Advertisement

துாக்கம் போச்சு!

'கமல்நாத்தை காலி பண்ணிட்டாங்க; அடுத்து என்னைத் தான் குறி வைப்பாங்க. இப்போதே தயாராகி விட வேண்டியது தான்' என, கலக்கத்துடன் கூறுகிறார், ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அசோக் கெலாட்.
ராஜஸ்தானுக்கும், மத்திய பிரதேசத்துக்கும் ஒரே நேரத்தில் தான், 2018 இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இரண்டு மாநிலங்களிலுமே, மிக குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில் தான், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 'இந்த இரண்டு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு, பா.ஜ., ஆட்சி அமைக்கும்' என, அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது மத்திய பிரசேத்தில் அது, 90 சதவீதம் நடந்து விட்டது. முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவை, தங்கள் பக்கம் இழுத்து, கமல்நாத்தை கவிழ்த்து விட்டது, பா.ஜ., மேலிடம். அடுத்த குறி, ராஜஸ்தானுக்கு தான். இங்கும், அசோக் கெலாட்டுடன், முதல்வர் பதவிக்காக, சச்சின் பைலட் மல்லுக்கட்டினார். ஆனால், கெலாட்டுக்கு முதல்வர் பதவியை தாரை வார்த்தது, காங்., மேலிடம்.இதனால், அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட்டை, பா.ஜ., மேலிடம் எந்த நேரத்திலும் வளைக்கும் என பேச்சு அடிபடுகிறது. இதனால், 'சாப்பிடவும் பிடிக்கவில்லை; துாக்கமும் இல்லை. எந்த நேரத்திலும் பதவி பறி போய் விடும் போலிருக்கிறதே' என, கண்ணீர் வடிக்கிறார் அசோக் கெலாட்.---
திடீர் ஆர்வம் ஏன்?

'நம் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கூட தெரியாத விஷயத்தை, நாம் தெரிந்து கொள்வேமே என்ற ஆர்வத்தின் காரணமாக, இப்படி அவர் கேட்டிருக்கலாம்; அதை பெரிய விஷயமாக்க வேண்டாம்' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
மஹாராஷ்டிராவில், பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்து விட்டார். சமீபத்தில் அவர், உ.பி., மாநிலம் அயோத்திக்கு சென்றார். அதற்கு முன்னதாக, உத்தவ் தாக்கரேக்கு அயோத்தியில் போதிய ஏற்பாடு மற்றும் வசதிகளை செய்து தரும்படி, அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு பேசினார். 'உத்தவுக்கு செய்யாமல், வேறு யாருக்கு செய்யப் போகிறோம்; அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; அசத்தி விடுகிறோம்' என, கூறியுள்ளார் யோகி ஆதித்யநாத். மேலும், 'பா.ஜ., கூட்டணியிலிருந்து, உத்தவ் ஏன் வெளியேறினார் என்பது, யாருக்குமே தெரியாத ரகசியமாக இருக்கிறது. முதல்வர் பதவி கிடைக்காததால் வெளியேறினார் என்ற காரணம், நம்புவது போல் இல்லை. உண்மையான காரணத்தை எனக்கு மட்டும் சொல்லுங்களேன்' என, துாண்டில் போட்டுள்ளார் ஆதித்யநாத். சஞ்சய் ராவத்தோ, 'இவர் எதற்கு, இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என தெரியவில்லையே' என, குழப்பத்துடன் காணப்படுகிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement