Advertisement

ஆளுங்கட்சிக்குள் உள்ளடி தி.மு.க., வெற்றிக்கொடி!

தைப்பூச திருவிழா கொடியேற்றத்துக்காக, சித்ராவும், மித்ராவும் மருதமலை கோவிலுக்கு சென்றிருந்தனர். சுவாமி தரிசனம் முடித்து விட்டு, காந்திபுரம் வருவதற்காக டவுன் பஸ்சில் அமர்ந்தனர்.

'சில்லரையா கொடுங்க; ஒரு டிக்கெட், 25 ரூபாய்' என, கண்டக்டர் சொன்னதை கேட்டு, பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.''என்னப்பா இது, ஒரு டிக்கெட் ரூ.25ன்னா, நாலு பேர் கொண்ட குடும்பம் மருதமலைக்கு பஸ்சுல வந்துட்டு போறதுக்கே, 200 ரூபாய் செலவழிக்கணும் போலிருக்கே,'' என, பேச்சை துவக்கினாள் சித்ரா.

''ஆமாக்கா, குடும்ப கஷ்டத்தை முறையிடுறதுக்கு கோவிலுக்கு வர்றாங்க. கோவிலுக்கு வர்றதுக்கே ஏழை எளிய ஜனங்க நெறைய்யா செலவழிக்க வேண்டியிருக்கு. காந்திபுரத்துல இருந்து மருதமலைக்கு, 43 பஸ் இயக்குறாங்க. இது, 33 பஸ் சொகுசாம்; 10 பஸ் சாதாரண ரகம். சொகுசு பஸ்சுல போறதுக்கு, ரூ.25 வாங்குறாங்க; சாதாரண பஸ்சுல போறதுக்கு ரூ.15 வாங்குறாங்க. சாதாரண பஸ் வர்றதேயில்லை. தைப்பூசத்துக்கு ஸ்பெஷல் பஸ் இயக்குவாங்க. அப்ப, என்னென்ன அநியாயம் செய்யப் போறாங்களோ,''''மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை, நம்மூர் மினிஸ்டர் செய்றாரு. இப்படி, கஷ்டப்படுத்துற விஷயம் அவருக்கு தெரியாதா என்ன?''

''அக்கா, ஏகப்பட்ட விஷயம் அவரது காதுக்கு போறதில்லை. அதிகாரிகளே அமுக்கிடுறாங்க. உதாரணத்துக்கு, குனியமுத்துார் பக்கத்துல புட்டுவிக்கி ரோடு திரும்புற இடத்தில், ரயில்வே ஸ்டேஷன் டூ கல்லாபுரம் போற அரசு பஸ்சை, காந்திபுரம் - அரிசிபாளையம் போற, '12ஏ' தனியார் பஸ், 'ஓவர்டேக்' செஞ்சு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்துச்சு.

''அரசு பஸ் டிரைவர், கண்டக்டர், பொதுமக்கள் கூடி நின்று தட்டிக்கேட்டதால், தனியார் பஸ்காரங்களை, போலீசார் 'வார்ன்' செஞ்சு அனுப்புனாங்க. கொஞ்ச நேரத்துல, டிரைவரது மொபைல் போனுக்கு தனியார் பஸ் கம்பெனி ஊழியர்களிடம் இருந்து அழைப்பு வந்திருக்கு.

''சகட்டுமேனிக்கு மிரட்டிட்டு, வேற டிப்போவுக்கு 'டிரான்ஸ்பர்' செய்றோமா, இல்லையான்னு பாருன்னு சொல்லியிருக்காங்க. ரோட்டுல நடந்த பிரச்னை, உக்கடம்-2 டிப்போ அதிகாரி, ஜி.எம்.,க்கு தெரியுமாம். ஆனா, தனியார் பஸ்காரங்க மிரட்டுன மாதிரியே, அரசு பஸ் டிரைவரை, அன்னுார் டிப்போவுக்கு மாத்திட்டாங்களாம். அதிகாரிகளிடம் விசாரிச்சா, 'பப்ளிக் கம்ப்ளைன்ட்' வந்துச்சுன்னு, பொத்தாம் பொதுவா சொல்றாங்களாம். என்ன புகாருன்னு சொல்ல மாட்டேங்கிறாங்களாம்,''


''தனியார் பஸ்காரங்க சொல்றதுக்கு உயரதிகாரிங்க தலையாட்டுனா, கொடுக்கல், வாங்கல் இல்லாமலா இருக்கும். அப்புறம் ஏன், அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்துல ஓடாது,'' என, பொங்கினாள் மித்ரா.

''இதுமட்டுமல்ல மித்து, பழிவாங்குற நடவடிக்கையில ஈடுபடுறாங்களாம். சூலுார் டிப்போல பணிபுரியுற கண்டக்டர் ஒருத்தரோட அப்பா சமீபத்தில் இறந்துட்டாரு. அவரும் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்தானாம். காரியம் முடிச்சிட்டு வர்றதா, அந்த கண்டக்டர் லீவு லெட்டர் கொடுத்துருக்காரு. ஆனா, டிப்போ அதிகாரிகள், அத்தனை நாளுக்கும் 'ஆப்சென்ட்' போட்டு, சம்பளத்தை 'கட்' பண்ணிட்டாங்க. ஆளுக்கு தகுந்த மாதிரி பாரபட்சம் காட்டுறதும், பழிவாங்குறதும் அதிகமாகிட்டதா, போக்குவரத்து கழக ஊழியர்கள் புலம்பிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன்,''

''அதெல்லாம் சரி, கார்ப்பரேஷன்ல கோஷ்டி பஞ்சாயத்து அதிகமாகிடுச்சாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.


''ஆமாப்பா, இன்ஜினியரிங் செக் ஷன்ல ரெண்டு குரூப்பா செயல்படுறாங்க. 'ஸ்மார்ட் சிட்டி' வேலை பார்க்குறது ஒரு குரூப்; ரெகுலர் வேலை பார்க்குறது ஒரு குரூப். கார்ப்பரேஷனுக்கு மொத்தமாவே நாலு நிர்வாக பொறியாளர் பணியிடம்தான் ஒதுக்கியிருக்காங்க. நாலு போஸ்ட்டிங்கிற்கும் அதிகாரிகள் இருக்கும்போது, 'குப்பை' இன்ஜினியருக்கு எப்படி கூடுதல் பொறுப்பு கொடுக்கலாம்னு, ஞானமுள்ள இன்ஜினியரு போர்க்கொடி துாக்கியிருக்காரு. கோர்ட் வரை போயி, ஆர்டர் வாங்கிட்டு வந்திருக்காரு.


''இருந்தாலும், கார்ப்பரேஷன் தரப்புல, அசைஞ்சு கொடுக்காம இருக்காங்க. மினிஸ்டரிடம் முறையிட்டுருக்காங்க. அவரும், வேலையை எல்லா அதிகாரிகளுக்கும் பிரிச்சுக் கொடுங்கன்னு அறிவுரை சொல்லிட்டு போயிருக்காரு,''அப்போது, மருதமலை அடிவாரத்துல இருந்து பஸ் புறப்பட்டது. ஆளுங்கட்சி கொடி கட்டிய கார் ஒன்று, பஸ்சை கடந்து சென்றது. அதைபார்த்ததும், ''மினிஸ்டர் தலைமையில கார்ப்பரேஷன்ல மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம், பி.ஆர்.ஜி., 'பொடி' வச்சு பேசிட்டு போனாராமே...'' என, நோண்டினாள் மித்ரா

.''எப்படிப்பா... இதெல்லாம் ஒனக்கு தெரிஞ்சது,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷன் சார்புல, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனத்துக்காக பிரத்யேகமா ஒரு ஆபீஸ் கட்டுறதுக்கு 'பிளான்' போட்டுருக்காங்க. உக்கடம் பெரிய குளக்கரைக்கு எதிரே கட்டலாம்னு பேசியிருக்காங்க. பக்கத்துலதான், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., வீடு இருக்கு.


''விஷயத்தை புரிஞ்சுக்கிட்ட, எம்.எல்.ஏ., - பி.ஆர்.ஜி., டவுன்ஹால்ல இருக்குற கார்ப்பரேஷன் ஆபீசு ரொம்ப பழமை வாய்ந்ததுங்க; இங்கதான் கார்ப்பரேஷன் வேலை நடக்கணும் வேற இடத்துல கார்ப்பரேஷன் வேலை நடக்குற மாதிரி பண்ணிடாதீங்கன்னு சொல்லியிருக்காரு. எம்.எல்.ஏ., 'பொடி' வச்சு பேசுனதை புரிஞ்சுக்கிட்ட அதிகாரிங்க, 'கப்-சிப்'னு ஒதுங்கிட்டாங்க. விஷயம் புரியாத அதிகாரிங்க, 'ஸ்மார்ட் சிட்டி'க்கு தனியா ஆபீஸ் கட்டப்போறோம்னு, சொல்லிட்டு இருக்காங்க,''



''அதாவது, ஊரை சுத்தம் செய்ற துப்புரவு தொழிலாளர்களது குடும்பத்தை காலி செய்ய வச்சிட்டு, அதிகாரிகளுக்காக, 'குளுகுளு' ஆபீஸ் ரூம் கட்டப்போறாங்க; இதுக்குதான், சென்ட்ரல் கவர்மென்ட் பணம் ஒதுக்குச்சா... இதெல்லாம் நியாயமா படலையா,'' என, கொந்தளித்தாள் மித்ரா.


''மித்து, கோபப்படாதே... சில விஷயங்கள் மினிஸ்டருக்கே தெரியாமா நடக்குதுன்னு சொன்னேன்ல,'' என்ற சித்ரா, ''விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்துல, கலெக்டர் கோபப்பட்டாராமே...''

''அதுவா, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை நிர்வாகத்தை பத்தி, ஏகப்பட்ட விவசாயிகள் புகார் சொல்லியிருக்காங்க. அதைப்பத்தி ஏற்கனவே தெரிஞ்சு வச்சிருந்த கலெக்டர், உழவர் சந்தை நிர்வாக அலுவலரை வேறிடத்துக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணச் சொல்லி, வேளாண் இணை இயக்குனருக்கு வாய்மொழியா உத்தரவிட்டிருக்காரு.


இந்த விஷயத்துல அரசியலை நுழைச்சு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு தகவல் சொல்லியிருக்காங்க. அவரோ, நிர்வாக அலுவலரை வேறிடத்துக்கு மாத்துறதுக்கு 'தடா' போட்டிருக்காரு,''

''கண்ணா, உனது விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா,'' என்ற மித்ரா, ''வக்கீல் சங்க தேர்தல்ல, அ.தி.மு.க.,காரங்க தோத்துட்டாங்களாமே,'' என, வம்புக்கு இழுத்தாள்.


''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த வக்கீல் அருள்மொழி போட்டியிட்டாரு. ஏற்கனவே ரெண்டு தடவை தலைவரா இருந்த, அ.தி.மு.க., வக்கீல் பாலகிருஷ்ணனும் போட்டியிட்டாரு. தி.மு.க., தரப்புல ரெண்டு வக்கீல் போட்டியிட்டதால, 100 ஓட்டு வித்தியாசத்துல, அ.தி.மு.க., வக்கீல் ஜெயிருப்பாருன்னு கணக்கு போட்டிருந்தாங்களாம்.


''ஆனா, அ.தி.மு.க., வக்கீல்கள் பலரும், தி.மு.க., வக்கீலுக்கு ஓட்டு போட்டிருக்காங்க. தி.மு.க.,விலும் சிலர் உள்ளடி வேலை பார்த்திருக்காங்க. இருந்தாலும், 100 ஓட்டு வித்தியாசத்துல ஆளுங்கட்சி வக்கீல் தோத்தது, பெருத்த அதிர்ச்சியாம்,''அப்போது, பஸ், லாலி ரோடு சந்திப்பை கடந்து வந்தது.உடனே, ''இந்த இடத்துல பாலம் கட்டப்போறாங்களாம்,'' என்றாள் மித்ரா.


''மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, புதுசா பாலம் கட்டுற திட்டங்களை நிறுத்தி வச்சிருந்தாங்க. இப்ப, 'மெட்ரோ' திட்டத்தை நினைச்சு குழப்பிக்காதீங்க. அந்தந்த துறையை சேர்ந்தவங்க, அவுங்கவுங்க 'டிபார்ட்மென்ட்' வேலையை கவனிங்கன்னு சொல்லிட்டாங்களாம்,''


''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''சிங்காநல்லுார் ஸ்டேஷன் லேடி ஏட்டுவிடம் 'என்கொயரி' நடக்குதாமே,'' என, கிளறினாள்.


''ஆமாப்பா, உனக்கும் தகவல் வந்துருச்சா? ஜே.எம்., 3, கோர்ட்டுல தாக்கலான திருட்டு வழக்கில் கைப்பத்துன நகையை, புகார்தாரரிடம் திருப்பிக் கொடுக்காம, பெற்றுக் கொண்டதாக கையெழுத்து வாங்கி, லேடி ஏட்டு சுருட்டிட்டாங்களாம். இப்படி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை அமுக்கியிருக்காங்களாம்.


''வழக்கு முடியுறவரைக்கும், ஸ்டேஷன்லதான் நகையை வைத்திருக்கணும்னு சொல்லி பலரையும் ஏமாத்தி இருக்காங்க. இது சம்பந்தமா, தனி டீம் விசாரணை நடத்துதாம். முதல்கட்டமாக, துறை ரீதியான நடவடிக்கையா, 'சஸ்பெண்ட்' செஞ்சிருக்காங்க. உண்மையை கண்டுபிடிச்சா, லேடி ஏட்டு மேல கிரிமினல் கேஸ் பதியவும் வாய்ப்பு இருக்காம்,'' என்றாள் சித்ரா.


நுாறடி ரோட்டை கடந்து, காந்திபுரத்துக்கு பஸ் வந்தது.60 அடி உயர பாலத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, இந்த பாலத்துல ஸ்கூட்டர்ல போயி பார்த்தீங்களா, இழுக்குதா,'' என, கிண்டலாக கேட்டாள்.


''ஆமாப்பா, ஒரு நாள் போயி பார்த்தேன். பயமா இல்லை. ஆனா, சில பேரு, 'யூ' டேர்ன் எடுக்குறதுனால சிக்கல் இருக்கு. விபத்து ஏற்படுறதுக்கு முன்னாடி, ஹைவேஸ் அதிகாரிங்க நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்,'' என்ற சித்ரா, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி, ஸ்டாண்டில் இருந்து ஸ்கூட்டரை வெளியே எடுத்தாள்.


அத்தருணத்தில், சிக்னலை கடந்து, கல்வித்துறை ஜீப் சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, குனியமுத்துார் ரோட்டில், பெட்ரோல் பங்க் பக்கத்துல, அரசியல்வாதி ஒருத்தரு, புதுசா கிட்ஸ் பள்ளி ஆரம்பிச்சிருக்காரு. அதே வளாகத்துல, ஐ.ஏ.எஸ்., அகாடமியும் இருக்குதாம். விதிமுறையை மீறி, அனுமதி வழங்கியிருக்குறது, கல்வித்துறை வட்டாரத்துல சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு,'' என்றாள்.


காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை கடந்தபோது, ஓரத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை பார்த்ததும், ''மித்து, அப்பார்ட்மென்ட்டுல 'ரூம்' போடுற ரெண்டு இன்ஸ்.,களை பத்தி, கடந்த வாரம் கேட்டீயே. அது, ஒருத்தரு, சிக்கல்ல மாட்டிகிட்டாரு. மணல் கடத்தல், லாட்டரி விற்பனைன்னு 'கம்ப்ளைன்ட்' கொடுக்கப் போனா...


எங்க மேலேயே கேசு போடுறாங்கன்னு, எஸ்.பி., ஆபீசுல தி.மு.க.,காரங்க புகார் கொடுத்திருக்காங்க. அப்ப, யாருன்னு நீயே புரிஞ்சுக்க...,''

''அப்புறம், வங்கியில அடமானம் வச்சிருக்கற சொத்துக்களை ஜப்தி செய்றதுக்கு, செக்யூரிட்டி ஏஜன்சிகள் மூலமா, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி. ஜி.வி., ரெசிடென்சியில, ஒரு வீட்டுக்குள்ள, 50 பேரு நுழைஞ்சு, அடாவடி செஞ்சிருக்காங்க. போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் போனதும், ஸ்டேஷன்ல இருந்து விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement