dinamalar telegram
Advertisement

வதந்தி அபாயம்... முற்றுப்புள்ளி வருமா!

Share

தலைநகர் டில்லி கலவரம் இன்று பரவலாகப் பேசப்பட்டாலும், அதன் பின்னணி பற்றிய யூகத்தகவல்கள் அதிகம் வருகின்றன.தலைநகர் டில்லி என்றாலும், அதன் சட்டம் - ஒழுங்கைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, அந்த யூனியன் பிரதேசத்தை ஆளும் 'ஆம் ஆத்மி' கட்சியிடம் இல்லை.

அதனால், அக்கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், கலவரம் பாதித்த பகுதிகளை அன்றைய தினமே பார்க்க முடியாத நிலை, வேறு எந்த மாநிலத்திலும் வராது. பாவம் அரவிந்த் கெஜ்ரிவால் கூட, தீர்வைத் தரும் கருத்தை சொல்ல முடியாத சூழ்நிலை, அப்பிரச்னை மதவட்டத்திற்குள் இருப்பதின் அடையாளமாகும்.டில்லியில் கலவரம் பார்லிமென்ட் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் வராததும், வடகிழக்கு டில்லியில் வதந்தி எளிதாக பரவக் காரணமாக இருந்ததையும் இன்று மீடியாக்கள் அலசுகின்றன.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஏற்பட்ட அசம்பாவிதங்களை மக்கள் மறந்தபின், இன்று அதை, வேறுவிதமாக நினைவுப்படுத்த இச்சம்பவம் எளிதாக உதவியிருக்கிறது.ஏனெனில், இப்பகுதியில் உள்ள பஜன்புரா வர்த்தகர்கள் தாங்களாகவே சொந்தப் பணத்தைத் திரட்டி, ஒன்று சேர்ந்து சில ஆயிரங்களை, மீட்புப் பணிக்குத் தந்த செயல், அவர்கள் இயல்பு வாழ்க்கையை தேட முயன்ற சில முன்னேற்பாட்டின் அடையாளமாகும். ஆனால் இந்த மோசமான வன்முறையில், பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் வர்த்தகர்கள், உ.பி.,யில் உள்ள மீரட்டிற்கு, தங்கள் கார்களில் சென்றதாகக் கூறப்படுவது, அச்சமா அல்லது இன்னமும் ஒன்றிவாழ இயலாமல், வேறு இடத்திற்கு இடம்பெயரும் எண்ணமா என, சிந்திக்க வேண்டி உள்ளது.

ஆனால், அதை யாரும் விளக்கவில்லை.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய தனியாருடைய பள்ளியைக் காப்பாற்றிய பலரது செயல், வன்முறைக்கு எதிருணர்வு கொண்ட பலர் இருப்பதைக் காட்டுகிறது. அதேசமயம் போலீசார் பாரபட்சமாக நடந்தனரா என்பதை, சுப்ரீம் கோர்ட் விதித்த சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தால், உண்மை வெளிவரும்.பார்லிமென்டில் டில்லி விவகாரம் வெளிக்காட்டும் தகவல், அதிக மெஜாரிட்டியுடன் அங்கு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த சில நாட்களில், இந்த சம்பவம் என்பதும், தேர்தல் பிராசத்தில், இதற்கான முன்னறிகுறி இல்லாதது, இதை இயக்கிய மூளை மற்றும் பணபலம் ஆகிவற்றை கொண்டிருந்த சக்தியை போலீசார் கண்டறியாதது ஏன் என்பதை, அடுத்த கட்ட விசாரணை விளக்கலாம்.முந்தைய மும்பை குண்டு வீச்சு பேரழிவு, நாட்டின் வர்த்தக தலைநகரை அழிக்க நடந்த சம்பவத்தைக் கண்ட மக்கள் அஞ்சவில்லை என நிரூபித்தனர்.

ஆனால், இன்று நாட்டின் பாதுகாப்பு என்பதைமுன்னிறுத்திய மோடி அரசுக்கு, தலைநகர் சம்பவம், ஒரு எச்சரிக்கை எனலாம்.சோஷியல் மீடியாக்களில் வதந்தி பரப்பி கைதான சிலரது திஹார் சிறை விசாரணைத் தகவல்களை, அப்படியே எடுத்துக் கணக்கிட்டால், அதிலும், அடுத்த குழப்பமே மிஞ்சும். ஏனெனில், அச்சு ஊடகங்கள் தவிர மற்றவை, சுய கட்டுப்பாடு என்ற போர்வையைக் கொண்டவை. அவற்றை இயக்கும் பலரும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்போது, அது வன்முறையைப் பரப்பாது என்பதற்கு அத்தாட்சி எதும் கிடையாது. மாநிலங்களில் ஆட்சி புரியும் பலகட்சிகள், நாடு குறித்த ஒட்டுமொத்த பிரச்னைகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை என்கிறபோது, இன்று நமது குடியுரிமை என்பது, எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை அடிப்படை சர்ச்சையாக்க, டில்லி கலவரம், பலருக்கு ஆதாரமாக அமையலாம். அதன் அடையாளமே அதிக வெற்றி பெற்ற சிறிய கட்சியான, 'ஆம் ஆத்மி'க்கும் லோக்சபாவில் மிகப்பெரும் பலத்துடன் நிற்கும், பா.ஜ.,விற்கும் சுமையாக இது நிற்கிறது.

மக்களை மத அடிப்படையில் பிரிக்க முயன்ற பிரிட்டிஷ் ஆட்சி, அன்றைய கலவரங்களை சாதகமாக்கிய காலம் மாறிவிட்டது. தவிரவும், வாட்ஸ் அப் மற்றும் டுவிட்டர், இனி செய்தி தரும் களனாகிறது அல்லது சில வீடியோக்கள் மக்கள் மனதில் ஆதாரமாகிறது எனில் இது அபாயத்தின் அறிகுறியாகும்.டில்லி போலீசார், 900க்கும் மேற்பட்டவர்களை விசாரிப்பது, மேலும் பலர் மீது வழக்கு என்றாலும், இவை கோர்ட் விசாரணையில் எத்தனை பிறழ்சாட்சியங்களைக் கொண்டிருக்கும் என்பதை, யூகிக்க முடியாது. அதே சமயம், தங்களது வீடுகளில், கற்குவியல், அமிலபாட்டில்கள் வைத்திருந்த நபருக்கு ஆஜராகாமல் மறுக்க வக்கீல்கள் சிலர் முன்வருவரா என்பதை இன்று கூற முடியாது. அப்படி வருவோரை, 'வாட்ஸ் அப் குழு' பாராட்ட முன்வந்தால் அது டில்லி காட்டும் திருப்பம் எனலாம்.போலீசார் - வக்கீல் மோதல், போலீசாரைத் தாக்க முயலுவதை நியாயப்படுத்துவது, அதிக அளவு கள்ளத்துப்பாக்கி பயன் படுத்தும் ரவுடிகள் பெருக்கம்,

இவைகள் குறித்த பரிசீலனையை மாநில, மத்திய உள்துறைகள் பரிசீலித்து ஒரு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்.அதைவிட பல ஆண்டுகளாக காத்திருக்கும் போலீஸ்துறை சீர்திருத்தம் தேவை. அதை, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னெடுத்தால், வதந்தி பரப்பும் நாச சக்திகளின் விஷம பரப்புரைகளை தடுக்கலாம். அதற்குள், 'தகவல் தொடர்பு' பரிமாணங்களும், ஜனநாயக நெறிமுறைகளின் வரம்பிற்குள் வர சாத்தியமாகலாம்.தலையங்கம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement