அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பயணம் வெற்றி என்பது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பைக் காணும் வகையில் அவரது, 36 மணிநேர பயணம் அமைந்தது.அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் நாட்டில் அடுத்த அதிபர் தேர்தலை சந்திக்கும் காலம் நெருங்கி வருகிறது. ஆகவே, இந்திய மக்களுடன் அவர் நெருங்கியவிதம் அங்குள்ள லட்சக்கணக்கான இந்தியர்களை கவரும் உத்தி என்ற மாயையை இப்பயணம் மாற்றி இருக்கிறது.மனைவி மெலனியாவுடன் எழில் கொஞ்சும் தாஜ்மஹால் அழகை ரசித்த அவர், நிச்சயம் இந்தியாவின் பரந்துபட்ட கலாசார அழகுகளை உணர்ந்திருக்க வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும். ஆமதாபாதில் வந்திறங்கிய அவர், அங்குள்ள மோடேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய கலாசாரத்தை புகழ்ந்தது வித்தியாசமானது.
மிகப் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் என்பதுடன், கிரிக்கெட்டை விட பேஸ்பாலை விரும்பும் அமெரிக்க மனோபாவம் மாறியதின் அடையாளமாக, சச்சின், விராட்கோலியை புகழ்ந்தது, அவர் தலைசிறந்த பிசினஸ்மேன் என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.முழுவதும் கலாசார உடை அணிந்த லட்சக்கணக்கான மக்கள் வரவேற்பு, குஜராத் மண் மணம் அதிகரித்த நிகழ்ச்சிகள் ஆகியவை, அவரை, 'என் இனிய நண்பர் மோடி' என்று குறிப்பிட வைத்தது எனலாம். அதைவிட, புனிதத்துவம் கொண்ட காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமத்தில் டிரம்பும், அவர் குடும்பத்தினரும், பவ்யமாக நடந்த கொண்ட காட்சிகளும், நம் சிறப்புகளை ஏற்றதன் அடையாளம் எனலாம்.
மனிதாபிமான உணர்வு மிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் இந்தியா வந்தார், நம் கருத்துக்கள் அவரை ஈர்த்தன என்றாலும், 'பெரிய அண்ணன்' என்ற அமெரிக்க நடவடிக்கையை, அவரால் ஓரங்கட்ட முடியவில்லை என்பதே அப்போதைய தகவல்கள் காட்டின.இன்று அப்படி என்ன டிரம்ப் மாறிவிட்டார் என்றால், 'நமஸ்தே டிரம்ப்' என்ற வரவேற்பு அணுகுமுறை, இயல்பாக குஜராத் காட்டும் விருந்தோம்பல் ஆகியவற்றுடன், கொளுத்தும் வெயிலில் ஸ்டேடிய விழாவில் நான்கு மணி நேரம் எவ்வித முணுமுணுப்பும் இல்லாமல் இருந்த மக்கள் கூட்டம் ஆகியவை, அவரது சிந்தனைகளை இந்தியாவின் பக்கம் நெருக்கம் கொள்ள வைத்து இருந்திருக்கலாம்.
அமெரிக்க - சீன உறவை அதிகம் நேசித்த அமெரிக்க அரசியல் சித்தாந்தம், இனி இந்தியாவின் அதீத ஜனநாயக உணர்வுகளை புரிந்து கொள்ள இப்பயணம் உணர்த்தி இருக்கும். இந்தியா தொடர்ந்து 'ஏழை நாடு' அல்லது 'வளர்ச்சிப்பாதையில் இன்னமும் பல படிகளை தாண்ட வேண்டிய நாடு' என்ற கருத்து மாறி இருப்பதை, இதுவரை அமெரிக்க அதிபர்கள் சுட்டிக்காட்ட விரும்பாததையும் நினைத்துப் பார்க்கலாம்.
ஏனெனில் டிரம்ப் வருகைக்கு முன் நடந்த விவாதங்கள் பலவற்றில், இந்திய - அமெரிக்க வர்த்தக மேம்பாடுகள் அதிகரிக்காது என்ற கருத்து பேசப்பட்டது. ஆனால், அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு தர முன்வராத சூழ்நிலையை மாற்றி, ராணுவத் தளவாட உத்திகளை தர முன்வந்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் போட முன்வந்தது முக்கியமானது. இன்றுள்ள அமெரிக்க நவீன போர் ஹெலிகாப்டர்கள், அவற்றின் ஆயுத வீச்சு ஆகியவை, உலகின் எந்த முன்னணி நாடுகளும் கொண்டிருக்கவில்லை ஆனால், சில முக்கிய உலக உத்திகளில், பசிபிக் கடற்பரப்பு ஆதிக்கம் குறித்த எதிர்கால வரம்புகள் உட்பட பல விஷயங்களில் இந்தியாவின் நேசக்கரம், அமெரிக்க ஜனநாயக உணர்வுக்கு உதவலாம். அதனால் அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு, சில முக்கிய ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு தர எளிதாக அமைந்தது.
ஆகவே, இரு தலைவர்களும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம், பல்வேறு சந்திப்புகளில் பேசியிருப்பது, பொருளாதார, மற்றும் இருநாட்டு நல்லுறவை அர்த்தமுள்ள, 'நட்புறவாக' மாற்ற நடந்த முயற்சியாகும்.பிரதமர் மோடியின் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றம் போன்ற சில விஷயங்களை அவர் பேசாதது, இதுவரை வெளிவந்த யூகச்செய்திகளுக்கு அளித்த முற்றுப்புள்ளி.அதனால், அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி, இதுவரை இறக்குமதி செய்ததைவிட, 10 மடங்கு அதிகரிக்கும். 'ஒபெக்' என்ற எண்ணெய் வள நாடுகள், சில சமயங்களில் மத உணர்வுடன் மாறும் போது, அவற்றை மட்டும் நாம் நம்பி இருப்பது அல்லது அவர்கள் தங்கள் உற்பத்தியை இஷ்டப்படி குறைப்பது, அதனால் ஏற்படும் விலை ஏற்றம் என்ற பல பிரச்னைகளில் இருந்து விடுபட எடுக்கப்பட்ட உத்தி.
இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் தேவையில், 10 சதவீதத்திற்கு மேல் அமெரிக்காவில் இருந்து வரும்.இதற்கான விலை மற்றும் அமெரிக்கா கொண்டிருக்கும் தொழில்நுட்ப நடைமுறைகளை சட்ட அடிப்படையில் எளிதாக்கவும் டிரம்ப் அளித்த உறுதி, அமெரிக்க - இந்திய உறவில் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறது. நமக்கு எப்போதும் சிறந்த நட்பு நாடு சோவியத் யூனியன் என்றபோதும், வளர்ந்து வரும் கட்டமைப்பு வசதிகளில், அதன் தாக்கம் நம் வளர்ச்சி வேகத்திற்கு அதிக உதவியைத் தராது என்ற நிலையில், இந்த நேச உணர்வு வரவேற்கத்தக்கது.
டிரம்ப் காட்டியநேசக்கரம்!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!