dinamalar telegram
Advertisement

நம் மக்கள் தொகை குறையும் சாத்தியம்?

Share

இந்திய மக்கள் தொகை, அடுத்த ஐந்தாண்டுகளில் சில கோடிகள் குறைவதற்கான அறிகுறிகளை, பல சூழல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கடைசி காலத்தில் நம் மக்கள் தொகை, 36 கோடி மட்டுமே. பாரதியார் தன் கவிதையில், '30 கோடி முகமுடையாள்...' என, ஏக இந்திய அன்னையை இறைவியாக காட்டுகிறார்.

ஆனால், சுதந்திர இந்தியாவில், முதல், 35 ஆண்டுகளில் பிறப்பு சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதற்கு அடிப்படை காரணம், கருச்சிதைவு பாதிப்பால் ஏற்படும் மரணம் தவிர்ப்பு; பிறந்த சில நிமிடங்களில் நிகழும் இறப்பு குறைந்தது என்பன போன்ற பல காரணங்களால், குடும்பங்கள் பல்கிப் பெருகின. அந்த சூழ்நிலையில், பெண்கள் ஆரம்பக் கல்வி வசதி கூட பெறாத நிலையும் இருந்தது. சிறுக சிறுக அரசு அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்கள், கல்வி துறையில் மதிய உணவு ஆகியவை, ஓரளவு படித்த இளைஞர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது.

அதற்கு பின் அவர்கள், தங்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் வாழ்க்கை பாதையை தேர்வு செய்யும் போது, அதிக குடும்பங்கள் மற்றும் மக்கள் தொகை இயல்பாக அதிகரித்தது.மேலும், தொற்றுநோய் அல்லது நோய் பாதிப்புகள் அல்லது இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்தன என, பல காரணிகள் உள்ளன. மேலும், தேசிய சராசரி வயது, தற்போது, 60 ஆண்டுகளை தாண்டி விட்டது. இன்றைய நிலையில், 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் மொத்த எண்ணிக்கையில், 40 சதவீதம் உள்ளனர்.

வேறு விதமாகச் சொன்னால், 1950களில் கருத்தடை சாதனங்களை கையாளும் அளவு அதிகம் கிடையாது. அதற்கு அடுத்த, 20 ஆண்டுகளில், பெண்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சரியாக பராமரிக்க மேற்கொண்ட உத்திகளுடன், கவனமாக வாழத் துவங்கிய காலம் வந்தது.ஆனாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு, ஐந்து குழந்தைகள் என்பது குறையவில்லை. பெண் கல்வி என்பது அதிகரிக்காத போது, 1960களில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக, மூன்று முதல், நான்கு குழந்தைகள் என்கிற போது, அது கணிசமாக மக்கள் தொகை அதிகரிக்க உதவியது.

அதைத் தவிர, கர்ப்ப கால மருத்துவ வசதி, அதற்கு அடுத்த சில பாதுகாப்பு ஆகியவற்றை ஓரளவு அறிந்த பெண்கள், 'இரு குழந்தைகள் போதும்' என்று, பின்பற்றினர். கண்டிப்பாக ஆண் குழந்தை தேவை என்ற கருத்தானது, குடும்ப வட்டம் விரிவடைய காரணமானது. ஆக, இன்று நாம், 130 கோடியாக நிற்கிறோம்.கடந்த, 2017 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, சீனாவில் 145 கோடி பேர், இந்தியாவில், 130 கோடி பேர், எஞ்சிய உலக நாடுகளில், 495 கோடி பேர் என்ற புள்ளி விபரம் உள்ளது. அதைப் பார்க்கும் போது, அதிக அளவு சம்பாதிக்கும் எண்ணிக்கை கூடுகிறது போது, இயற்கையாக மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இன்று, மொத்த மக்கள் தொகையில், 30 சதவீதம் வரை, 60 வயது முதல், 65 வயது வரை உள்ளவர்கள் என்பதும் மறு தகவலாகும். அமெரிக்காவின் நிலப் பரப்பைக் கருதும் போது, அங்கிருக்கும் மக்கள் தொகை குறைவு. ஆனால், நம் நிலப்பரப்புப்படி பார்த்தால், 1 கி.மீ., சுற்றளவில், 200க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.ஆகையால், கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் இன்றைய சூழ்நிலையில் உள்ள, 135 கோடி மக்கள் தொகை என்பது, அடுத்த தலைமுறையினருக்கு நம் வளர்ச்சியை அதிகரிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துமா என, பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். முன், 1975ல் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் முக்கியமான சஞ்சய் காந்தி, 'கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அமல்' என்பதை, சமுதாயம் சாடியது வரலாறு.

ஆனால், இன்று மக்கள் தொகை பெருக்கம் என்பதை வரையறை செய்ய வேண்டிய கால கட்டாயம் என்ற கருத்து இருபாலரிடமும் வெளிப்படையாக உள்ளது. தவிரவும், இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்திற்கு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சலுகை பற்றி பரிசீலிக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.மக்கள் தொகை பெருக்கம் பற்றி, 'நிடி ஆயோக்' அமைப்பு பிரதமரிடம் ஒரு விளக்கக் குறிப்பையும் தந்திருக்கிறது. ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்ற பாகுபாடு இதில் வர வாய்ப்பு இல்லை என்பதும், நிடி ஆயோக் கருத்தாகும்.

அப்படி பார்க்கும் போது, நம் வளங்களின் ஆதார அடிப்படையில், ஒரு தேசிய மக்கள் தொகைக்கான அணுகுமுறை தேவை என்ற கருத்தாக்கம் பேசப்படுகிறது. பா.ஜ.,வின் முன்னோடியான, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தும், 'குடும்பத்திற்கு இரு குழந்தைகள்' என்ற நடைமுறை உருவாகும் பட்சத்தில் நமது வளங்கள், அதனால் கிடைக்கும் பயன்கள் எல்லாருக்கும் கிடைக்கும் போது, வாழ்வாதாரம் பெருகும்' என்கிறார்.


கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிக செலவினம் என்ற அணுகுமுறையில், அடுத்த 10 ஆண்டுகளில், தற்போதைய மக்கள் தொகையில், 10 முதல், 15 சதவீதம் வரை மக்கள் தொகை இயல்பாக குறைய சில கொள்கை அணுகுமுறைகள் உருவாக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இந்தக் கருத்து எப்படி அமலாகிறது? அது மக்கள் பார்வையில் எப்படி என்பதும் இனி விவாதமாக வேண்டும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    பொறுங்கள். இன்னும் 30 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 100 கோடியாகக் குறையும். 10ல் 2 தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. 10ல் 6பேர் ஒரு குழந்தை பெறுகிறார்கள். 10ல் 1 தம்பதியினர் சீக்கிரம் விவாக ரத்து செய்து விடுகிறார்கள். மீதமுள்ள தம்பதிகள் குழந்தை பெற விரும்புவதில்லை. இதெல்லாம் தவிர 100ல் 5 பேர் அற்பாயுசு விபத்துகளில் இறக்கிறார்கள். 70 வயதுக்கு மேலானவர்கள் இறக்கத் தொடங்குவார்கள் இப்படியே போனால் 2050ல் நமது மக்கள் தொகை 100 கோடிய்க இருக்கும். பாருங்கள் 2030 லிருநது மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement