'எச்சரிக்கை மணி!'
கடந்த மூன்று வாரங்களாக நம் நாடு சந்திக்கிற, 'கொரோனா' நோய் தொற்று, முற்றிலும் அகலும் காலம், விரைவில் வரலாம்.சீனாவைப் போல, நம் நாடு கொண்டுள்ள மக்கள் தொகை பெருக்கம், அந்த நாட்டிற்கு கொரோனா ஏற்படுத்திய அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை, தற்போது துளிர் விடுகிறது.ஒரு வார காலத்திற்குள், இரு முறை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பு, நம் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் முயற்சி வரலாம்.இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க, கை கழுவ சொன்ன விதம், கூட்டமாய் இருப்பதை தவிர்க்க, 'மால்'கள், கோவில்கள் அடைப்பு ஆகியவை, மக்கள் மனதில் எளிதாக அடைந்திருக்கிறது.
ஆனால், மூன்று வார காலத்திற்கு தனிமை காப்பது, பலரது மாத வருவாய் வழி அடைப்பதை ஏற்படுத்தலாம். மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மாத ஊதியம் தடையின்றி கிடைக்க, நிதியமைச்சர் அறிவித்த தகவல் அமலாகும்.வருமான வரி தாக்கல் தேதி, ஜி.எஸ்.டி., குறித்த சில முடிவுகளையும், மத்திய அரசு தள்ளி வைத்த விதம் வரி கட்டுபவர்கள், தொழில் துறையினரை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்திருக்கும்.ஆனாலும், அடுத்தடுத்து மத்திய அரசு என்ன தான் அறிவித்தாலும், அதற்கேற்ப மாநில அரசுகள், தங்கள் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப, சலுகை அறிவிப்புகளை அறிவித்தால் தான் பயன் தரும்.அந்த விஷயத்தில் தமிழக அரசின் தொடர் அறிவிப்புகள், கடை நிலை ஊழியர்கள், கைகளில் பணம் வர உதவும். குறிப்பாக, கட்டட கட்டுமான பணியில் உள்ள பல கடைநிலை ஊழியர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.கட்டுமான தொழிலில் உள்ள முனைவோர், உணவகங்கள் மற்றும் சில குறு தொழில் உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை தர வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.
வருமானம் என்பதே இல்லாத இந்த கால கட்டத்தில், இச்செலவுகளுக்கு சுமை என்றாலும், மனிதாபிமானம் என்ற அடிப்படையில் அவர்கள் முன் வரலாம்.இந்த விஷயத்தில், அமெரிக்காவை ஒப்பிடுவது தவறு. இத்தாலியை ஒப்பிட்டால், அங்குள்ள மொத்த மக்கள் தொகையான, ஆறு கோடி மக்களை விட, நம் தமிழகத்தில், அதிகம் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.கொரோனா அதிக தாக்கம் செலுத்தும் இந்திய மாவட்டங்களில், சென்னை, ஈரோடு, காஞ்சி ஆகியவை அடங்கும்.இந்த மூன்று மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு, கல்வி வசதிகள் கருதி, அதிக மக்கள் வாழ்கின்றனர்.தமிழகத்தின் எட்டு கோடி மக்கள் தொகையில், இந்த மூன்று மாவட்டங்களில் இரண்டு கோடி பேர் வசிக்கின்றனர்.இதில், சென்னை, காஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் மார்ச் மாத சம்பளம் கிடைக்கலாம். டி.வி.எஸ்., மற்றும் முருகப்பா குழுமம் போன்றவை, இந்த விஷயத்தில் மிக தாராளமாக நடந்துள்ளன; அதேபோல, எலக்ட்ரானிக், பிரின்ட் மீடியா நிர்வாகங்களும் உள்ளன.ஆனால், சிறு தொழில்கள் இந்த விஷயத்தில் சிரமப்படாமல் இருக்க, மாநில அரசின், 3,800 கோடி ரூபாய் அனுமதி, வங்கிகளில் மாதாந்திர தவணை பிடிப்பு தேதிகளை ஒத்தி வைத்த அறிவிப்பு, சிரமங்களை குறைக்கும்.நம் மக்களின் உயிரிழப்பை தவிர்க்கும் டாக்டர்கள், நர்ஸ், பணியாளர்கள், மற்ற சிலருக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம் உபரியாக தமிழக அரசு வழங்கியது, சிறப்பானது. 'மோடியின் கை தட்டல்' அறிவிப்பை, அடுத்து ஏற்பட்ட நல்ல முடிவு. அத்துடன், இந்த நோய்த் தொற்றை கண்டறிய, புனே தனியார் நிறுவனம், எளிய, 'கிட்' அமைப்பை தயாரித்து விட்டது. தவிரவும், மலேரியாவுக்கு தரப்படும் மாத்திரையுடன், சில மருந்துகளை தந்து குணப்படுத்த டாக்டர்கள் முன் வந்திருப்பது, நம் சிறந்த மனிதாபிமான கலாசாரத்தின் அறிகுறி.ஆனால், 70 வயதை கடந்து, இதய நோய் பாதிப்பு அல்லது சிறுநீரக நோய்க் கூறுகள் உள்ளவர்களுக்கு காய்ச்சல் அல்லது சளித் தொந்தரவு வரும் பட்சத்தில், இந்த நோய்க்கூறு அறிகுறி வந்தால், எளிதில் காப்பாற்றுவது சிரமம். அவர்களை மிகவும் தனிமைப்படுத்துதலும், உச்ச கட்ட பாதிப்பில் கொண்டு போய் விடலாம்.கடந்த ஒரு மாத கால எச்சரிக்கையுடன், அதன் பாதிப்புகள் வரும் போது, இன்னும் இரண்டாவது வாரத்தில் படிப்படியாக குறையலாம். அதுவரை, எச்சரிக்கை மணி அடிப்பது ஓயவே ஓயாது!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!