dinamalar telegram
Advertisement

அரசியல் திருப்பத்தின் அறிகுறியா?

Share

தமிழகத்தில் அடுத்த அரசியல் முக்கியத்துவ நிகழ்ச்சி என்பது ராஜ்யசபா தேர்தல். இதில் இரு தமிழக முக்கிய கட்சிகளான, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மொத்தமுள்ள ஆறு சீட்டுகளை கைப்பற்றும் சூழ்நிலை எளிதாக உருவாகி இருக்கிறது.பொதுவாக அதிக வேட்பாளர்கள் மோத, இதில் வழி இல்லை.

இரு தரப்பும், தங்கள் வேட்பாளர்களை ஓரளவு இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப களமிறக்கியது, நல்ல அறிகுறி. ஆகவே ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய தேவையான, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு எளிதாக கிடைக்கும். தேர்தல் என்பது தேவையற்றதாகி, போட்டியிடும் அனைவரும், எம்.பி.,க்கள் ஆகலாம்.இது, ஆறு ஆண்டு கால பதவி. அடுத்த இரண்டு ஆண்டுகளில், லோக்சபா தேர்தல் வரும் போது, இந்த ஆறு பேருக்கும் அந்தந்த கட்சிகளில் போட்டியிட, அவசியமற்ற சூழ்நிலை வரும்.அ.தி.மு.க.,வில், முதல்வர் இ.பி.எஸ்., அரசியல் வேகம் சற்று அதிகரித்ததின் அறிகுறிகள், இதில் தெரிகிறது.

துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான, கே.பி.முனுசாமி இன்றைய களம் காணும் நபர்; எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்; பட்டதாரி. முன்னாள் லோக்சபா துணை சபாநாயகரும், கரூர் லோக்சபா தொகுதியில் தோற்றவருமான தம்பி துரைக்கு, இத்தடவை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் மத்திய அரசை விமர்சிப்பதில், கூடுதல் சுபாவம் கொண்டவர். ஆனால் இன்று அவர், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, இப்போட்டியில் களமிறங்கி, ராஜ்யசபா எம்.பி.,யாகிறார். ராஜ்யசபாவில் இத்தடவை, பா.ஜ., கட்சிக்கு அதிக எம்.பி.,க்கள் பலம் ஏற்படும். அதிலும், ம.பி.,யில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு, அக்கட்சிக்கு அதிக வாய்ப்புகளைத் தரும்.


ஆகவே அக்கட்சி புதிதாக சில மாநிலங்களில் தேர்வாகும் சிலருக்கு, அமைச்சர் பதவியை தரும் போது, தமிழகத்தில் இருந்து தேர்வாகும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது, இன்றைய சூழ்நிலையில் சந்தேகம்.ஆகவே, அமைச்சர் பதவியை அடைய, முதல்வர் இ.பி.எஸ்., உட்பட பலர் ஆதரவை, தம்பிதுரை பெற்று, அது உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை சென்றடைய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., பதவியை அடையும் போது, அமைச்சரானாலும் வியப்பதற்கு இல்லை.

அவர் மூப்பனார் வாரிசு, மத்திய அமைச்சராக இருந்தவர் என்பதுடன், ஊழல் புகாரில் சிக்காத தலைவராகவும் இருக்கிறார்.அரசியலில் சில முடிவுகள் அதிரடியாகவும், சில முடிவுகள் எதிர்பாராத திருப்பமாகவும் அமைவதற்கு அடையாளமாக, இம்மூவர் தேர்வு அமைந்திருக்கிறது. அத்துடன், மாநிலத் திட்டக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட, சி.பொன்னையன், அக்கட்சியில் நீண்ட அனுபவம் கொண்டவர். சமீபகால நடவடிக்கைகளில் முதல்வர் இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வின் தொண்டர் பலம் சரிந்து விடாமல் கட்டிக்காக்கும் அறிகுறிகளில், இவையும் சேர்ந்துள்ளன எனலாம்.முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., வேட்பாளர்களில், திருச்சி சிவா, இரண்டாம் முறையாக தொடர்ச்சியாக களம் இறக்கப்பட்டது, அக்கட்சி குடும்ப வட்டத்தைத் தாண்டி, மற்ற சிலரையும் சார்ந்திருக்கும் அறிகுறியாகும். ஏற்கனவே கனிமொழி லோக்சபா, எம்.பி.,யாக இருப்பதால், அவருக்கு கட்சியின் அடுத்த பெரிய பொறுப்பு என்ன என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.


லோக்சபா தேர்தல் வரும் போது, அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றாலும், ஒருக்கால் தப்பித் தவறி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் வந்தால், அவர் அன்று எம்.பி.,யாகி, அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது தனிக் கேள்வி. தவிரவும் அக்கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் மறைவுக்குப் பின், அப்பதவிக்கு யார் நியமிக்கப்படுவர் என்பதை, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் முடிவு செய்தாக வேண்டும். ஏற்கனவே, இளைஞர் அணி தலைவராக உதயநிதி மற்றும் கனிமொழி என்று குடும்ப பிரதிநிதிகள் கொண்ட முக்கியத்துவம் இருக்கிறது.அப்படியிருக்க, அடுத்த பொதுச் செயலர் தேர்வு, உதயநிதியின், வருங்கால அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமையலாம். அதற்கான அறிகுறிகள் அதிகம் உள்ளன. அதில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோர் ஏதாவது மாற்றுக் கருத்து

கொண்டுஉள்ளனரா என்பது லேசில் வெளிவராது.அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய மற்ற இரு, தி.மு.க., வேட்பாளர்கள், எம்.பி.,க்களாக தேர்வாவது உறுதி. காங்கிரஸ் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேரும், இத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து, கூட்டணி தர்மத்தை காத்தாக வேண்டும். அடுத்து வரும் ராஜ்யசபா இடம் தங்களுக்கு கிடைக்கும் என்று, காங்கிரஸ் காத்திருக்கலாம். அதே சமயம், அக்கட்சியின் அகில இந்திய தலைமை பலவீனம், இத்தேர்தலில், தே.மு.தி.க போல மனவருத்தத்துடன் இருக்க வேண்டிய அவல நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement