Advertisement

'இதுலயும் காங்கிரசில் குழப்பமா...!'

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், கோவையில் பொதுக்கூட்டம் நடந்தது.முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்த போது, மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில், குடியுரிமை சட்டம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் காங்., தலைவர்கள் ஏற்கனவே பேசிய கருத்துக்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ஓடியபடி இருந்தன.சிதம்பரம் பேச்சை கேட்பதா, ஸ்கிரீனில் ராகுல் பேச்சை பார்ப்பதா என, தெரியாமல் தொண்டர்கள் குழம்பினர். மேடையிலிருந்த, காங்., மாநில செயல் தலைவர் ஜெயகுமார், அருகிலிருந்த, மாநில தலைவர் அழகிரியிடம், பின்னால் ஸ்கிரீனில் ஓடுவதை கை காட்டி, பார்க்கும்படி கூறினார். அழகிரி அதை கவனிக்காமல், சிதம்பரம் பேசியதை, உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார்.
காங்கிரஸ் தொண்டர் ஒருவர், 'இந்த விஷயத்துல கூட, நம்மாளுங்களால தௌிவா முடிவெடுக்க முடியலை பாரு...' என, திட்டித் தீர்க்க, மற்றவர்கள்ஏளனமாக சிரித்தனர்.

'ஒட்டுமொத்த தமிழகமும் பாராட்டப்பட்டு இருக்குமே!'சென்னை, கீழ்ப்பாக்கம், பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதித்தார்.பின், நிருபர்களிடம், 'பொங்கல் பரிசு கொடுத்தோம். ஏதேனும், சிறு பிரச்னை ஏற்பட்டதா! இது முதல்வர், இ.பி.எஸ்., அரசின் சாதனை. எந்த விமர்சனமும் இல்லாமல், 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பை, 1.98 கோடி கார்டு தாரர்களுக்கு வழங்கினோம். இதேபோல், 2019ல் வழங்கினோம்' என்றார்.
இதை கேட்ட அதிகாரி ஒருவர், 'இந்த இரண்டு ஆண்டுகளில், இதற்காக, 4,000 கோடி ரூபாய் வரை செலவழிச்சிருக்கீங்க... இந்தப் பணத்தில், அரசு பள்ளிகளை, சர்வதேச தரத்திற்கு உயர்த்தி இருக்கலாமே... தமிழகமே பாராட்டப்பட்டு இருக்குமே...' எனச் சொல்ல, அமைச்சர் காதில் விழவில்லை; ஆனால், மற்ற அதிகாரிகள், 'ஆமாம்' என்பது போல், தலையசைத்தனர்.

முதல்வர் பதவி கிடைக்குமா உதயகுமாருக்கு?மதுரை, பசுமலையில், மாதா அமிர்தானந்தமயி மடம் பிரம்மஸ்தான ஆலயத்தின், 25ம் ஆண்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற, மாதா அமிர்தானந்தமயியை வரவேற்று, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், 'மதுரைக்கு ஆண்டுதோறும், அம்மா வருகை புரிவது, மக்கள் செய்த பாக்கியம். கடந்த முறை, நான் அம்மாவை பார்த்தபோது, வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, இரண்டு துறைக்கு அமைச்சராக இருந்தேன். தற்போது, அம்மாவிடம் ஆசி பெற வந்துள்ளேன். எனக்கு, கூடுதல் பொறுப்பாக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் கிடைத்துள்ளது. தற்போது, மூன்று துறைக்கு அமைச்சராக உள்ளேன்; நெகிழ்ச்சி ஆக உள்ளது' என்றார்.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'அப்போ... அடுத்த ஆண்டு அம்மா, மதுரை வரும்போது, முதல்வர் பதவி கூட கிடைக்க, உதயகுமாருக்கு வாய்ப்பு உண்டு' என, 'கமென்ட்' அடிக்க, 'உதயகுமார் வாழ்க...' என, 'அட்வான்சாக' தொண்டர்கள் கோஷமிட்டனர்; மற்ற பக்தர்கள், முகம் சுளித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    யார் காசை எடுத்து யாருக்கு பரிசாக ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தார்? முன்னேற்றத்துக்காக செய்த வரிவசூலை ஓட்டுக்காக ஆழும் பாழும் ஆக்கிவிட்டு பெருமை, பாராட்டு வேறா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement