Advertisement

தலைகுனிந்து அமர்ந்திருந்த இணை ஆணையர்!

தலைகுனிந்து அமர்ந்திருந்த இணை ஆணையர்!
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், இணை ஆணையராக பொறுப்பேற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயச்சந்திர பானு ரெட்டி, பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது; அவரோ, யாரையும் பார்க்காமல், தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தார். மக்கள் தொடர்பு அதிகாரி கருப்பணன், நிருபர்கள் பெயர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்.இணைஆணையர், பட்டியலில் உள்ளவர்களின் பெயரை வாசித்தார். ஒவ்வொரு நிருபரும் எழுந்து, 'வணக்கம் சார்' என்றார். இணை ஆணையரும், பெயர் உள்ள இடத்தில், 'டிக்' அடித்தார். பின், 'நான், பள்ளியில் வருகை பதிவு எடுப்பது போல, வாசிப்பதாக, நீங்கள் நினைக்கலாம். பட்டியலில், 40 நிருபர் பெயர்கள் உள்ளன. ரெண்டு, மூணு மாசத்துல பழகிடுவேன்' என்றார், இணை ஆணையர்.மூத்த நிருபர் ஒருவர், 'அரை மணி நேரமாக, யாரையும் பார்க்காமல் தலையை குனிந்தபடி வருகை பதிவு எடுத்தபோதே நினைச்சேன்... நமக்கு லேசுல நியூசு கிடைக்காது பா...' எனக் கூற, மற்ற நிருபர்கள், தலையசைத்து ஆமோதித்தனர்.



'வேலுாருல தப்பியதே ஆச்சரியம்!'

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காணையில், தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும், பா.ம.க., அன்புமணி, இந்த தேர்தலில் 'ஸ்டாலின் முகத்தில் கரி பூசுங்கள்' எனக் கூறியுள்ளார். உங்களுக்கு, தர்மபுரி எம்.பி., தேர்தலில், ஏற்கனவே கரி பூசப்பட்டு விட்டது. இந்த தேர்தலில் கரி பூசிக் கொள்ளப் போகிறவர்கள் பா.ம.க.,தான்' என்றார்.தி.மு.க., பிரமுகர் ஒருவர், 'வேலுார் தேர்தல்ல இவர் மகன் மயிரிழையில் தப்பிச்சதே ஆச்சரியமான விஷயம்...இப்ப, 'கெத்து' காட்டுறதைப் பாருங்க...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தோர் சிரித்தனர்.


'முதலில் நீங்கள் திருந்துங்கள்!'


'டெங்கு' ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், கல்வி, வேளாண், வருவாய் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் ஒன்றினணந்து, 'டெங்கு காய்ச்சலை விரட்ட வேண்டும்' என்றனர்.அதன் பின், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், 'ஊராட்சிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணம், ஊராட்சி செயலர்கள் தான். அந்தந்த ஊராட்சியில், அவர்கள் இருக்காமல் வெளியே சென்றுவிடுகின்றனர். இதனால், சுகாதார பணிகளை எங்களால் தனியாக செய்ய முடியவில்லை. கிராம பொதுமக்களும், எங்களுக்கு ஓத்துழைப்பு தருவதில்லை. ஊராட்சி செயலர்கள் களத்தில் இருந்ததால், காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.அங்கிருந்த இரண்டு ஊராட்சி செயலர்கள், 'உங்க பணியை, நீங்க முதல்ல ஒழுங்காக செய்யுங்க... அப்புறம் மத்தவங்களை குறை கூறுங்கள்' என, 'கமென்ட்' அடித்தனர். அருகில் இருந்த, பிற துறை அலுவலர்கள் நெளிந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement