ட போது முன்பை விட அதிக மெஜாரிட்டியில், தனிப்பெரும்பான்மையில் வென்றார். பல மாநிலங்களில் பா.ஜ., வெற்றிக்கொடியை பறக்க விட்ட போது, தமிழகத்தில் மட்டும் படுதோல்வி. மோடியின் வெற்றி அலையில் இருந்து தமிழகம் தனித்து நின்றது.


அதற்கு காரணங்கள் பல! மோடி தமிழகத்தையும், தமிழையும் வெறுப்பவர்... சர்வாதிகாரி, மத சார்பாளர், ஹிந்தி, சமஸ்கிருதத்தை புகுத்துபவர், நீட் தேர்வை திணிப்பவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிப்பவர், மாநில உரிமையை தராதவர்...என்று பல காரணங்கள் சொல்லி பிரசாரம் செய்தன பல கட்சிகள்; அதற்கு துணை போயின சில ஊடகங்கள். சமூக ஊடக 'போராளிகள்', போலியான மதசார்பற்றவர்கள், போலியான தமிழ் ஆர்வலர்கள் இதற்கு துாபம் போட்டனர். தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே இந்த திட்டமிட்ட விஷம பிரசாரம் துவங்கியது. எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு, தமிழகத்திற்கு நாட்டின் பிரதமர் வரும் போது, இந்திய இறையாண்மையையே கேள்விக்குறியாக்கி 'கோ பேக் மோடி' என்று சமூக ஊடகத்தில் 'டிரெண்டிங்' செய்தனர்.

எதிர்ப்புகள் வந்த போதும்சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த மோடிக்கு கறுப்பு கொடி காட்டினர். மதுரையில் எய்ம்ஸ் திறப்பு விழாவிற்கு வந்த போது, கறுப்பு பலுான்கள் பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தார் வைகோ. தேர்தலுக்கு முன்பு மோடி எந்த ஊருக்கு வந்தாலும், அவருக்கு கறுப்பு கொடி காட்டினார் அவர். பின்னர் அவர் ராஜ்யசபா எம்.பி.,யாகி, பிரதமர் மோடியை 'மரியாதை நிமித்தமாக' தனியாக சந்தித்தது தனிக்கதை!எந்த பிரதமரையும் 'திரும்பி போ' என்று தமிழகம் சொன்னது இல்லை (பிரதமர் இந்திரா காந்திக்கு தி.மு.க., கறுப்பு கொடியை காட்டியதை தவிர). ஆனால் மோடி மீது மட்டும் வெறுப்பை உமிழ்ந்தார்கள். திரும்பி போ என்று கோஷங்கள் எழும்பிய போதும், திரும்ப திரும்ப தமிழகம் வந்தார் அவர். மதுரைக்கு எய்ம்ஸ் உட்பட பல திட்டங்களை தமிழகத்திற்கு தந்து துவக்கி வைத்தார்.பத்தாண்டுகள் பதவி வகித்த மன்மோகன் சிங், இரு முறை மட்டுமே வந்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?இப்படி தன்னை புறக்கணித்தாலும், பொய் பிரசாரங்கள் செய்தாலும், 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது போல மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? பார்ப்போம்...குஜராத்தியை தாய் மொழியாக கொண்ட மோடிக்கு, தமிழின் மீது மட்டற்ற பற்று உண்டு. தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, துவக்கத்தில் சில வரிகளை தமிழில் கூறுவார். முடிக்கும் போது சில வார்த்தைகள் சொல்வார். வடமாநிலங்களில் இருந்து வரும் அரசியல்வாதிகள், இப்படி மேடையில் பேசுவது சகஜம் தான் என்று கூறி நாம் கடந்து போகலாம்! ஆனால் மோடி அப்படி அல்ல; பாராளுமன்றத்தில் பேசும் போதும், சுதந்திர தின உரையின் போதும் திருக்குறளை கோடிட்டு காட்டுகிறார். பாரதியின் கவிதையை பாராட்டுகிறார். தனது பட்ஜெட்டில் புறநானுாற்றை மேற்கோள் காட்டுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நா., சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன்பூங்குன்றனாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதன்மூலம் இந்தியா என்றால் ஹிந்தி மட்டுமல்ல, அந்நாட்டின் தொன்மையான மொழி தமிழே என்று உலகமே புரிந்து கொண்டது.மோடி பேசி வந்த பின்பும் பல நாட்கள், தமிழ் மொழியின் சிறப்பு உலகெங்கும் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழர்களை பார்த்ததும் மேடையில் தமிழிலும் பேசினார். தமிழர்களிடம் தமிழில் நலம் விசாரித்தார்.பின்னர் சென்னைக்கு வந்த போது, தமிழர் உணவான இட்லி, தோசை, சாம்பார் குறித்து ஐ.ஐ.டி., நிகழ்ச்சியில் சிலாகித்தார் பிரதமர்.

பிரதமரின் தேர்வு மாமல்லபுரம்எல்லாவற்றிற்கும் மேலாக தான், வல்லரசு நாடு சீனாவின் அதிபரை சந்திக்க, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தேர்வு செய்தார். சென்னைக்கு அருகில் தமிழர்களின் பண்பாட்டு நகர், பல்லவ மன்னர்களின் தலைநகரம் மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று மோடி விரும்பினார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து விட்டது. சீன பத்திரிகைகள் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவ மன்னர்கள், சீனத்தோடு வியாபாரத்தொடர்பு வைத்திருந்த வரலாறு எல்லாம் திரும்பும் பக்கமெல்லாம் பேசப்படுகிறது. தமிழர்களின் கலைத்திறனை பறைசாற்றும் மாமல்லபுர சிற்பங்களை, இதுவரை அறியாத உலகமும் இன்று அறிந்து கொண்டது. உலகில் அதிக அளவு சுற்றுலா செல்லும் சீனர்கள், இனி சென்னை நோக்கியும் வருவார்கள். இதனால் நம் சுற்றுலா தொழில் மேம்படும்.

பண்பாட்டு உடைதமிழர் பாரம்பரிய படி வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தோளில் தொங்க, தமிழ் மண்ணில் சீன அதிபரை வரவேற்றார் மோடி. சென்னையை தாண்டினாலே கோட், சூட்டில் மாறிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், நம் பண்பாட்டு உடைக்கு மாறியிருக்கிறார் பிரதமர்.தமிழகத்தில் நடக்கும் நிகழ்வில் 'ஒரு தமிழனாய்' மாறிப்போன பிரதமரை பாராட்டாமல் இருக்க இயலுமா? தமிழ் பண்பாட்டின் பிரதிபலிப்பான சிற்பங்களை, பல்லவ கால கலை நுட்பத்தை, ராமாயணத்தை, அர்ஜுனன் தபசை எல்லாம் முன்னதாகவே நன்றாக படித்து அறிந்து கொண்டு, ஒரு 'கெய்டு' போல, சீன அதிபருக்கு நமது பிரதமர் விவரித்த தோற்றத்தை பார்த்த போது, (வேட்டி கட்டிய) பிரதமர் விளக்கியது போல மக்களுக்கு தோன்றவில்லை. தமிழர் குடும்பத்தில் பெரியவர் ஒருவர் விளக்கி சொல்வதாகவே தெரிந்தது. அந்த வேட்டி, பிரதமரை அப்படி மாற்றி இருந்தது.

இதில் என்ன ஆச்சரியம்இன்னும் ஒரு படி மேலே, சீன அதிபரிடம் தனிப்பட்ட முறையிலும், அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பிலும் தமிழில் சில வார்த்தைகள் பேசினார் மோடி. அதிபருக்கு நினைவுப்பரிசாக தமிழக பாரம்பரிய பொருட்களைதான் தந்தார். சென்னைக்கு வந்திறங்கிய போதும், டில்லி கிளம்பிய போதும் 'டிவிட்டரில்' தமிழில் 'டுவீட்' செய்தார். அதில்,'கலாசாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற, மாபெரும் மாநிலம் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று குறிப்பிட்டார். நிறைவாக டில்லி கிளம்பும் முன்பு, தங்கியிருந்த ஓட்டல் அருகே கடற்கரையில் கிடந்த குப்பைகளையும் அள்ளி இருக்கிறார்.பிரதமரின் இந்த அணுகுமுறையெல்லாம் நமக்கு ஏன் ஆச்சரியமாக இருக்கிறது என்றால், இதுவரை எந்த பிரதமரும் இப்படி தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் ஆர்வம் கொண்டு நாம் பார்க்கவில்லை.முன்பு சமூக ஊடகத்தில் கோ பேக் மோடி என்று டிரெண்டிங் ஆனது, நேற்று 'எங்கும் செல்லாதீர்கள்; தமிழகத்தில் தங்குங்கள் மோடி' என மாறியது என்றால் மோடி எப்படி தமிழ்நாட்டின் விருப்பமாகி விட்டார் பாருங்கள்!முன்பொருமுறை வேட்டி கட்டிய தமிழன், பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தும், 'அரசியலால்' அது கைநழுவியது. இப்போது ஒரு பிரதமர் வேட்டி கட்டி, தமிழை, தமிழ்நாட்டை கொண்டாடி தமிழனாகவே மாறியிருக்கிறார். இது நமக்கு பெருமை தானே!
- -ஜி.வி.ரமேஷ் குமார்
பத்திரிகையாளர்
rameshgv1265@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • G. Madhusoodhanan - Chennai,இந்தியா

  வேட்டி கட்டினாலும் தமிழன் உங்களை மன்னிக்கமாட்டான். உங்கள் கட்ச்சியின் தமிழ் விரொத முனைப்பை என்றும் மறக்க மாட்டார்கள் ப்ரதமரெ.

 • Nagarajan L. Royal - chennai,இந்தியா

  நல்ல ஜின்க் ஜாக் போடு

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  வேட்டி கட்டி வந்தாலும் , உங்க நாடகம் தமிழ்கத்தில எடுபடாது ....

  • Sridharan Venkatraman - Chennai,இந்தியா

   உனக்கு எப்பதான் புத்தி வரும் .....?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement