மத்திய பட்ஜெட் காட்டும் திசை என்ன!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின், இரண்டாவது மத்திய பட்ஜெட், சில விஷயங்களை முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் ஏற்படுத்திய சந்தேகம் ஏராளம் என்றாலும், கடந்த ஆறு மாதங்களில் இந்திய பொருளாதார சுணக்கம் என்பது வெளிப்படையாக தெரிந்தது. இந்த முறை அவரது அணுகுமுறை, எந்த கோணத்தில் இருக்கப் போகிறது என்பதை பலரும் எதிர்பார்த்தனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில், பொருளாதார வளர்ச்சி, 'ஸ்லோ டவுண்' என்ற வார்த்தைப்படி மந்த கதியில் பயணித்தது. இதற்கு அமெரிக்கா காரணமா அல்லது சீனா காரணமா என்பதை விட, பெரிய இரு நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்பில் இருக்கிறது. எவரும் சீனாவின் பொருளாதாரம் சற்று வளர்ச்சி குறைவாகும் என்று அதிக அளவில் கண்காணிக்க முன்வரவில்லை. காரணம், அதன் ஏற்றுமதி வேகத்துடன் நாம் போட்டியிடுவது மட்டும் அல்ல, மற்ற நாடுகளும் போட்டியிடுவது, இன்றைய நிலையில் இயலாதது.
ஆனால், இந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகளுக்கு பின், ஆளத் துவங்கிய, பா.ஜ.,வின் மோடியின் தலைமையிலான ஆட்சியில், முதலாவதாக மத்திய பட்ஜெட்டைக் கையாண்டதில், சில புதிய அணுகு முறைகளை பின்பற்றினார். திட்ட அணுகுமுறைகளில், இதற்கு இன்ன செலவு என்பதை கிட்டத்தட்ட வரையறுப்பதன் மூலம், செலவினம் சரியாக திசை திருப்பப்பட்டது.
அத்துடன், அவர் இருந்த காலத்திலேயே, 'டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை' என்பது அதிகரிக்க, மத்திய அமைச்சரவை எடுத்த முடிவுகள், அரசு கையாளும் பணம் எத்திசையிலும் மறைக்க முடியாத நிலைக்கு வந்தது.
ஆகவே, காலம் காலமாக உள்ள பட்ஜெட் அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும், 'பொருளாதார சர்வே' ஆகியவற்றைப் புரட்டினால், பல ஆண்டுகளாக நீடிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் முடிவடைய எடுக்கும் காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் என்பது வழக்கமான விஷயம்.
அத்துடன், ரயில்வே பட்ஜெட்டை, மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்தது பெரிய மாற்றம் என்றும் கூறலாம். அதனால், இன்று நிர்மலா, தான் சோர்வடையும் வரை, இரண்டு மணி நேரத்திற்கு மேல், அதிக நேரம் பட்ஜெட்டை வாசித்த பெண் என்ற பெருமையைப் பெறுவது ஒருபுறம் இருக்க, பல விஷயங்களில், சில அடிப்படைகளை முன்னிறுத்தியதையும் காண முடிகிறது.
கடந்த முறை பட்ஜெட்டுக்கு வந்த விமர்சனங்களை எதிர்கொள்ள, தொழில் துறை உட்பட பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்த அவர், இந்த பட்ஜெட்டில் அதில் பல வரவேற்கத்தக்க, அமல் படுத்தக்கூடிய அம்சங்களை இணைத்திருப்பதாக தெரிவித்து விட்டார்.குறிப்பாக, விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரங்கள், அதிக அளவு உர மானியம் என்பதை மாற்றி, உணவு மானியம் என்ற பார்வையாக மாற்றப்பட்டிருக்கிறது. 'பூமி திருத்தி உண்' என்ற அவ்வை வாக்குக்கு இணங்க, விவசாயம் முன்னிறுத்தப்படும் இடங்களில், அது காய்கறி அல்லது பழப்பயிரா அல்லது பணப்பயிரா என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் சலுகை பெறும் போது, அவற்றால், விவசாய வளர்ச்சி செழிக்கும் அணுகுமுறை வந்திருக்கிறது.
அதிலும், உணவு பாதுகாப்பு கிட்டங்கிகள், தற்போதைய அளவில், 1,620 லட்சம் டன்கள் சேமிப்பைக் கையாளும் வகையுடன் இருந்தாலும், மாநில அரசுகள் உதவியுடன், தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து, அதிக உணவுக் கிட்டங்கிகள் என்பது, உற்பத்தி பொருட்களை கையாளுவதுடன், அவர்களுக்கு நிதி ஆதாரம் அதிகமாக கிடைக்க ஒரு வாய்ப்பாக அமையும்.தனிநபர் வரி விதிப்பு சலுகைகள் பலரால் பேசப்பட்டு, வரவேற்கத்தக்க அம்சமாக உள்ளது. தனிநபர் வருமான வரி கட்டும் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அது மட்டும் அல்ல. குறைந்தபட்சம், 5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது, இன்றைய சூழ்நிலையில் பல்வேறு சிறிய சிறிய முதலீட்டாளர்கள் உருவாகி, அவர்கள், அரசு வேலைக்கு செல்ல காத்திருக்கும் இளைஞர்களை கவர்ந்து இழுப்பதுடன், எளிதாக அவர்கள், ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் போது, தனிநபர் வரி விதிப்பு வலையில் அவர்கள் விழாத வகையில் செய்தது வரவேற்கத்தக்கது. வீட்டு வசதிக்கான மற்ற சில சலுகைகள், வரி ஏய்ப்பு உத்திகளை தடுக்கலாம்.
போக்குவரத்திற்கு கணிசமான நிதி, கல்வியில், பொறியியல் படிப்பில் திறனறி கல்வி அவசியம் என்ற அணுகுமுறை ஆகியவை, மத்திய நிதி செலவழிக்கும் அணுகுமுறையில் புரிதல் இனி இருக்கும்.
இவற்றிற்கு நிதியை எங்கிருந்து மத்திய அரசு திரட்டும் என்பதற்கான வழிகளை, அடுத்தடுத்த தகவல்களில் அரசு எளிதாக விளக்கும். தவிரவும் மாநில அரசுகளுக்கு தரப்படும் நிதி அளவு, வளர்ந்த மாநிலங்களுக்கு குறைந்து விடும் என்ற அச்சம் மாறியது,
தமிழகத்திற்கு நல்லது. தவிரவும், மொத்த நிதிப் பற்றாக்குறை அளவை, 4 சதவீத அளவில் நிறுத்த முயன்றிருக்கும் செயல் சற்று எதிர்பாராத ஒன்று. மொத்த வளர்ச்சி இந்தப் பாதையில் இருக்கும் என்று எதிர்பார்த்த துறை வல்லுனர்கள், நிதியமைச்சர் சீதாராமனின் மாற்றுப்பாதை பெரிய ஆடம்பர அணுகுமுறை என்று கருதினாலும், மத்திய அரசின், பொருளாதார அணுகுமுறைக்கான காய்களை நகர்த்தும் புதிய கோணத்தை, பட்ஜெட் பிரதிபலித்திருக்கிறது என்று கூறலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!