dinamalar telegram
Advertisement

சிந்தியா முடிவால் கொள்கை என்ன ஆனது?

Share

இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் கொள்கைப் பிடிப்பு என்பது, எந்த அளவுக்கு இருக்கிறது; அதன் தலைவர்கள், கொள்கைகளில் தோய்ந்து செயல்படுபவர்களாக உள்ளனரா என்ற மதிப்பீடு அர்த்தமற்றது.

அரசியலில் நிகழும் மாற்றங்கள், கால சூழ்நிலைகளை அனுசரித்தவை. நாட்டின் இரு பெரிய அரசியல் கட்சிகளில், பா.ஜ., செல்வாக்கு பெற்றதும், காங்கிரஸ் தொடர்ந்து வீழ்வதும், கொள்கைப் பிடிப்பை கைவிடும் தலைவர்கள் முடிவை, ஏன் அக்கட்சியால் தடுக்க முடியவில்லை அல்லது ஏன் அப்படி ஒரு சூழ்நிலை எழுந்தது என்ற கேள்வி எழுகிறது.இது, மாநிலக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

கட்சி தாவல் தடைச் சட்டம் என்பது, கட்சி தாவும் தலைவர்களை தடுக்கும், அதிக விதிகளைக் கொண்டிருக்கவில்லை. அதே சமயம், கட்சி தாவிய சிலர், தங்கள், எம்.எல்.ஏ., அல்லது, எம்.பி., பதவியை பொருட்படுத்தாது, கட்சி தாவும் போது, சம்பந்தப்பட்ட சபாநாயகர்களால் பதவி பறிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அடுத்து வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். அப்படியிருக்கும் போது, அடுத்த கட்சிகளுக்கு தாவக்கூடிய போக்கு கொண்ட அரசியல் தலைவர்கள், தேர்தல் களத்தை காணும் மனோபலம், பணபலம் அல்லது தாங்கள் அணி சேரும் தலைவர்

பலம் போன்ற பல காரணிகளை, முதலில் அலசி முடிவு எடுக்கின்றனர். இவை எதற்காக என்றால், ம.பி.,யில் உள்ள காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க முற்பட்ட, 'மகாராஜா' ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தன், 15 ஆண்டு காங்., அரசியல் வாழ்வை ஒதுக்கி, பா.ஜ.,வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மாறுவதற்கான முன்னேற்பாடாக, அவர், 'பாதை மாறிய' செயலைக் கருதலாம்.ஆனால், அவர் பாட்டி, ராஜ மாதா விஜயராஜே சிந்தியா இருந்த, பா.ஜ., காலம் வேறு. அன்று அக்கட்சி, அகில இந்திய அளவில் ஆட்சியைப் பிடிப்பது என்பது, அக்கட்சிக்கு எதிர்காலக் கனவாக இருந்தது.

ம.பி.,யில், பா.ஜ., முன்பே ஆட்சியைப் பிடித்ததும், ராஜஸ்தானில் சிந்தியாவின் அத்தை, வசுந்தரா, பா.ஜ., முதல்வராக கோலோச்சியதும் வேறு விஷயம். அக்குடும்பம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் அமைப்புகளுடன் நெருங்கிய குடும்பம் என்பதும் உண்மை.

பொதுவாக, காங்கிரஸ் மற்றும், பா.ஜ., கட்சிகள் இடையே, கொள்கை வித்தியாசம் என்று பார்த்தால், காங்கிரஸ் ஏற்ற, 'சோஷலிசத்தை' இவர்கள், 'காந்திய சோஷலிசமாக' ஏற்றனர். அதே சமயம், இன்றும் நேரு, இந்திரா என்று, தொடர் குடும்ப வட்டமாக, மேலிடத் தலைமையை காங்கிரஸ் வைத்திருப்பதுடன், உள்கட்சித் தேர்தல் என்பதை அமல்படுத்தவில்லை. மாறாக, கட்சித் தேர்தல் என்பதை, தொடர் நடவடிக்கையாக கொண்டிருக்கிறது, பா.ஜ., அதில், ஆர்.எஸ்.எஸ்., மனோபாவம் இருப்பவர்கள் அதிக முன்னுரிமை பெறுவது, அக்கட்சியின் அடிப்படைகளில் ஒன்று. 'அடிப்படை கட்சிக் கொள்கையை' விட்டு, பலரும் விலகாதிருக்கும் போக்குக்கு, அது காரணம் எனலாம்.

அப்படிப் பார்க்கும் போது, இன்று, பா.ஜ.,வில் சேர்ந்தது, 'அடிப்படைக் கொள்கையை' ஏற்று, இடைக்காலத்தில் இருந்த அரசியல் மாற்றத்தை, 'இருண்ட காலமாக' சிந்தியா பார்க்கிறார் போலும். மேலும் காங்கிரஸ் கொள்கைத் தேக்கத்தையும், இளைஞர்களை முன்னிறுத்தும் கட்சியாக இல்லாததையும், அவர் சாடுகிறார்.

இனி, சிந்தியா மத்திய அமைச்சராக, அதிக நாட்கள் ஆகாது. ஆனால், அவர் தலைமையை ஏற்ற, 22, எம்.எல்.ஏ.,க்களை, அம்மாநில சபாநாயகர், 'தகுதி நீக்கம்' செய்தாலும், வியப்பதற்கு இல்லை. அதே சமயம் அங்குள்ள, முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, வீழ்ச்சிக்கு எத்தனை நாள் ஆகும் என்பதை, அடுத்தடுத்த நடவடிக்கைகள் தெரியப்படுத்தும். 'சபையில் ஓட்டு எடுப்பு நடத்தி, பலப்பரீட்சை தேவை' என்று, முதல்வர் கமல்நாத் வைத்த கோரிக்கை, சட்டத்திற்கு ஏற்றது.

ஏனெனில், சிந்தியாவுக்கு ஆதரவளித்த, எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய ராஜினாமாவை, சபாநாயகரிடம் அளிக்கவில்லை என்பது, அக்கோரிக்கைக்கு பலமளிக்கும்.அப்படியிருக்கும் போது, தன் மெஜாரிட்டியை நிரூபிக்க, முதல்வர் கமல்நாத் அவசரப்படாமல், மைனாரிட்டியாக இருந்து, சபையைக் கூட்டாமல், முடிந்தவரை முதல்வராக இருக்கலாம்.

அதே சமயம், ம.பி.,யில் அதிக, எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட, பா.ஜ., தன் ஆட்சியை அமைக்கும் போது, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை முன்னிறுத்தாமல், வேறு ஒருவரை முதல்வராக்கலாம். பிரதமராக மோடி வரும் போது, அவர் அக்கட்சியின், பல மூத்த தலைவர்களை தாண்டி வந்தார். இன்று அவர், தன் அசுர வேக உழைப்பால், முன்னிலையில் நிற்கிறார். அந்த மாதிரி முடிவுகளை, பா.ஜ., இங்கு எடுக்கும் போது, அந்த நபர், எதிர்காலத்தில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை விட, செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகலாம்.

காங்கிரசில் அடிப்படை கொள்கைகள் இல்லாததும், இளைய தலைவர்களை முன்னிறுத்த தவறியதும், ராகுல் செல்லும் திசையே கட்சி என்ற குழப்பம் மாறாததும், கட்சியில் பலரை, சோனியா தலைமை ஓரங்கட்டியதையும், இன்று, சிந்தியா எடுத்த முடிவுகளை வைத்து அலசப்பட்டால், 'அரசியல்' எதிர்காலத்தில் அதிக துாய்மை பெற உதவும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement