Advertisement

அட அநியாயமே! 'டாய்லெட்'டிலுமா?

வெளியூரில் இருந்து வந்திருந்த உறவினர்களை, ரயில்வே ஸ்டேஷனில் சித்ராவும், மித்ராவும் வரவேற்று, வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன் வைக்கப்பட்டிருந்த, தி.மு.க., பிளக்ஸ் பேனரை அகற்றிக் கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, பிளக்ஸ் பேனர் வைக்க மாட்டோம்னு, ஐகோர்ட்டுல தி.மு.க., உறுதி சொல்லியிருக்கு.
அதை மீறி, அக்கட்சியை சேர்ந்த சட்ட பிரிவு வக்கீல்கள் சிலரு, ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, கோர்ட் நுழைவாயிலில் பிளக்ஸ் வச்சிருந்தாங்க. இது சம்பந்தமா, போட்டோவுடன் செய்தி பிரசுரமானதும், கட்சி மேலிடத்துக்கு, தகவல் அனுப்பிட்டாங்களாம். உடனடியா, பிளக்ஸ் பேனரை அகற்றிச் சொல்லி உத்தரவு வந்திருக்கு.
அதனால, எடுத்துக்கிட்டு இருக்காங்க,'' என, விளக்கினாள்.''ஆளுங்கட்சி வக்கீல்கள் ரெண்டு பிரிவா செயல்படுறாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா, உண்மைதான். ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடுறது சம்பந்தமா, எஸ்.பி., ஆபீஸ் எதிரே இருக்கிற ஓட்டல்ல, ஆலோசனை நடத்தியிருக்காங்க. வக்கீல்கள் சங்க தேர்தல்ல ஆளுங்கட்சிக்காரங்க தோத்தது சம்பந்தமா, ரெண்டு பிரிவினரும் ஒருமையில் திட்டிக்கிட்டாங்களாம்.
அதே மாதிரி, கோர்ட் வளாகத்துக்குள்ள விழா நடத்தியபோதும், கருத்து மோதல் ஏற்பட்டிருக்கு. ஆளுங்கட்சி வக்கீல்களுக்குள் இருக்குற கோஷ்டி பிரச்னையை தலைமை கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்களாம்,''''ஓ... அப்படியா,'' என்றாள் மித்து. அப்போது, மாநகராட்சி குப்பை லாரி, அவர்களது ஸ்கூட்டரை கடந்து சென்றது.அதை பார்த்த மித்ரா, ''கார்ப்பரேஷனுக்கு புதுசா லேடி அதிகாரி வரப்போறதா கேள்விப்பட்டேனே,'' என, கிளறினாள்.''உண்மைதாம்ப்பா, ஆர்.டி.ஓ.,வா இருந்த லேடி, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வி.ஐ.பி.,யை அந்த லேடி அதிகாரி சந்திச்சு பேசியிருக்காங்க. அவருக்கு பதவி உயர்வு கொடுத்து, 'துணை'யான பொறுப்பு கொடுப்பாங்கன்னு, கார்ப்பரேஷன் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''அப்போது, மித்ரா மொபைல் போனுக்கு, தோழி 'மதுரா'விடம் இருந்து அழைப்பு வந்தது. 'பிறகு கூப்பிடுகிறேன்' என கூறி, இணைப்பை துண்டித்த மித்ரா,
''காவல்துறையிலும் ரெண்டு அதிகாரிகளுக்குள் 'லடாய்' இருக்காம். ஒருத்தரு சிட்டியை கவனிக்கிறாரு; இன்னொருத்தரு ரூரலை பார்த்துக்கிறாரு. ரெண்டு பேரு பதவியும் சம அந்தஸ்துங்கிறதுனால, சிட்டிக்காரரு, ரூரலுக்கு போறதுக்கு ஆசைப்படுறாரு. அதனால, ரூரல் சம்பந்தப்பட்ட விஷயங்களை, கசிய விட்டுட்டு இருக்காங்களாம்,''''அதெல்லாம் சரி, உளவுத்துறையை பலப்படுத்தப் போறதா கேள்விப்பட்டேனே,''''அதுவா, இப்ப, கொஞ்ச நாளா, சிட்டிக்குள்ள ஏகப்பட்ட போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. உண்மையான நிலவரத்தை கண்டறிஞ்சு தகவல் சொல்றதுக்கு, உளவுத்துறையை பலப்படுத்த உத்தரவு போட்டிருக்காங்க. அதனால, ஏற்கனவே உளவுத்துறையில பணியாற்றி, வெவ்வேறு துறையில இருக்கறவங்களை, மீண்டும் பழைய இடத்துக்கு கொண்டு வரப்போறாங்களாம்,''''ஆனா, எஸ்.ஐ., ஒருத்தரை, முகாம் அலுவலகத்துக்கு மாத்துனதும், பணிவிடை செய்யச் சொல்றதும் புகைச்சலா இருக்குதாமே'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்த சித்ரா, அனைவருக்கும் ஆரஞ்சு ஜூஸ், பரிமாறினாள்.அதை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''அக்கா, ஆளுங்கட்சி வி.ஐ.பி., கிடா விருந்து வச்சாராமே,'' என, நோண்டினாள்.''மித்து, வேடபட்டி பக்கத்துல இருக்குற குருடம்பாளையத்துல கருப்பராயன் கோவில் இருக்கு.
ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு தம்பி உறவுமுறையில, 'நிழல்' போல் இருக்குற ஒருத்தரு, கிடா வெட்டியிருக்காரு. உறவுக்காரங்க மட்டுமில்லாம, அரசாங்க அதிகாரிங்க, கட்சிக்காரங்க, கலந்துக்கிட்டாங்க. 1,500 பேருக்கு விருந்து வச்சாங்களாம்,'' என்றாள்.''கோவில் விழான்னா, விருந்து இல்லாம இருக்குமா? கோடை காலம் ஆரம்பிக்க போகுது. இந்த நேரம் பார்த்து, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் 'ஸ்டிரைக்' பண்றாங்களே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''அவுங்க தொழிலுக்கு பிரச்னை; போராட்டம் செஞ்சா, அரசு பார்வை விழும்னு நெனைக்கிறாங்க. ஆனா, ஆளுங்கட்சிக்காரங்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து, பூலுவபட்டி பேரூராட்சி, வடிவேலம்பாளையம் கிராமத்துல இருக்குற டேங்க்ல இருந்து, செங்கல் சூளைக்கு தண்ணீர் திருடி விக்குறாங்களாம்,''''வீட்டுக்கு தண்ணீ வராம ஒவ்வொரு ஏரியாவிலும் தவிக்கிறாங்க. இவுங்க, திருட்டுத்தனமா விக்கிறாங்களா,'' என, ஆவேசப்பட்ட மித்ரா, ''கோவில்பாளையத்துல இருந்து கீரணத்தம் வரைக்கும், குரும்பபாளையத்துல இருந்து காளப்பட்டி நால் ரோடு வரைக்கும், 10 தாபா இருக்குது; விடியற்காலை அஞ்சு மணிக்கு ஓபன் பண்றாங்க; நடுராத்திரி வரைக்கும் மது விற்பனை அமர்க்களமா நடக்குது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு வேண்டப்பட்டவங்கதான் நடத்துறாங்களாம். ஸ்டேஷன், மதுவிலக்கு பிரிவுக்கு மட்டுமில்லாம, அவருக்கும் மாசம் தவறாம மாமூல் கொடுக்குறாங்களாம்,'' என்றாள்.அப்போது, வீட்டுக்கு வந்திருந்த நாளிதழ்களை புரட்டிப் பார்த்த சித்ரா, ''மித்து, துாய்மை பாரதம் திட்டத்துல தனி நபர் இல்ல கழிப்பிடம் கட்டிக் கொடுக்கச் சொல்லி, சென்ட்ரல் கவர்மென்ட் சொல்லுது. 'ஜோக்கர்' படத்துல வர்ற மாதிரி, நம்மூர்ல இருக்குற அதிகாரிங்க, ஏகப்பட்ட ஊழல் செஞ்சிருக்காங்களாம். டாய்லெட் கட்டாமலேயே பணத்தை சுருட்டிட்டாங்களாம்,'' என்றாள்.''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், வெள்ளமடை ஊராட்சியில, காளிபாளையம், சாமநாயக்கன்பாளையம், செட்டிபாளையம் ஏரியாவுல, 2015-16ல, 500 டாய்லெட் கட்டுனதா, பணம் எடுத்திருக்காங்க. ஆனா, 100 கூட கட்டலையாம். 7,000 ரூபாய் மானியம் வழங்குறதுக்கு, 2,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருக்காங்களாம்; நெறைய பேரு, பணம் கெடைக்காம, அஞ்சு வருஷமா காத்துட்டு இருக்காங்களாம். ஆனா, அரசாங்க பதிவேட்டுல டாய்லெட் கட்டிக் கொடுத்துட்டதா இருக்காம்,''''மித்து, கார்ப்பரேஷன் லிமிட்டுலயும் இதே மாதிரி ஏகப்பட்ட முறைகேடு நடக்குதுன்னு சொல்றாங்க. ஒரே வாரத்துக்குள்ள, 100 டாய்லெட் கட்டுனதாச் சொல்லி, லட்சக்கணக்குல பணம் அமுக்கிட்டாங்களாம்,''''கார்ப்பரேஷன்ல சில அதிகாரிங்க இப்படிதான் இருக்காங்க,'' என்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீசுல நடந்த மீட்டிங்ல பாரஸ்ட் டிபார்ட்மென்ட்காரங்க ரொம்பவே நெளிஞ்சாங்களாமே,'' என, கிளறினாள்.''அதுவா, ஒவ்வொரு மாசமும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும். போன மாசம் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள், தோட்டத்துக்குள் யானை புகுந்துடுச்சுன்னு வனத்துறைக்கு போன்ல தகவல் சொன்னா, வண்டிக்கு டீசல் இல்லைன்னு சொல்றாங்கன்னு சொன்னதும், அரங்கமே சிரிப்பலைல அதிர்ந்தது. வனத்துறையை சேர்ந்தவங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.''உடனே, கலெக்டர் குறுக்கிட்டு, எல்லாத்துக்கும் பிரச்னை இருக்கறது வாஸ்தவம்தான். இப்படி, வெளிப்படையா சொல்லக்கூடாதுன்னு சொல்லி சமாளிச்சிட்டார்,''''அக்கா, இந்த மாசக்கடைசியில சி.எம்., வர்றதா சொல்றாங்களே, உண்மையா?,''''ஆமா மித்து, கல்யாண ஏற்பாடு தடபுடலா நடக்குது. அதுக்குள்ள, 'ஸ்மார்ட்' குளங்களை தயார்படுத்தச் சொல்லியிருக்காங்க. ஒரே நாள்ல ரெண்டு விழாவையும் நடத்தி, அசத்தப்போறாங்களாம்,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.''எனக்கு வனத்துறை மேட்டரும், கோவை ரூரல் போலீசின் ரெ(பெ)ய்டு' மேட்டரும் தெரியும். அடுத்த வாரம் விவரமா சொல்றேன்...'' என்றபடி, நகர் வலம் செல்ல, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள் மித்ரா.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement