dinamalar telegram
Advertisement

டீகடை பெஞ்ச்

Share

துரைமுருகன் கிண்டல்; கூட்டணி கட்சியினர், 'அப்செட்'

நண்பர்கள் வந்து கொண்டிருப்பதை கண்டதும், நாயர், டீ போடத் துவங்கினார். பெஞ்சில் அமர்ந்த அந்தோணிசாமி, ''குழுவை, சீக்கிரம் அமைக்க சொல்லிருக்காருங்க...'' என, முதல் தகவலுக்கு வந்தார்.
''என்ன ஏதுன்னு, விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழகம், -கேரளா இடையே, நீர் பங்கீடு பிரச்னை நிறைய இருக்குதுங்க... அதை தீர்க்க, கேரளாவுக்கு போய், அந்த மாநில முதல்வர் பினராயிகிட்ட, நம்ம முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினாருங்க...
''அதுல, ரெண்டு தரப்புலையும், குழு அமைக்க முடிவு செஞ்சாங்க... தமிழக அரசு தரப்பில், உடனே குழு அமைச்சிட்டாங்க... ஆனா, கேரள அரசு, கிணத்துல போட்ட கல்லு மாதிரி, குழுவை அமைக்காம இருக்குங்க...
''உள்ளாட்சி தேர்தல் நடக்கப் போறதால, அதுக்கு முன்னால, குழு அமைச்சு, பேச்சு நடத்தினா, சில மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும்னு கணக்கு போடுறாங்க...
''அதனால, நம்ம முதல்வர் தரப்புல இருந்து, குழுவை சீக்கிரம் அமைக்க சொல்லி, கேரள அரசிடம் கோரிக்கை வச்சிருக்காங்க...'' எனக் கூறி முடித்தார்,
அந்தோணிசாமி.
நாயர் தந்த டீயை உறிஞ்சியபடியே, ''ஜெ., சிலைய, சத்தமில்லாம வைக்க பார்க்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''என்ன வெவகாரம் வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மதுரையில, மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் வளைவு பக்கத்துல, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை இருக்கு... அதை, அ.தி.மு.க.,வினர் பராமரிச்சுண்டு வர்றா... சிலை இருக்கற ரவுண்டானாவை சுத்தி, இரும்பு தகடு பொருத்துற வேலை நடக்கறதுன்னு சொல்லிருக்கா ஓய்...
''ஆனால், சத்தமில்லாம, எம்.ஜி.ஆர்., சிலை பக்கத்துலயே, ஜெ., சிலைய வைக்க, அ.தி.மு.க.,வினர் திட்டம் போட்டுருக்கா... அதுக்கான வேலை, பேஷா நடந்துண்டு வர்றது... எதிர்க்கட்சியினருக்கு தெரிஞ்சாலும், அடக்கியே வாசிக்கறாளாம் ஓய்...
''அனேகமா, ஜெ., இறந்த நாளான, டிச., 5ம் தேதி, சிலைய திறப்பான்னு பேசிக்கறா ஓய்...''
''கூட்டணிக் கட்சிக்காரங்க அதிருப்தியில இருக்காங்களாம் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''எந்த அணியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சமீபத்துல நடந்த, தி.மு.க., பொதுக்குழுவுல, பொருளாளரு துரைமுருகன் பேசுறப்போ, 'நம்ம கட்சிக் தலைவர் ஸ்டாலினை எதிர்த்தவங்க எல்லாம், இன்னைக்கு, நம்ம தயவால, எம்.பி.,யாகி இருக்காங்க... அதுக்கு, ஸ்டாலினின் சாமர்த்தியம் தான் காரணம்'னு பேசினாராம் பா...
''கடந்த சட்டசபை தேர்தல்ல, மக்கள் நலக் கூட்டணின்னு, தனியா ஒரு அணி அமைச்சு போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், கம்யூ., கட்சிக்காரங்களை தான், துரைமுருகன் கிண்டல் அடிச்சாரு பா...
''இப்படி அசிங்கப்படுத்திட்டாரேன்னு, அந்த கட்சிக்காரங்க எல்லாம் வருத்தப்படுறாங்களாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''எதிர்த்து பேசினா, இல்லை, ஏன்னு விளக்கம் கேட்டாலே, கூட்டணியில இருந்து கழற்றி விட்டுடுவாங்க... அதனால், 'கம்'முன்னு இருக்கணும்...'' என, அந்தோணிசாமி, 'கமென்ட்' அடிக்க, நண்பர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ராஜ்ய சபா சீட் கிடைத்திருக்கையில், துரை முருகன் என்ன, உதயநிதியின் மகன் கமெண்ட் அடித்தால் கூடத் துடைத்துப் போட்டுவிட்டு, ‘யாரோ, யாரையோ என்னவோ சொல்கிறார்கள் நமக்கில்லை’ என்று காதை முழுச் செவிடாக்கிக் கொண்டு விடுவாரே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement