பா.ஜ., தலைவர் நட்டா... சவால் தான் அவருக்கு!
இந்திய நாட்டை ஆளும், பா.ஜ.,வின் தலைவராக, ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வானது, அக்கட்சி யின் வெற்றிப் பாதையை, எதிர்காலத்தில் எப்படி கொண்டு செல்லும் என்பதற்கான இலக்கு எனலாம்.இன்றுள்ள சூழ்நிலையில், அபார வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி நடத்தும் இக்கட்சி, 70 ஆண்டுகளில், பல்வேறு பரிணாமங்களை பெற்றிருக்கிறது. முதலாவதாக, காங்கிரஸ் என்ற மிகப் பெரிய கட்சியைத் தாண்டி, எந்தக் கட்சியும் கால்பதிக்க முடியாத நாடு என்ற கருத்து இருந்தது. அக்கட்சியின் சித்தாந்தங்களில் இருந்து, பா.ஜ., முற்றிலும் வேறுபட்டது.'சுதந்திர போராட்டத்தின் போது, இக்கட்சி எங்கே இருந்தது? காந்தியடிகளைக் கொன்ற கோட்சே கருத்துகளை கொண்ட கட்சி' என்ற வசைகள், கடந்த ஐந்தாண்டுகளில் மங்கியது உண்மை. காங்கிரஸ் இன்று பரிதாபமாக மாநிலக் கட்சி போல மாறியதே இதற்கு காரணம்.அப்படிப் பார்த்தால், தேசியம், அரசியல் சாசன அடிப்படைகள் ஆகியவற்றில், பெரிய மாற்றுக் கருத்துகள் கொண்டிராத இக்கட்சி, 'ஊழலற்ற, வித்தியாசமான கட்சி' என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மூத்த தலைவர் அத்வானியால் வளர்க்கப்பட்டது.மதம், ஜாதி, இனம் ஆகியவை, இக்கட்சி கோட்பாடுகளில் கிடையாது என்பதுடன், 'தேசிய பார்வை' கொண்டது இக்கட்சி. இது தேவை தானா என்றால், இனி கூட்டணி ஆட்சி என்பது, மத்திய அரசில் அரங்கேறுவது, சுலபம் அல்ல. இடதுசாரிகள் கருத்தோட்டம் தேய்ந்ததும், குடும்ப வாரிசு அரசியல், பணம் பண்ணும் அரசியல்வாதிகள் அதிகரித்த சூழ்நிலையில், பிரதமர் மோடி வென்றதும், அதற்குப் பின் அவர் அடுத்த முறை வென்றதும், இந்தியாவின் புதிய அரசியல் சித்தாந்த கருத்து வேரூன்றியதன் அடையாளம்.அதே சமயம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவர் தலைமை, இன்றைய ஆட்சியின் மையப் புள்ளிகளாக நின்ற போதும், அவர்கள் சார்ந்த, பா.ஜ.,வின் தலைமைப் பதவியை, நீண்ட காலம் வைத்திருந்த அமித் ஷா இப்போது, 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கருத்தோட்டத்தை அமல்படுத்தியதன் அடையாளம், ஜே.பி.நட்டா தேர்வு.வாஜ்பாய் முதல், பல தலைவர்களுடன் பழகிய நட்டாவின் பின்புலம், ஆர்.எஸ்.எஸ்., என்பது, அதிக முக்கியத்துவம் பெற்ற தகவல். மிகப்பெரும் அரசியல் தலைமைப் பொறுப்பு மற்றும் சில முக்கிய பதவிகளில், ஆர்.எஸ்.எஸ்., பின்புலம் உள்ளவர், இந்த அரசில் இருப்பதை, குறையாகக் கருத முடியாது.ஏனெனில், பா.ஜ.,வின் தொண்டர் பலம் என்பதில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பரிவார் அமைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் என்ற மாணவர் இயக்கத்தில் இருந்தவர் நட்டா. முன்னாள் அமைச்சர் ஜெட்லி கூட, அதில் அங்கம் வகித்தவர். அதே சமயம், இடதுசாரி சக்திகளை மாணவர் அமைப்பு தேர்தல்களில் வென்ற நட்டா, முந்தைய காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளை நன்கறிந்தவரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளுடன் நல்ல புரிதலைக் கொண்டவருமான இவர், பீஹார்மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டவர். ஏற்கனவே, உ.பி.,யில் தேர்தல் நிர்வாகத்தை சமாளித்து, பா.ஜ., தொண்டர்களை ஊக்குவித்து, மொத்தமுள்ள, 80 இடங்களில், 62ஐ வெற்றி பெற வழிவகுத்தவர். தேர்தல் உத்திகள் வகுத்தது, தொண்டர்களை அரவணைத்துக் கருத்து கேட்கும் சுபாவம் ஆகியவை, பா.ஜ.,வின் தொடர் வெற்றிக்கு வழி வகுத்தன. தற்போது, டில்லி சட்டசபை தேர்தல்,இவருடைய திறனுக்கு, உரைகல்லாக அமையும்.தென் மாநிலங்களில், ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில், 60 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றும் புதிய உத்திகளை காட்டும் தலைமை என்ற பெருமையைச் சேர்ப்பாரா என்பதற்கு, காலம் பதில் சொல்லும்.ஏனெனில், உ.பி.,யில் அல்லது மத்திய பிரதேசத்தில் அல்லது வடமாநிலங்களில் உள்ள இன்றைய சூழ்நிலை, அடுத்த இரு ஆண்டுகளில் தொடரும் பட்சத்தில், மீண்டும் மத்தியில் கூட்டணி தேவையற்ற, பா.ஜ., ஆட்சி வரலாம். அதற்குள் காங்கிரஸ், வாரிசு அரசியல் பாதையில் இருந்து மாறி, என்ன வழிகாட்டும் என்பது புதிரே!தேசிய குடியுரிமை சட்டம் அல்லது தேசிய மக்கள்தொகை பதிவு போன்ற விஷயங்களில், பா.ஜ., தான் மேற்கொண்ட திட்டங்களை, மக்கள் முன் வைத்துத் தெளிவுபடுத்த, நட்டா தலைமை நிச்சயம் உதவும். அதைக் களம் காணும் காங்கிரஸ் தலைவர்கள், 'தங்கள் மீதான குற்ற வழக்குகளில் ஜாமின் பெற்றவர்கள்' என்றால், அவர்கள் கருத்துகளை, மக்கள் அப்படியே ஏற்பது சிரமம். அதற்கு முன், காங்கிரஸ் கட்சி, 'மிகப்பெரும் கூட்டணியை' முன்னிறுத்தி, பா.ஜ.,வை எதிர்கொள்ள முன்வருமா என்பதற்கான அறிகுறிகள் காணோம்.இச்சூழ்நிலையில் நேரு கால காங்கிரஸ் போல, இன்றைய தேர்தல் அணுகுமுறைகளை, பா.ஜ., எளிதாக கையாண்டு, மற்ற கட்சிகள் பலவீனங்களை சாதகமாக்கும் தலைமையாக அடுத்த மூன்றாண்டுகளுக்கு நட்டா தலைமை உதவுமா என்பதே அடுத்த கேள்வியாகும்.தலையங்கம் வியா.ஜன.23.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!