Advertisement

'என்னமா, 'சீன்' போடுறாரு பாரு!'

'என்னமா, 'சீன்' போடுறாரு பாரு!'
நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை ஆகிய யூனியன் பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். அமைச்சர் ஜெயகுமார் கோதைசேரியில் உள்ள வேட்டைகாரன் குளத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது, அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து, குளத்தை துார் வாரும் பணியில் ஈடுபட்டபடி, பெண்களிடம் ஓட்டு கேட்டார். இதை கவனித்த நிருபர் ஒருவர், 'தேர்தல் நேரத்தில், அமைச்சர் ஜெயகுமார், என்னமா, 'சீன்' போடுறாரு பாருங்க... அடுத்த தேர்தலுக்குள்ள, 'நாங்குநேரி எங்கே இருக்கு'ன்னு கேக்குற அளவுக்கு, இடத்தை மறந்திருவாரு...' என்றார்; அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

'சீமான் இருக்க வேண்டிய இடம் வேறு!'

பா.ஜ., சார்பில், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், இல.கணேசன், 'அன்னிய நாட்டு சக்தியால், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டார். அதற்காக, நீதிமன்றம் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்கி, தற்போது, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. 'நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ராஜிவை கொன்றது நாங்கள் தான்' என கூறுகிறார். அவர், இந்தியாவில் வாழ்வதற்கு தகுதியற்றவர். அவர் இருக்க வேண்டிய இடம், சிறைச்சாலை தான்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'இந்த கருத்தை, பா.ஜ., ஏத்துக்குதோ, இல்லையோ... காங்கிரஸ்காரங்களுக்கு, உங்க மேலே மரியாதை கூடும்...' என்றார்.

'நமக்கு தான் சிரிப்பு வருது!'
நாகர்கோவில், வடசேரியில் கைத்தறி விற்பனை நிலையத்தை துவக்கி வைத்த பின், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், 'லோக்சபா தேர்தலில், தி.மு.க., பொய் வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி பெற்றது. 'இனி, அவர்களது ஏமாற்று வேலை பலிக்காது. ஸ்டாலின் பேச்சை கேட்டால், சிரிப்பு தான் வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதலில் ஜெயிலை விட்டு வரட்டும், அவர் வந்த பின், அ.தி.மு.க.,வில் சேர்ப்பது பற்றி பேசிக் கொள்ளலாம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'சசிகலாவுக்கு ஒரு காலத்துல கொடி பிடிச்சவங்கல்லாம், இப்ப வாய்க்கு வந்த படி பேசுறதைப் பார்த்தா, நமக்கு தான் சிரிப்பு வருது...' என, நக்கலாகக் கூற, மற்ற நிருபர்கள் சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இதே சசிகலா டூப்ளிகேட் அம்மா வேஷம் போட்டு, பொதுச்செயலாளர் ஆன போது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததோ, கூவத்தூரில் முதல்வராகப் ‘பட்டாபிஷேகம்’ செய்ய கூவியதோ மறந்துவிட்டது போலும் 1

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement