நாடு மாறியாச்சா...விடை தாருங்கள்!
நமது தமிழகமும் சரி, மற்ற பல மாநிலங்களும், எந்த அளவு வளர்ந்திருக்கின்றன; தேசிய அளவில் வளர்ச்சி என்பது எது... என்ற கேள்வி, இப்போது எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.
பசி, பட்டினி இன்றி மக்கள் உள்ளனரா; உடுத்த ஆடை, இருக்க இடம் எது என்பது மட்டும் அல்ல, அவர்கள் நோயின்றி இருக்கின்றனரா; அவர்களின் கல்வித்தகுதியும் அதிகரித்து, அதனால் அவர்கள் தங்களை சுற்றி நடப்பதை, மற்றவர் துணையின்றி சமாளிக்க முடியுமா என்பதை இணைக்க வேண்டும் என்ற கருத்து, நிச்சயம் அவசியமானது என்ற பார்வையும் சேர்ந்திருக்கிறது.
இப்போது உணவுகளில் பலவகை அல்லது வளர்ந்த நகரங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞியர், அலைபேசி பயன்படுத்தும் விதம், அதனால் எழும் சர்ச்சைகள் என்ற புதிய பரிமாணங்களில் பிரச்னைகள் வரும் போது, அடிப்படையாக, வளர்ச்சி என்பது என்ன என்ற கேள்விக்கு, விடை கூற முடியாமல் போய் விடலாம்.
உலகத்தின் பெரிய நாடுகளில், பல விதங்களில் ஏழ்மை பாதித்த சமுதாயம் என்பதை, அதில் ஏற்படும் வன்முறைகள், பணிகளில் உலகத்தரம் இல்லாத நிலை என்பது ஒருபுறம் மதிப்பிட வேண்டும். அதில், அடிப்படைகள் கொண்ட, தொழிலாளர் நல விதிகளுடன், உரிய வாழ்வாதாரம் கொண்ட கட்டமைப்பு கொண்ட சுற்றுச் சூழல் தேவை என்ற கருத்தும் இணைகிறது. பிறக்கும் குழந்தைகள், சாவு, பள்ளி இறுதிப்படிப்பு கூட முடிக்க முடியாத, இடைநிற்றல் பாதிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் தலைக்கு, 140 லிட்டர் தண்ணீர் கூட நாள் ஒன்றுக்கு கிடைக்காத சூழல், சமையல் காஸ் கிடைப்பதில் தடங்கலற்ற நிலை என்று பல அம்சங்கள் முக்கிய அடிப்படைகளாக கருதி, அதை வளர்ச்சியின் அளவுகோலாக கருதுவதும் இந்த அம்சங்களுடன் சேர்கிறது.
இவை எல்லாவற்றையும் கணக்கெடுப்பு மூலம் கண்டறியலாம் என்றால், இப்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதை, அரசியல் கட்சிகள் எதிர்ப்பதைப் பார்க்கும் போது, எந்த வித கணக்கெடுப்புக்கும் மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
ஏனென்றால், கணக்கெடுப்பில் முகவரி, தந்தை, தாயார் பெயர், சில அடிப்படை அங்க அடையாளங்கள், சமயங்களில் கல்வித் தகுதி போன்ற பல அம்சம் தேவை.பொதுவாக, வருமான வரித் தாக்கலுக்கு சில தகவல்களை தருவது அல்லது சில நிறுவனங்களில் சாதாரணத் தொழிலாளர்களாக சேரும் போது தரப்படும் தகவல்கள் கூட, தனிப்பட்ட உரிமைக்கு பாதிப்பாகலாம் என நினைக்கலாம்.
எல்லாவற்றையும் தாண்டி, அடிப்படையாக, மொபைல் எண் என்பது, ஒருவரை நிரந்தரமாக அடையாளப்படுத்தும் சாதனமாக மாறி வருகிறது. அதிலும், இரண்டு அல்லது மூன்று மொபைல் வைத்திருக்கும் சமுதாயத்தினர், பலரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டால், அவர்களைப் பற்றிய தகவல்களை, போலீசார் கண்டறிய உதவும் நடைமுறைகள் பலதரப்பட்டது.
ஆகவே, மிகப்பரந்த நாட்டில், பல்வேறு மாநிலங்களில், எளிதாக வாழ்க்கையை துவக்கும் வசதி இருக்கும் போது, வளர்ச்சி என்பது, எந்த அளவு கோலில் இருக்க வேண்டும் என்பதே இன்றைய கேள்வி. அதிக கல்வி வாய்ப்புகள், ஒரு இளைஞரை, மேலும் மேலும் தரம் உயர்த்தும் காரணியாகிறது. அதில், வறுமை அல்லது மற்ற வாழ்வின் குறைகள் மாற, அதற்கேற்ற உயர்வுக்கு நகர வேண்டிய கட்டாயத்தில், இந்திய இளைய சமுதாயம் நிற்கிறது.
ஆகவே, தேர்தல் கால அரசியல் பிரசாரம் அல்லது அதில் ஏற்படும் முடிவுகளை காணக் காத்திருக்கும் ஆர்வம் அல்லது அடுத்ததாக பிரதிநிதிகள் ஆகி, அரசியலில் தொடர்ந்து கோலோச்சும் முடிவுகள் ஆகியவை மாறி வருகின்றன. பஞ்சாயத்து, உள்ளாட்சித் தேர்தல்களில் கூட, முதுகலை வரை பட்டப்படிப்பு படித்த பலர், மக்கள் பிரதிநிதிகளாகும் காலமாக மாறி வருகிறது.அப்படி இருக்கும் போது, இந்த புதிய பிரதிநிதிகள், மாறி வரும் வளர்ச்சித் தேவைகளை உணர்ந்து, அதற்கேற்ற பொருளாதார அணுகுமுறைகளுடன் செயல்பட வேண்டிய நிலை, அடுத்த ஐந்தாண்டுகளில் வரும்.
சீனா வளர்ந்திருக்கிறது; ஆனால் ஜனநாயகம் கிடையாது. அதன் வளர்ச்சியை இப்போது வந்துள்ள, 'கொரோனா வைரஸ்' பாதிப்பு மிரட்டுகிறது. அதன் எதிரொலி, அதன் அதிக வீச்சு கொண்ட சந்தைப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது. அதனால் அது உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற பீதி ஏற்பட்டிருக்கிறது.
அப்படி இருக்கும் போது, அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிலும், அமைதி, வளர்ச்சி, மற்றும் நோய் பாதிப்பற்ற சமுதாயத்திற்கான, அதிகரித்த அடையாளங்கள் இருக்கிறதா என்பதை, இனி, மாநில, மத்திய அரசுகள் முன்னிறுத்த வேண்டும். கட்சி அரசியல் அல்லது திரும்பத்திரும்ப கவர்ச்சி வாக்குறுதிகள் ஆகியவை, தேர்தல் உத்திகளாக வரும் பட்சத்தில், மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை, எளிதில் கண்டறிய முடியாது.
ஆகவே, மாறி வரும் சூழ்நிலைகள், இந்தியாவை எப்படி முன்னோக்கி நகர்த்தும் என்பதை, உடனே மதிப்பிட முடியாது!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!