ஓட்டு வங்கி என்பதே இன்று முக்கியம்...
தமிழகத்தில் பொங்கல் திருவிழா போல, நாடு முழுவதும் மகர சங்கராந்தி விழா இந்த வாரம் களை கட்டும் விழா என்பதால், அனேகமாக அதிகமாக பேசப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்கள் குறையும். ஏனெனில், காங்கிரஸ் தலைவர் சோனியா அழைத்த எதிர்க்கட்சி கூட்டத்தில், தி.மு.க., திரிணமுல் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பங்கேற்காதது
சரியானது அல்ல. ஏனெனில், இக்கட்சிகளின் எம்.பி.,க்கள் கணிசமாக, 100 பேருக்கும் அதிகமாக பார்லிமென்டின் இரு சபைகளிலும் உள்ளனர்.உ.பி.,யில் உள்ள மாயாவதி இதில் பங்கேற்காததற்கு காரணம், தன் கட்சித் தலைவர்கள் ஊழல் புகாரில் மாட்டிக் கொள்வதும், உ.பி.,யில் பிரியங்கா வாத்ரா மவுசு கூடியுள்ளதும் ஆகும்.
இந்த இரு விஷயங்களும், மாயாவதிக்குப் பெரிய இடைஞ்சலாகத் தென்படுகின்றன. வெளிநாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்கள் புகலிடம் தேடி வரும் பட்சத்தில், அவர்களுக்கு புகலிடம் தர வேண்டிய சூழல் இருப்பதை, பிரதமர் மோடியை விட, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல இடங்களில் விளக்கி விட்டார். அது மட்டும் அல்ல; நாடு முழுவதும் அக்கட்சி, அதற்காக ஆதரவு பிரசாரம் நடத்தி, எதிர் கருத்துகளுக்கு பதில் அளிப்பது ஜனநாயக முறை.
குடியுரிமை விஷயத்தில் சில கருத்துகளை இளைஞர்கள் அறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜாமியா பல்கலை, மைசூரு பல்கலை, ஏன் சென்னையிலும் கல்லுாரி மாணவர்கள் நடத்திய போராட்டம், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பதை வலுவாகக் காட்டுகிறது. ஆனால், குடியுரிமை திருத்த சட்டம், இன்னமும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அங்கமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இளைஞர்கள் ஓரளவு, இந்திய நாட்டில் அதிக எதிர்ப்பு காட்டியது, இந்திரா அவசரநிலை அறிவித்த போது தான். ஆனால், அதை அன்று, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முன்னெடுத்தது.
இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் உட்பட, பல பல்கலைகளில் நடைபெற்ற எதிர்ப்புகள், இடதுசாரி அடிப்படைகளை கொண்டவர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் தவறேதும் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக, 'மீடியா'வில் வலம் வரும் கருத்துகள், பெரும்பாலும் படித்த, இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்களுடையதே. பிரதமர் இந்திரா, காங்கிரசை நிலைநிறுத்த இச்சக்திகளுக்கு ஆதரவு அளித்ததும், பொதுத்துறை நிறுவனங்களில் இச்சக்தி அதிக தொழிலாளர் ஆதரவுடன் செயல் பட்டதும், அவர்களால் பல கருத்துகளை மக்கள் முன்வைக்க எளிதாக முடிந்தது.
இன்று மாணவர்கள் சக்தியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அங்கமான வித்யார்த்தி பரிஷத், இவர்களை எல்லாவிதத்திலும் எதிர்கொள்ள துவங்கி விட்டது. ஆகவே, இதன் அடுத்த கட்டமாக, பல பல்கலைகளில் துணைவேந்தர் பதவிக்கு வர, பெரும் கல்வியாளர் அச்சப்பட நேரிடும். ஏனெனில், பெரிய கல்லுாரி நிறுவனங்கள் அரசு சார்பு என்றால், அதிக கட்டணம் கூடாது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி அரசியலில் ஈடுபடலாம். துணை வேந்தர் அல்லது பேராசிரியர்களை கல்லுாரி வளாகத்தினுள், சரமாரியாக வசை பாடலாம் என்ற நிதர்சனம் வந்திருக்கிறது.முதலில் மாணவர் மோதலில், அதிக விளம்பரம் பெற்ற ஆயிஷே போஷ் என்ற மாணவி, கேரள முதல்வர் பினராயை சந்திக்கிறார் என்கிற போது, வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர், அந்த மாதிரி இன்னமும் அமித் ஷாவை சந்திக்காதது ஏன் என்று தெரியவில்லை.
உடனே, இதை மத்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம் சீர்செய்வது என்பதோ அல்லது மாணவர்கள் ஓட்டுரிமை பெற்றவர்கள் என்பதால், அவர்களை போலீஸ் மூலம் கையாள்வது என்பதோ எந்த அரசுக்கும் எளிதல்ல.
வழக்கறிஞர்கள் போலீசுடன் மோதல், மாணவர்கள் போலீசுடன் மோதல், ரவுடிகள் போலீசாரை கொன்றுவிடும் செயல்கள், சில அரசியல்வாதிகள் தாங்கள் பதவியால், போலீசாரை மதிக்காத போக்கு ஆகியவை, கடந்த இரு ஆண்டுகளில் அதிகமாக நடந்திருக்கின்றன. இந்தியப் பொருளாதாரம்
வீழ்ந்தது என்று குறை கூறும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், ஏன் குடியுரிமை சட்டம் தேவையில்லை என்கிறார்? தன் தாய் சோனியா எப்படி குடியுரிமை பெற்றார், அதில் ஏன் அவசரம் என்றோ, அவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவரா என்பதை விளக்கினால் தவறில்லை. ஆப்கன், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் சில ஆயிரம் பேருக்கு அங்கீகாரம் தந்த அரசின் செயல், நம்மை, 'ஓட்டு வங்கி'யாக மாற்ற முயற்சிக்கும் மக்கள் கூட்டமாகி, எதிர்கால அபாயமாகும் என்ற கருத்தை, மக்கள் ஏன் உணர மாட்டார்கள்? எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி, இந்த சட்டத்தை எதிர்க்க முன்வரும் போது, தி.மு.க., தலைமை பின்வாங்கியது, அதன் ஓட்டு வங்கி உணர்வின் அடிப்படை தான். ஜாதி வட்டம், பிற்பட்டோர் நலன் ஆகியவற்றைத் தாண்டி, இளைஞர்கள் ஏதோ ஒரு பொது விஷயத்தை ஆதரிக்கின்றனர் என்று, தி.மு.க., கருதியதாக அர்த்தம் கொள்ளலாம்.
சிவசேனா, அதன் அடிப்படை கொள்கைகளை ஆட்சிக்காக கைவிட்டது என்றாலும், இவ்விஷயத்தில், காங்கிரஸ் அணியில் சேராமல் ஒதுங்கி இருந்தது, அதன் மராட்டிய உணர்வு எல்லாவற்றிற்கும் மேலானது என்பதை வலியுறுத்துவது போலாகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!