dinamalar telegram
Advertisement

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!'

Share

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ், 1,216 பயனாளிகளுக்கு, 5.42 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நாகையில் நடந்தது.கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிய, அமைச்சர் மணியன், 'சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடு கட்டிக் கொடுத்தோம். பட்டா, கலெக்டர் பெயரில் இருந்தது. 2016ல், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நாகையில் நடந்த முதல் ஆய்வுக் கூட்டத்தில், கலெக்டரிடம், 'சுனாமி வீடுகள் அனைத்தும் உங்கள் பெயரில் உள்ளது. பயனாளிகளுக்கு பட்டா வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. வரும் மாதம் முதல், அனைத்து சுனாமி வீட்டிற்கும், கலெக்டர் தான் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்' என, கூறினேன். உடனே, சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டது' என்றார்.கூட்டத்தில் இருந்த பயனாளி ஒருவர், 'பல சுனாமி வீடுகளுக்கும் இன்னும் பட்டாவே கிடைக்கலே... எல்லாத்துக்கும் குடுத்துட்டதா அமைச்சர் சொல்றாரே... இப்படி பொய் பேசலாமா...' எனக் கூற, உடனிருந்தவர், 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா...' என்றார்; அவர் முகத்தில் பட்டா கிடைக்காத வேதனை தென்பட்டது.

ககன்தீப் பேடியை திணற வைத்த, 'மாஜி' ராஜு!தமிழக வருவாய்த் துறை சார்பில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் கலெக்டர் வினய் தலைமையில், மதுரையில் நடந்தது. அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார். அமைச்சர் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அதிகாரிகள் பங்கேற்றனர்.வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி, 'நான், மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி கமிஷனராக இருந்தேன். அப்போது, கவுன்சிலராக இருந்த ராஜு, ஒவ்வொரு கூட்டத்திலும் கேள்விகள் கேட்டு, எங்களை திணற வைப்பார். அப்போதே, 'நீங்க சீக்கிரமாக அமைச்சர் ஆகிடுவீங்க' என, நான் கூறினேன். இப்போது, அது நிஜமாகி, கூட்டுறவு துறை அமைச்சராகி விட்டார்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அப்பவே, 'தெர்மாகோல்' திட்டத்தை பற்றி, ககன்தீப் பேடியிடம் கேட்டிருப்பாரோ' என, 'கமென்ட்' அடிக்க, மற்றொரு நிருபர், 'நீ வேற... இந்த ஐடியாலாம், நேரம் வரும்போது தான், 'சட்'டென உதிக்கும்...' எனக் கூறிக் கிண்டலடித்தார்.

'அ.தி.மு.க.,விற்கு ஸ்ரீ பெரும்புதுாராவது தங்குமா...'உள்ளாட்சி தேர்தலுக்காக, அ.தி.மு.க., கட்சியினர் ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார். முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மாவட்டச் செயலர் கணேசன், 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதுார் மட்டும் நமக்கு இருக்கிறது.'மற்ற அனைத்து சட்டசபை தொகுதிகளும், தி.மு.க.,காரர்களிடம் உள்ளது. அரசு திட்டப் பணிகள் உட்பட அனைத்திலும், பாதி பங்கு அவர்களுக்கே சென்று விடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் முனைப்புடன் செயல்பட்டு, நாம் அதிகளவில் வெற்றி பெற வேண்டும்' என்றார்.

மூத்த கட்சி நிர்வாகி ஒருவர், 'உள்ளாட்சி தேர்தலுக்கு பின், நம்மிடம் ஸ்ரீ பெரும்புதுாராவது இருக்குமா...' எனக் கேட்க, 'தேர்தல் வேலை பார்க்க, என்ன செய்யணுமோ அதைச் செஞ்சீங்கன்னா, நாங்க வேலை பார்க்க சவுகரியமா இருக்கும்...' என தொண்டர் ஒருவர் கூறினார். நிர்வாகி, அவர் சொன்னது காதில் விழாதது போல் நழுவினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்அமைச்சர் ராஜுவும் அவர்மனைவியையும் நேர்காணல் செய்தார்கள் அனைவராலும் கேலிபேசப்படும் ராஜூவுக்குள் ஒரு நல்ல தந்தை .கணவர் இருப்பதாய் பார்க்கமுடிந்ததுஅவரது மகன் விபத்தில் இறந்துபோனபோது கிட்டத்தட்ட அவரது மனைவி பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்ததையும் அவர் சிரமப்பட்டு தன மனைவியை குணப்படுத்தியதையும் தெரிவிக்கும்போது நல்ல கணவராக தெரிந்தார்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அரசியலுக்கு வரும்போதே பொய்மூட்டையைச் சுமந்து வர வேண்டும் என்பது தானே முழுமுதல் தகுதி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement