dinamalar telegram
Advertisement

'கொரோனா' மிரட்டல்...!

Share

மார்ச் முதல் வாரத்தில், இந்தியாவின் தலைநகர் டில்லி கலவரம், மற்ற சம்பவங்களைப் பின்னிறுத்தியது என்றால், அதற்கடுத்ததாக, 'கொரோனா' பீதி பல தரப்பையும் அச்சப்பட வைத்துள்ளது.அதிலும் கர்நாடகம், தெலுங்கானா மாநிலங்கள் அச்சத்திற்கு அதிகம் ஆளாகி உள்ளன. இந்த அச்சம் அதிகரிக்கும் சூழ்நிலையில், முதலில் பள்ளிகளில் இது குறித்த பீதி வருவது நியாயமானது.இருமல், காய்ச்சல், சளி என்பது, 12 வயது வரை உள்ள சிறுவர் - சிறுமியரை சாதாரணமாக பாதிக்கும்.


அதை அடிப்படையாக வைத்து, 'கொரோனா' பாதிப்பு என்று முடிவு கட்டவும் முடியாது. ஏனெனில், 'கொரோனா' வைரஸ் என்பதை அறுதியிட இருகட்ட ரத்த மாதிரி சோதனைகள் தேவை. அதற்குப்பின், பாதிக்கப்பட்டவர்களை தனி வார்டில் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். அவற்றுக்கான ஏற்பாடுகளை, தனியார் மருத்துவமனைகள் முழு ஆதரவு காட்டி நிறைவேற்றுமா என்பது தனிக் கேள்வி.அரசு மருத்துவமனைகள், அதில் சிறப்பு வார்டுகள், அவற்றின் மீதான கண்காணிப்பு இனி அதிகரிக்கும்.


இது தவிர, இந்த வைரசை கட்டுப்படுத்த, தனியாக சிறப்பு மருந்தும் கிடையாது. அப்படியிருக்கும் போது பள்ளி இறுதி வகுப்பில் படிப்பவர்கள், கல்வி குறித்த அதிக எச்சரிக்கைகளை தருவதற்கு பதிலாக, இதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாய சூழல் வந்துள்ளது.துபாயில் இருந்து பெங்களூரு வந்து, பின் ஆந்திர தலைநகரான ஐதராபாத் வந்த நபர், இந்த வைரசைக் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. கர்நாடகம் வந்த இந்த அச்சம், தமிழகத்திற்கு பரவினாலும் அல்லது ஹாங்காங்கில் இருந்து யாராவது இதை இறக்குமதி செய்து, அவர்கள் வாழும் பகுதியில் பரப்பக் காரணமாக மாறினாலும், அது பாதிப்பை ஏற்படுத்தலாம்.


'கோவிட்- - 19' என்ற மருத்துவ பெயர் கொண்ட இதைக் கையாள, கர்நாடகாவும், தெலுங்கானாவும் முழுவீச்சில் இறங்கியிருக்கின்றன. தமிழகமும் அதிக நபர்கள் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது, ஒரு முன்னோடி திட்டமாகும்.தற்போது, பிளஸ் 1 தேர்வு எழுதும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், இம்மாதக் கடைசி வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளுடன் கண்காணிக்கப்படுவது தேவையாகிறது.


பொதுவாக தமிழகத்தில், பங்குனி, சித்திரை மாதங்களில், கோவில் திருவிழாக்கள் அதிகமாக இருக்கும். ஆங்கில மாதமான ஏப்ரல் என்பதால், அதற்குள் இப்பீதி முடிவடைந்து விடலாம்; அது நல்லதே.இவை எல்லாவற்றையும் விட இந்த அச்சம், சுற்றுலாப் பயணம் அல்லது பொழுதுபோக்கு அம்சங்களை அதிகமாகப் பாதிக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, இதுவரை, 3,000 பேரை இழந்ததுடன், அதனால் பொருளாதார இழப்பை அதிகம் சந்தித்திருக்கிறது.


அதன் எதிரொலி அமெரிக்காவிலும் ஏற்பட்டதால், வர்த்தக வீழ்ச்சியை எதிர்பார்த்து எடுத்த சில நடவடிக்கைகள், மற்ற நாடுகளிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன.வைரஸ் அச்சம் என்பது, பொருட்கள் சப்ளையை பாதிக்க வாய்ப்பில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக வரலாம். ஏனெனில், இச்சூழ்நிலையில், 'ஸ்லோ டவுன்' என்ற மந்தம் தானாகவே தொற்றிக் கொள்ளும்.அப்படி எனில், ஏற்கனவே, 'ஸ்லோ டவுன்' சூழ்நிலையில் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கையாளும் விதத்தை, உன்னிப்பாக கவனிக்க வேண்டியதை, இதன் அபாயம் காட்டுகிறது.


பெரிய நாடு, பெடரல் தத்துவ நெறிமுறைகள் ஆகியவற்றுடன், இடம்பெயரும் அதிக மக்கள் காரணமாக, பாதிப்பு எப்படி இருக்கும் என்ற பன்முகப் பார்வையை, 'கொரோனா' வைரஸ் ஏற்படுத்தி விட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement