Advertisement

இந்தியாவின், 'நேர்கொண்ட பார்வை'

Share

'பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்' எனும், ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடாது என பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலாக அறிவித்தது, இந்தியர்கள் அனைவர் மனத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இது என்ன ஒப்பந்தம்? இதில் ஏன் கையெழுத்திடக் கூடாது? இதன் பின்விளைவுகள் என்னென்ன?கொஞ்சம், பின்னோக்கிப் பார்ப்போம். கடந்த, 2012ல், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தான், இந்த ஆர்.சி.இ.பி., என்ற தடையற்ற வர்த்தக உறவுக்கான ஒப்பந்த முயற்சி தொடங்கியது.புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவற்றை, 'ஆசியான் நாடுகள்' என குறிப்பிடுவோம்.இவற்றோடு, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா ஆகியவை இணைந்து மொத்தம், 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்த முயற்சி, 2012இல் தொடங்கியது. இதுவரை, 28 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.


இதன் நோக்கம் தெளிவானது. பதினாறு நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக, இறக்குமதி வரிகளைக் குறைத்து, ஒவ்வொரு நாடும் சந்தையைத் திறந்துவிட வேண்டும். எல்லா நாடுகளும், இதில் ஒவ்வொரு விஷயத்தை முன்வைத்து வந்தன. கடந்த 27 கூட்டங்களில் எண்ணற்ற விஷயங்கள் அலசப்பட்டன. ஆனால், தொடர்ந்து இந்தியா முன்வைத்த கருத்துகளும், ஆதங்கங்களும், போதுமான அளவு காது கொடுத்துக் கேட்கப்படவில்லை.


இந்த ஒப்பந்தம், வெளிப்பார்வைக்கு எல்லோருக்கும் நன்மைஅளிப்பது போல் தெரியும். நம் நாட்டுப் பொருட்களை, இதர, 15 நாடுகளுக்கும் எடுத்துச் சென்று, எளிமையாக வியாபாரம் செய்யலாம்; அதன்மூலம், நம் பொருளாதாரம் மேம்படும் என்று தான் தோன்றும். ஏற்றுமதி அதிகமாகும், அன்னிய செலாவணியின் அளவு பெருகும் என்றும் நம்பப்பட்டது.ஆனால், உண்மை அதுவல்ல. மற்ற நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்வது போன்று, மற்ற நாடுகளும் நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும். அதுவும், பல்வேறு விகிதாசார அடிப்படையில், இறக்குமதி வரியைப் பெருமளவு நாம் குறைக்க வேண்டும்.

இதனால், நாம் ஏற்றுமதி செய்வதை விட, இறக்குமதி செய்வதே அதிகரிக்கும். அதைவிட, இறக்குமதியாகும் பொருட்களின் மிகமிக மலிவாக உள்நாட்டில் கிடைக்கும். இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியும், விற்பனையும் அடிவாங்கும். தொழிற் துறையும், சேவைத்துறையும் நடுத்தெருவுக்கு வரும். நுண், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நசிந்து, வேலைவாய்ப்புகள் பெருமளவு பறிபோகும்.அதனால் தான், ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும், குரல் கொடுத்து வந்தன.


சங் பரிவார் அமைப்பான, 'சுதேசி ஜாக்ரண் மஞ்ச்'சும், பாரதிய கிஸான் சங்கமும் கூட, ஆர்.சி.இ.பி.,யைக் கடுமையான எதிர்த்தன.கையெழுத்தாகி இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்?முதலில், நம் நாட்டில் வெள்ளமென வெளிநாட்டு சரக்குகள் வந்து குவிந்திருக்கும். குறிப்பாக சீனப் பொருட்கள். இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, கடுமையாக உயர்ந்திருக்கும். தற்போது, ஆர்.சி.இ.பி.யில் உள்ள, 15 நாடுகளில், 11 நாடுகளிடம் நமக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருக்கிறது. கடந்த, 2013- - 14ல், ௩.௫௧ லட்சம் கோடி ரூபாயாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2018- - 19ல், அப்படியே இரண்டு மடங்காகி உள்ளது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தத் தொகை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும்.


ஏனெனில், இந்த ஆர்.சி.இ.பி., நாடுகளுக்கு தற்சமயம், நாம் 20 சதவீத அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய, 35 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்து வருகிறோம். ஆர்.சி.இ.பி., நாடுகளிடம் இருக்கும் இந்தியாவின், 105 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையில், சீனாவோடு மட்டும் இருப்பது, ௩.௪௦ லட்சம் கோடி ரூபாய். அதாவது, மெல்ல மெல்ல நம்மை கடன்காரனாக்கி, காலில் போட்டு நசுக்கி வருகிறது சீனா. கடனைக் கட்டுவதற்காக நாம் நமது அன்னிய செலாவணியை மேன்மேலும் அழித்தபடியே வரவேண்டிய நிலை ஏற்படும். அன்னிய செலாவணி கையிருப்பு குறையுமானால், நமது இறையாண்மையே பாதிப்படையும் அபாயம் உண்டு.

அடுத்து பாதிப்படைந்து இருக்கக்கூடியது வேளாண்மை. குறிப்பாக, பால் பொருட்களும், நறுமணப் பொருட்களும். மிளகு, ஏலக்காய், ரப்பர், தேங்காய் ஆகியவற்றில் கடும் போட்டி ஏற்பட்டு இருக்கும். தெற்காசிய நாடுகள், நம் நாட்டில் வந்து கொட்டியிருப்பர். ஏற்கெனவே சர்வதேச சந்தையில், நறுமணப் பொருட்கள் வணிகத்தில் இலங்கை, இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக உருவெடுத்து வருகிறது.வியட்நாமும், இந்தோனேசியாவும் மிகக் குறைந்த விலையில் ரப்பரை ஏற்றுமதி செய்கின்றன. பால் பொருட்கள் விற்பனையில், இந்தியாவில் கால் பதிக்க, ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் காத்துக் கிடக்கின்றன.இந்தியாவின் தயக்கத்துக்கு, இன்னொரு காரணமும் உண்டு.


ஆர்.சி.இ.பி., ஒப்பந்தத்துக்குப் பின்னால் இருந்து இயக்குவது, சர்வல்லமை பொருந்திய சீனா. அதுவும், அமெரிக்காவோடு வர்த்தகப் போர் ஆரம்பித்த பின், சீனா, இந்த ஒப்பந்தத்தை எப்படியேனும் நிறைவேற்றிவிட வேண்டும் என துடிக்கிறது.ஆர்.சி.இ.பி., ஒப்பந்தம் என்பது, சீனாவுக்கு பின்வாசல் நுழைவு. அதாவது, 15 நாடுகளுக்கும் அது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்து, அங்கிருந்து, இந்தியச் சந்தைக்குள் வந்து கொட்டிவிட முடியும். எல்லாமே சீனப் பொருட்கள் தான்; ஆனால், அவை, இந்தோனேசியாவில் இருந்தோ, வியட்நாமில் இருந்தோ, மியன்மாரில் இருந்தோ இறக்குமதியானதாகக் காட்டப்படும். இதெல்லாம் புரிந்துதான், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தயக்கம் காட்டி வந்தது.


சமீபத்தில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் மாமல்லபுரம் வந்தது கூட, இந்திய அரசை இந்த விஷயத்தில் இணங்க வைப்பதற்காகத்தான் என்றொரு எண்ணமும் முன்வைக்கப்பட்டது. ஆனால், நாம் இணங்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் நாம் சில திருத்தங்களையும், பாதுகாப்புகளையும் வலியுறுத்தினோம். உதாரணமாக, ஏதேனும் ஒரு பொருள் திடீரென்று, ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து அதிக அளவில் இந்தியாவுக்கு இறக்குமதியாகுமானால், அங்கே தன்னிச்சையாக தடுப்பதற்கான ஒரு வழிமுறை வேண்டும் என, இந்தியா கேட்டது.நாம் இறக்குமதிக்கு முழுமையாக அனுமதித்து விடுவோம்; நம் பொருட்களை சீனா இதுபோல் இறக்குமதி செய்துகொள்ள வாய்ப்பு வழங்குமா? நிச்சயம் வழங்காது. குறிப்பாக, மருந்து, அரிசி போன்றவற்றை அங்கே இறக்குமதி செய்யும்போது, வரி விதிக்காது என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. வரி விதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை நாம் கேட்டோம்; சீனா உறுதி தரவில்லை.இதுதான் உண்மையான பிரச்னை.

இந்த, ஆர்.சி.இ.பி., ஒப்பந்தமே ஒரு சார்பாக இருக்கிறது. அதுவும் அது சீனா பக்கமே சாய்கிறது. நாம் நமது உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் பாதுகாத்தாக வேண்டும்.இன்று உலகமே, 'பாதுகாப்புவாதத்தை' நோக்கி நகர்கிறது. அமெரிக்கா உட்பட, தங்களுடைய சந்தையைப் பயன்படுத்த வேண்டுமானால், அது தங்களுடைய நாட்டின் உற்பத்திக்கோ, வேலைவாய்ப்புக்கோ குந்தகம் ஏற்படுத்திவிடக் கூடாது என்றே நிபந்தனை விதிக்கிறது. ஆர்.சி.இ.பி.யில் இந்தியா கையெழுத்திடாதது, நம், 'பாதுகாப்புக்கே!' 'நம் நாட்டில் இறக்குமதி செய்வதற்கோ, வர்த்தகம் செய்வதற்கோ, நாம் சொல்லும் நிபந்தனைப்படி தான் விளையாட வேண்டுமே தவிர, உங்களுடைய நிபந்தனைகளுக்கு ஏற்றபடி நாங்கள் விளையாட முடியாது' என்பதை, இந்தியா தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. சர்வதேச வர்த்தகத்துக்காக, உள்நாட்டு தொழில்களையும், சேவைகளையும் பணியாளர்களின் நலனையும் விட்டுக்கொடுக்க முடியாது என்பது தான் இந்தியா, ஆசியாவின் மற்ற நாடுகளுக்குத் தெரிவித்துள்ள செய்தி.இந்தியா, 'நோ' சொன்னால், 'நோ' தான்!

ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
98410 53881

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement